சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 26 February 2026

நட்பு தமிழ் வட்டம் மதுரை இணைய வழிக்கூட்டம்

 மதுரை நட்பு தமிழ் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற 261 ​​ஆவது இணையவழி கூட்டம் நிறுவனத் தலைவர் புலவர் நா நா ஆறுமுகம் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

கவிஞர் பொன் நாஅவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய "கொலைவாளினை எடடா" என்ற அமுத பாடலை பெண்ணாடம்  நிறைமதி நீலமேகம் அருமையாகப் பண்ணிசைத்து பாடினார். பொருளாளர் வழக்கறிஞர் மு. ஆசைத்தம்பி இணைப்புரை வழங்கினார்.

 பாவலர் சுப முருகானந்தம் இன்றைய தலைப்பு பற்றியும் சிறப்புரையாற்றுகின்ற பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து அறிமுக உரையாற்றினார் .. 


உலகமொழிகளில் தூய்மை இயக்கங்கள்" என்ற தலைப்பில் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.   


பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள் எழுதிய உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள் மற்றும்  முனைவர் டாக்டர் சு. நரேந்திரன் அவர்கள் எழுதியஅறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்என்ற இரு அரிய நூல்களை மேற்கோள்காட்டி தனது உரையை துவங்கினார். 

25 நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வளரக்கூடிய செம்மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கான அடிப்படைக் காரணம் தொல்காப்பியர்   அமைத்துத்தந்த இலக்கண அடிப்படையும், தொடர் இயக்கங்களும் தான் காரணம் என்பதை வரலாற்று ரீதியாக எடுத்துரைத்தார். 

மொழிக் கலப்பு எவ்வாறெல்லாம் மொழிகளின் போக்கை மாற்றி விடுகின்றன என்பதற்கு உதாரணமாக, இதர திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை பிறமொழி கலப்பினால் சிதைந்து போனதை விளக்கினார் .. 

கலப்பிலிருந்து தமிழைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்ட இயக்கங்களை விவரித்த அவர் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுவதற்கு அதிக தமிழ் தகுதி படைத்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரமாக புலவர் செந்தலை கௌதமன் அவர்கள் எழுதியது பேச வைத்த பெரியார் என்ற நூலை குறிப்பிட்டார் .


1938இல் சென்னை மாகாண முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்கிற ஆணை பிறப்பித்த போது, ​​அதை எதிர்த்து கிளர்ந்து எழுந்து இயக்கங்கள் நடத்தியது தந்தை பெரியார் தலைமையிலான மாபெரும் தமிழ் இயக்கங்கள். 

அந்த வெம்மை தாங்காமல் 1939இல் காங்கிரஸ் பதவியை துறக்க நேரிட்டது. அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபு அவர்கள் 21. 2. 1940 அன்று ஹிந்தி திணிப்பு ஆணையை ரத்து செய்து இனி இந்த திணிக்கப்பட மாட்டாது. என்ற உத்தரவாதத்தை அளித்தார். துரதர்ஷவசமாக அவர் பெயரால் இருந்த மதுரை அரசு எர்ஸ்கின் மருத்துவமனை என்பது பின்னாளில் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மதுரை ராஜாஜி மருத்துவமனை பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தி மொழி திணிப்பை தடுத்த எர்ஸ்கின் அவர்களின் பெயர் நீக்கி, இந்தி திணிப்பை கொண்டு வந்த திரு ராஜாஜி பெயரால் மருத்துவமனை பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தார். 


 மொழிகளிலே தூய்மை இயக்கங்கள் என்றால் அதன் , மொழிகளின் மரபு, பெருமை சீர்குலைக்கப்படுவதை தடுக்கிறது என்ற பொருள். 

மொழிகளிலே திரிபு கலப்பு தோன்றுவதை தடுத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கோடு மொழி ஆர்வலர்கள் நடத்துகின்ற இயக்கங்கள் தனை உலகெங்கும் காண முடிகிறது. 


உதாரணமாக ஐரோப்பாவில் நடந்த மொழி தூய்மை இயக்கங்கள் பற்றி காணலாம்..


ஒரு மொழிக்குள் வேறு மொழிச்சொல் வருவது என்பது வெறும் சொல்லாக வருவதில்லை, அவை இனத்தின் மரபணுவை மாற்றும் விஷக்கிருமிகள் என்று பண்பாட்டு விஞ்ஞானி பெரியார் கூறியதாக தனது தமிழாற்றுப்படையிலே கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிட்டு இருப்பார்கள். 


