நனி நாகரிகர்
***************''
நாகரீக மிக்கவர் என்பதற்கு என்ன எடுத்துக்காட்டு என்ற கேள்விக்கு தமிழ் கூறும் நல் உலகு மிக நயம்பட எடுத்துரைக்கிறது...
முன்பு பழகி நட்புக் கொண்டவர் கொடுத்தால், அது நஞ்சு என்று தெரிந்திருந்தாலும், மிக்க பண்பாடு (நாகரிகம்/கண்ணோட்டம்) உடையவர்கள் அதை மறுக்காமல் அருந்துவர். அதாவது, உண்மையான நட்பின் மீது கொண்ட நம்பிக்கையில் நண்பர்கள் எதைக் கொடுத்தாலும் ஏற்பார்கள்...
சங்க கால இலக்கியமான நற்றிணை எட்டுத்தொகை நூல்களுக்குள் வருகிறது.
இப்பாடலை இயற்றியவர் கபிலர் ஆவார். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகில் மாந்தர் எவ்வாறு செல்வ செழிப்போடு வாழ்ந்தனர், அவரது வாழ்க்கை முறை, வாழ்க்கை நெறி, எவ்வாறு சிறப்பாக இருந்தது என்பதை விளக்குகிறது.
அழகான நற்புதல்வனைப் பெற்ற நீலமலர் போன்ற கண்ணையுடைய தமிழ் மகளானவள் தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைக்க, அக் குழந்தை அதன்கணுள்ள பாலைப் பருகுவதுபோல, காந்தளின் பூக்கொடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின் மடலுட்பட்ட அருவி போலப் பெருகிவரும். இனிய நீரைச் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருக நிற்கும் மலைநாடனே! நட்புடையாளர் கண்ணோட்டமுடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீயிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும், நட்பு மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்செனக் கண்டு வைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவார்...
நீ அப்பேர்ப்பட்ட குணமுடையவனாக இருந்தும், அத்தகைய நட்புடையனாயிருந்தும் அழகிய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டவனாக இல்லையே! அவ்வாறு கொள்ளாயேயாயினும் என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு முகமலர்ந்து அன்பினை காட்டுவாயாக! இவள்தான் உன்னிடம் அடைக்கலமாக வந்தவள் அல்லது வேறொரு குறையும் இல்லாதவள் என்ற கான்பாயாக என்று தன் தலைவி படும் துயரினை தோழியானவள் காவிய தலைவனுக்கு எடுத்துரைக்கிறாள்.
தலைவன் தலைவியுடன் ஊசலாடி, தழையுடை அணிந்து அருவியில் ஆடிய மகிழ்ச்சியான நாட்களை நினைவூட்டி, விரைவில் மணம் முடிக்க வலியுறுத்துகிறாள்.
*********************
"புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட! . . . .
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ
என் கண் ஓடி அளிமதி . . . .
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே!" நற்றிணை 355
No comments:
Post a Comment