சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 23 September 2025

நினைவலைகள் 2

நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட மாதிரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவும் ஒன்று. அப்போது ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்தான் இருந்தது. இந்தியாவில் ஊரக நிர்வாக வசதிக்காகவும், கிராமப்புற மேம்பாட்டுக்காகவும் ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கோட்டங்கள் என்ற முறை 1950 இல் பிற்பகுதியில் உருவானது. 


வருவாய் நிர்வாக வசதிக்காக வருவாய் கிராமங்கள் தாலுகாக்கள் ஜில்லாக்கள் என்ற நிர்வாக முறை இருந்தது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒன்றியம் திருவரங்குளம் ஒன்றியம் தான். 108 ஊராட்சிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய ஒன்றியம். பிற்காலத்தில் இது கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை திருவரங்குளம் என மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டன. அவ்வளவு பெரிய ஒன்றியத்திற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் நடைபெற்று வந்தது. 

முதல் நாளன்று மதியம் ஓபி எல்லாம் பெரிதாக இல்லை. ஏற்கனவே மருந்தாளுனர் பொறுப்பேற்றுக் கொண்டு வந்து  சுகாதாரப் பார்வையாளர் இசபெல்லா விடுமுறையில் சென்றிருந்தார். மதியம் பெரிதாக வேலை இல்லை. 

இரவு நான் தங்கி இருந்த வீட்டில் என்னை விட்டுவிட்டு ராஜரத்தினம் அவரது கிராமத்திற்கு சென்று விட்டார். 
நான் குடியிருந்த அந்த வீட்டில் மின்சார வசதி கிடையாது. அப்போது கிராமங்களில் மின்சார வசதி உள்ள வீடுகள் குறைவுதான். நான் மதுரை நகர் பகுதியில் வளர்ந்து வந்ததால் மின்சார விளக்கு பயன்பாட்டில் வாழ்ந்தவன். கும்மிருட்டு என்றால் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. 
மேலும் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்கியதும் கிடையாது. பத்து நாட்கள் நான் மூணாறில் பணிபுரிந்த காலம் கிட்டத்தட்ட சுற்றுலா சென்ற மாதிரி தான். ஒரு வசதியான வீட்டில் அவுட்ஹவுஸில் தங்கி இருந்தாலும், மருந்துக்கடை உரிமையாளரின் பையன்கள் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டாலும் எனக்கு தனிமை பெரிதாக தெரியவில்லை.
 ஆனால் இந்த கிராமத்தில் வந்த பிறகு இருட்டியதும் சுற்று முற்றும் எங்குமே வெளிச்சத்தையே காணோம். 
வாழ்க்கையில் முதன்முதலாக அழுகை வந்துவிட்டது... அனாதையாக இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு.. எப்படியோ கண்ணீரோடு தூங்கி விட்டேன். 

மறுநாள் காலை எழுந்து குளிப்பதற்காக குளத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. இம்மாதிரி குளத்தில் குளித்தும் பழக்கம் இல்லை. குளிக்க சென்றபோது அங்கு நிறைய பேர் தம்பி புதிதாக இருக்கிறாரே யார் என்று விசாரித்தார்கள். கிராமப்புறங்களில் அப்படி ஒரு பழக்கம். யாராவது திடீரென்று புதிதாக வந்தால் எல்லோருமே விசாரிப்பார்கள். நான் பொத்தாம் பொதுவாக ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். 

காலையில் 7:00 மணிக்கு எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அப்போது எல்லாம் அதிகாரிகள் சரியாக பணிக்கு வருவார்கள். 

ஆய்வுக்காக வரக்கூடிய மேலதிகாரிகளும் சரியாக ஏழு மணிக்கு எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைவார்கள். பிற்காலத்தில் நிறைய அனுபவங்களை சந்திக்க வேண்டி இருந்தது. 

சரியாக 7 மணிக்கு எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைந்துவிட்டேன். சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவ அலுவலர் கோபண்ணா ராஜலட்சுமி ஆகியோர் வேலைக்கு வந்துவிட்டனர். நான் போய் காலை வணக்கம் சொன்னேன். 
முதல் நாள் இரவு சரியாக உறங்காதாலும், அழுததாலும் முகம் நன்றாக காட்டிக் கொடுத்தது. 

மருத்துவர் கோபண்ணா பரிவுடன் விசாரித்தார். நான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு "சார் எனக்கு வேலை எல்லாம் வேண்டாம் நான் ஊருக்கு போகிறேன்" என்றேன். 

"அரசு வேலை கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் என்ன இப்படி சொல்றீங்க"என்றார். 

"இல்லை சார் எனக்கு பயமா இருக்கு" என்றேன்.

அவர் என்னை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தினார். 
அங்கு வேலை பார்க்கக் கூடிய சக ஊழியர்கள் வந்து ஆளாளுக்கு ஆறுதல் சொன்னார்கள். 
ஒரு பக்கம் அவர்களுக்கு என்னை பார்த்தால் சிரிப்பாக இருந்தது. இவ்வளவு சிறு பையனாக இருக்கிறானே இப்படி பயப்படுகிறானே என்று. 
மெல்ல சமாதானம் அடைந்தேன். 
ஆளாளுக்கு வந்து சார், ஐயா என்றெல்லாம் கூறும்போது கூச்சமாகவும் ஒரு மாதிரியாகவும் இருந்தது. 

இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு ஓட தயாராக இருந்தேன் என்பது வேடிக்கை தானே. 

வேலைக்கு வந்தபோது இருந்த மூஞ்சி இது தான். யாராவது நம்புவார்களா என்ன... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...