கால்டுவெல் அவர்கள் தமிழ் மொழியில் உள்ள பிற மொழிக் கலப்புகளைப் பற்றி ஆய்வு செய்து சங்க கால இலக்கியங்களை நோக்கிப் பின்னோக்கிச் செல்லச் செல்ல மொழி கலப்பு என்பது குறைந்து கொண்டே இருக்கும் என்கிறார். 

சங்க கால இலக்கியத்தில் இரண்டு சதவீதம், பிற மொழி சொற்கள் உண்டு,திருக்குறளில் மூன்று சதவீதம், சிலப்பதிகாரம் மணிமேகலையிலே ஆறு சதவீதம், வில்லிபுத்தூரார் மகாபாரதம் கம்பராமாயணத்திலே 20 சதவீதம் தொடங்கி, தல புராணங்கள் மற்றும் திருப்புகழிலே 60 இல் 70% பிறமொழிக் கலவை இருப்பதைக் கண்டறிந்துள்ளது. தமிழறிஞர்கள் போராடியதனுடைய விளைவு பிறமொழிக் கலப்பு நிறுத்தப்பட்டது என்றார். 

யுனைடெட் கிங்டம் என்று அழைக்கப்படும் பிரிட்டன் இங்கிலாந்து, அயர்லாந்து ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு. அங்கு அவரவர்க்கென்று தனி மொழிகள் இருந்து, அவற்றின் மீது திணிக்கப்பட்ட பிற மொழி திணிப்புகளை எதிர்த்து நடத்திய போராட்டங்களை எடுத்துரைத்தார். 

இங்கு தனித்தமிழ் இயக்கங்கள் துவங்கப்பட்ட காலத்தில் அதை கடுமையாக விமர்சித்தவர்கள் உண்டு. 

ஆனால் பிற மொழி திணிப்பு என்பது தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு தான் அதன் பலன் நமக்குத் தெரிகிறது. 

ஆங்கில மொழி பிற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தியதன் விளைவாக அழிந்த மொழிகள், அழிந்து கொண்டிருக்கும் மொழிகள் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆங்கில மொழி திணிப்பால் ஆண்டுக்கு 20 மொழிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. 

ஆங்கிலம் பிற மொழிகளில் இருந்து சொற்களை கடனாகப் பெற்று வளர்ந்து வருகிறது என்று சொல்லும் போதே, அதனால் மட்டும் வளம் பெறவில்லை. அரசியல் ஆதிக்கம் வளர்கிறது. ஆதிக்கத்திற்குட்பட்ட மொழிகள் எல்லாம் அழிந்து போனதுதான் வரலாறு. ஆங்கிலமே பிற மொழி கலப்பினால் எட்டாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்திற்கு இன்று மொழி பெயர்ப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக ஷேக்ஸ்பியர்னுடைய நாடகங்கள் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டபோது மாணவர்களுக்கு அந்த ஆங்கிலம் அந்நியமாக பட்டதால் அதை கடுமையாக எதிர்த்து போராடியதன் விளைவு அவை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. 

வெறும் 12 நூற்றாண்டு கால வரலாறை கொண்ட ஆங்கில மொழிக்கு இந்த அவல நிலை தான். மாற்றங்களை கண்டு கொண்டே இருப்பதால் அதனுடைய தூய்மை என்பது காணாமல் போய்விட்டது என்பதற்கு ட்ரெய்டன் என்ற 17 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் தான் எழுதி ஆங்கில படைப்புகளுக்கு இலக்கண ரீதியில் சரியாக உள்ளதா என்பதை அறிந்து அவற்றை லத்தினுக்கு மொழிமாற்றம் செய்து லத்தீன் மொழியில் இலக்கணப்படி அவை சரியாக இருந்தால் அதை சரி செய்து அதை ஆங்கிலத்தில் படைப்பதாக கூறியிருந்தார். 


யுனைடெட் கிங்டமின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அயர்லாந்து நாட்டினுடைய மொழி ஐரிஷ் பாரம்பரியமிக்கது. அம்மொழியைக் கண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் பயந்த காலம் உண்டு. 

பொதுவாக ஒரு மொழிக்குள் இன்னொரு மொழி புகுந்து ஆதிக்கம் செய்வதற்கு இரண்டு காரணிகள் உண்டு. 


