தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும்.
அதேபோல பல்வேறு தொலைக்காட்சிகளில் வரக்கூடிய நிகழ்வுகள், விவாதங்கள், தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள், சமூக ஊடகங்களில் வரக்கூடிய கருத்துக்கள், எல்லாவற்றையும் பார்க்கும்போது வழமையான தேர்தல், அரசியல் நடவடிக்கைகளை தாண்டி இத்தேர்தலில் கண்ணுக்குத் தெரியாத பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கலாம். நடைபெற்றது அல்லது நடைபெறவில்லை என்று ஆணையிட இயலாதவாறு ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் முடிவுகளை எண்ணிப் பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரியும் ஆனால் அதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய பாடம் காத்திருக்கிறது. அதாவது எச்சரிக்கை என்று கூட சொல்லலாம்.
இதுவரை உலகம் கண்டு வழமையான அரசியல் முறை ஒரு அரசியல் கட்சி ,அதற்கென்று ஒரு கட்டமைப்பு, அதற்கென்று கொள்கையோ, திட்டமோ, பெரிதாகவோ, சிறிதாகவோ ஏதோ ஒன்று அதை வைத்து மக்களிடையே இயக்கங்கள், பிரச்சார பயணம் செய்து அதன் அடிப்படையில் தேர்தல்களை சந்தித்து தங்களை வளர்த்துக் கொள்கிறோம். அது வலதுசாரி சிந்தனை ஓட்டமோ அல்லது இடதுசாரி சிந்தனை ஓட்டமோ அல்லது மையப் போக்கோ ஏதேனும் ஒரு திசை வழியோடு செயல்பட்டதை தான் வரலாறு கண்டிருக்கிறது.
ஆனால் அந்த மாதிரி எந்த விதமான திசையோட்டமும் இல்லாமல் ஒரு அமைப்பு ரீதியான செயல்பாடுகள், கொள்கைகள், இயக்கங்கள் ஏன் பிரச்சாரம் கூட எதுவுமே ஒழுங்காக செய்யாமல் ஒரு கட்சி 10 சதவீதம் 20 சதவீதம் ஏன் ஆட்சியை கூட கைப்பற்றும் என்றெல்லாம் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லாவற்றையும் விட ஊடக வெளிச்சங்கள், கூச்சல்கள் மிக அதிகமாக உள்ளன.
அதை பெரிதாக நம்பக்கூடிய போக்கு கிட்டத்தட்ட எல்லார் மனதிலும் ஆழமாக பதிந்து விட்ட ஊடகங்கள் சமூக ஊடகங்கள் செய்திருக்க கூடிய தில்லு முல்லு பிரச்சாரங்கள்.
ஒருவேளை அம்மாதிரியான தேர்தல் மாற்றங்கள், நிகழ்வுகள் மூலம் விஜய்யின் தவேக வாக்குகள் பெற்றால் அது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை.
அரசு, ஆளும் கட்சியின் அதிகார திமிர், எதிர் கட்சிகளின் செயலற்ற நிலை, சனநாயக செயல்முறைகள் மீதான அவநம்பிக்கை, ஊழல் போன்ற காரணங்களால் அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து விலகி செல்வாக்கிழந்து வருகின்றன.
உலகம் முழுக்க கார்ப்பரேட்டுகள் சமூக ஊடகங்களின், ஊடகங்கள் மூலமாகவும் தாங்கள் விரும்பும் திசை வழியாக இளைஞர்களை கொண்டுசெல்ல ஜென் புரட்சிகளை நடத்தி அரசுகளின் நிலைத்தன்மையை அசைக்கின்றனர் அல்லது புதிய கட்சிகளை உருவாக்கி ஊடக விளம்பரம் மூலம் அரசுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். நேபாளத்தில் நடத்திய புரட்சி ஆட்சி மாற்றத்தில் முடிந்தது.
இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் அரசு கவிழ்ந்து அவ்வாறே... நம் நாட்டில் கூட அன்னா ஹசாரே போன்ற திடீர் காந்திய வேடதாரிகள் மூலம் காங்கிரஸுக்கு முடிவு கட்டியதும், திடீரென உருவான ஆம் ஆத்மி மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தவழியும் அதே....
பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை, மாணவர்களை, அணிதிரட்டி அரசியல் படுத்தி பயிற்சி அளிக்காவிட்டால் சினிமாக்காரர்கள் பின்னாடியோ அல்லது பிற்போக்கு தீய சக்திகள் பின்னாடியும் அணிதிரள வாய்ப்பு உள்ளது.
திராவிட இயக்கத்தார், இடதுசாரிகள் விழித்துக் கொண்டால் மகிழ்ச்சியே...
.
No comments:
Post a Comment