ஒன்று அரசு அதிகாரத்தின் மூலமாகவும் இரண்டாவது கோயில்கள் மூலமாகவும் தான் அதிகம் நடைபெறும். 


இங்கு ஆரியர்கள் பிராமணர்கள் அரசர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அரசு நடவடிக்கைகளில் தங்கள் மொழியை திணித்தது ,கோயில்கள் மூலமாக தங்கள் மொழி திணித்ததும் இங்குள்ள வரலாறு. 

 உலகமெங்கும் இதே வரலாறு தான். அயர்லாந்து பகுதியில் ஐரிஷ் மொழி பேசும் துறவிகளுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதில் ஆரம்பித்து, ஐரிஷ் பெயர்கள் நீக்கம், ஆங்கில மொழி திணிப்பு, பைபிளை ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவு. 

அதேபோலத்தான் ஸ்காட்லாந்து மக்களின் தாய்மொழி ஸ்காட். ஏழாம் நூற்றாண்டில் துவங்கி இருபதாம் நூற்றாண்டு  வருவதற்குள் பழங்கால ஸ்காட், இடைக்கால ஸ்காட், தற்கால ஸ்காட்மொழி என்று மூன்றாகியது.

 அதுவும் ஆங்கில மொழி திணிப்பால் சிதைவுக்குள்ளானது. அங்கேயும் பைபிள் ஸ்காட்டில் படிக்க தடை செய்யப்பட்டு ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. 

ஆனால் தமிழை ஒப்பிட்டுப் பார்த்தால் 25 நூற்றாண்டுகளாக உயிரோடு இருக்கக் கூடிய மொழியாக இருப்பதால் அன்று எழுதப்பட்ட அதே திருக்குறளை இன்று படித்தாலும் பொருள் புரியும் அளவிற்கு அதனுடைய தொன்மையையும் தொடர்ந்து காப்பாற்றி வைத்திருக்கிறோம் என்பதால்தான்.


அதேபோலத்தான் வெல்டிக் மொழி குடும்பத்தைச் சார்ந்த வேல்ஸ் மொழி யுனைடெட் கிங்டமால் மறுக்கப்பட்ட போது, ​​1962 இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பலகைகளை அழித்தல் வானொலி கட்டணங்களை கட்ட மறுத்தல் என்று போராட்டங்கள் நடத்தி தங்களது மொழியை காப்பாற்றினர். 

இங்கு நம் தமிழர்கள் மட்டும் பெயர் பலகைகளில் இந்தியை அழிக்கவில்லை . இது உலகம் எங்கும் நடக்கும் போராட்ட உத்தி தான். 

அதேபோலத்தான் பிரான்சிலும் பிரெஞ்சு மொழி, ஆங்கிலத்தால் அழிந்து விடும் என்று பிரெஞ்சுகாரர்களும், பிரெஞ்சு மொழியால் ஆங்கிலம் அழிந்து விடும் என்று ஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக பயந்தனர். 


1939இல் பிரான்சில் லத்தீன் மொழி நீக்கப்பட்டு பிரெஞ்சு மொழி நடைமுறைப்படுத்தப்பட்டது. 

1637 இல் துவங்கி பிரெஞ்சு புரட்சி காலத்தில் பிரெஞ்சு தான் மக்களை ஒன்றிணைக்க கூடிய மொழி என அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1967-இல் வணிகத் தளங்கள் மற்றும் அனைத்து விளம்பர பலகைகளிலும் பிரஞ்சு மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் வந்தது. 

1977-ல் கனடாவில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்ட கியூபக் பகுதியில் பிரஞ்சு மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. 

1982ல் வணிகம் சார்ந்த விஷயங்களில் ஆங்கிலம் நீக்கி பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. 

அதற்கு முன்னரே மன்னர் ஆட்சி காலத்தில் பாராளுமன்றத்தில் ஆங்கில மொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் தண்டனை என்று அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி முதுகலை படிப்பவர்கள் அவசியம் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்த்து அவர்களின் மூலமாகத்தான் தேர்வுகளை சந்திக்க இயலும் என்கிற நடைமுறை உள்ளது. 

அதேபோல ஆங்கிலக் குடியேற்றங்களின் மூலம் உருவான அமெரிக்காவில் தங்களுடைய அமெரிக்க மொழியால் சிதைகிறது என்கிற எதிர்ப்புக்குரலை மக்கள் எழுப்புகின்றனர். 


ஆகவே உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அந்தந்த மொழிக் குடும்பங்கள் தங்களது மொழியினை காப்பாற்ற போராட்டங்கள் நடத்தி காப்பாற்றும்போது, ​​தொன்மை வாய்ந்த தமிழ் மொழி பேசும் தமிழர்கள் தனித்தமிழ் இயக்கம் நடத்துவது மிகவும் நியாயமானது. இது உரிமை காக்கும் போர் என தனது உரையிலே ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.


தலைமை உரையாற்றிய நட்பு தமிழ் வட்ட நிறுவனத் தலைவர் நா நா  ஆறுமுகம் ஐயா பேசியதாவது. வாழ்க்கைச் சூழலில் மக்கள் இடம் பெயர்தலும், பிற மொழி மக்களோடு கலந்து பழகுதலும், வாழ்தலுமான சூழ்நிலையில் மொழிக் கலப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் உருவாவது இயற்கையே. ஆனால் ஆட்சி அதிகாரம், மதம் ஆகியவற்றின் அழுத்தத்தால் மொழிக் கலப்பு ஏற்படுவது, மொழிக்கு இடையூறு ஏற்படுவது ஏற்கத்தக்கது அல்ல. மரபு பேணாததால் மொழிக் கலப்பில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் சிதைந்து, பிரிந்து போனது என்பது வரலாறு. 

ஐரிஷ் இன மக்கள்"நாங்கள் ஐரிஷ்" ஐரிஸ் மொழி காப்பதற்காக போராடுவதை கண்டு தான் ஆதித்தனார் அவர்கள் நாம் தமிழர் என்ற அமைப்பை உருவாக்கினார். இன்று அந்த பெயர் கொண்ட அமைப்பினர் தான் உட்பகையினராக தமிழ் மொழியை அழிக்கின்ற வேலையை தமிழ் மொழி விரோதிகளோடு இணைந்து செய்கிறார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள்.

 ஏனெனில் ஏழாம் நூற்றாண்டில் வந்த  ஆரியர்கள் தான் இங்கிருந்த பாலி மொழியை அழித்து பௌத்த சமண சமயங்களை அழித்து, தமிழையும் அழிக்க முயற்சி செய்தார்கள். 

சிந்து சமவெளி நாகரிக பகுதிகளில் தமிழர்கள் தான் வாழ்ந்தார்கள் என்பதற்காக ஏராளமாய் வரலாற்றுச் சான்றுகள் உண்டு அதிலிருந்து கிளைத்த மொழிகள்தான் இதர மொழிகள் மொழிகள் திராவிட மொழிகள். அதனை ஆய்வு செய்து அறிவித்தவர் திராவிட மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள். 

ஆனால் இங்குள்ளோர் திட்டமிட்டு திராவிட என்ற சொல்லை நீக்கி மொழி ஞாயிறு என்று மட்டுமே சொல்லுகிறார்கள். 

வரலாற்று ரீதியாக பாண்டியர்கள் ஏராளமாய் கல்விச்சாலைகளை உருவாக்கினார்கள். ஆனால் சனாதனவாதிகள் கையில் சிக்கிய சோழ மன்னர்கள் ராஜராஜ சோழனிலிருந்து பலரும் ஆரிய மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர். உழவர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து பிராமணர்கள் வசம் நிலங்களை அளித்து சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினர். 

ஆக அரசு, மதம் ஆகிய இரண்டுமே தமிழை சிதைக்கின்ற வேலையை செய்தது என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. 


இங்கிலாந்து உலகில் கனடா மலேசியா சிங்கப்பூர் என பல நாடுகளில் பல மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கும் போது இங்கு ஹிந்தி என்ற ஒரு மொழி மட்டும் ஆட்சி மொழியாக்குவது என்பது திட்டமிட்ட சதியாகும். 


ஒரு இனத்தை அழிக்க, அடிமையாக்க மொழியை அழித்தால் தான் பின் பண்பாட்டை, கலாச்சாரத்தை முடியும் என்பது  அவர்களின் திட்டம். அதனால் தான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் நூலகத்தை சிங்களவர்கள் எரித்தனர். 

அதற்காகத்தான் இங்கு இருக்கக்கூடிய உணவு பழக்க வழக்கங்களில் கூட மாமிசம் சாப்பிடாதே என்று பிரசாரம் செய்து, உணவு பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 தேவைப்படும்போது எல்லோருமே இயல்பாகவே எத்தனை வேண்டுமானாலும் கற்றுக் கொள்வார்கள். திணித்தல் என்பது கூடாது. உலகம் முழுவதும் தூய்மையை காப்பாற்றுவதற்காக இயக்கங்கள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி முன்னோடியாக 1938லேயே பெரியாரும் பல்வேறு தமிழ் பற்றாளர்களும் தமிழ் தூய்மை இயக்கத்தை நடத்தியது . ஆனாலும் உள்பகையாக புல்லுருவிகள் அன்றைய வையாபுரியில் இருந்து இன்றைய சீமான்கள் வரை இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மொழியை காக்க ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். 



கருத்துரை வழங்கிய சீனி கார்த்திகேயன் இந்தி திணிப்பை தடுத்து நிறுத்திய எர்ஸ்கின் பிரபு பேரை நீக்கி ஹிந்தியை திணித்த ராஜாஜியின் பெயரால் மதுரை மருத்துவமனையின் பெயர் மாற்றம் வரலாற்று நகை முரண் என்றார். 

துவக்க கால தமிழ் திரைப்படப் படங்களில் வடமொழி கலந்த சொற்கள் நிறைந்த வசனமும் பாடல்களும் இருந்த நிலைமாறி, திருவாளர்கள் இளங்கோவன் அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி உள்ளிட்ட திராவிட எழுத்தாளர்கள் தலையெடுத்த பின் தான் நல்ல தமிழ் முழங்கியதை நினைவு கூர்ந்தார். 


இந்தி திணிப்பை ஏற்றுக்கொண்டதால் மராட்டி, பிஹாரி ராஜஸ்தானி, ஒடியா மொழிகள் முற்றிலும் சிதைந்து அம்மாநிலங்களில் இந்தி புழக்கத்திற்கு வந்துவிட்டன. மைதிலி, போஜ்புரி, மஹாகி போன்ற மொழிகள் முழுமையாகவே அழிந்து விட்டன. அந்நிலை இங்கு வந்து விடாதிருக்க விழிப்புணர்வு கொண்டு போராட வேண்டும் என்றார். 


திரு  நாகராசன் அவர்கள் ஆங்கில மொழி பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் பெற்றாலும், ஆட்சி அதிகாரத்தின் மூலமே பரவியது. மொழி கலப்பினில் இருந்து தமிழைக் காக்க இயக்கங்கள் நடத்தி விட வேண்டும் என்றார். 

கவிஞர் கலைச்செல்வன் அவர்கள் உலக மொழி வரலாறு கேட்ட மாபெரும் நிறைவு ஏற்பட்டது. நிறைமதி நீலமேகம் அவர்கள் காலத்திற்கு ஏற்ற சிறப்பான உரை என்றார். 

மல்லிகா ஆசிரியை தமிழகத்தில் உள்ள பெற்றோர் தமிழ் மொழியைப் புறந்தள்ளி ஆங்கிலத்தில் மொழிக் கல்வி கற்க தமது பிள்ளைகளை அனுப்புவது கவலைக்குரியது என்று கூறினார் சத்திய பிரியா மிக நிறைவான உரை என உரைத்தார். 

ஆசைத்தம்பி உலகம் மொழி போராட்டத்தினுடைய வரலாறு அறிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

அழகேஸ்வரி அவர்கள் பாரதிதாசன் பாடல்கள் பற்றியும் பெண்ணியம் பற்றியும் சிறப்பாக உரையாற்றினார்.


 குழந்தைகள் மதுரை ஜெயஸ்ரீ குறள் பற்றிய கதை, மதுரை மகாலட்சுமி, மதுரை வினிதாஸ்ரீ, மதுரை கோயல், வடசேரி முருகானந்தம், மோ. முருகானந்தம் , தனுஸ்ரீ, கோவிந்தபுத்தூர் அ. ஸ்வாதி, கேசவன், தினேஷ் , பேரரசன், கோஷிகாதேவி,  ஆகியோர் குறள், கதை, கவிதை என தமிழ்ச்சரத்தை தொடுத்து மகிழ்ந்தனர். 


இறுதியாக விருதை கவிஞர் சிறீராம் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பானதோர் நன்றியுரை நிகழ்த்தினார்.


தொகுத்தளித்தவர் சீனி கார்த்திகேயன் புதுக்கோட்டை. 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...