சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 23 September 2025

ஒரு சில கன மீட்டர் காதல்..

A few cubic metres of love

இரானிய திரைப்படம். 

இனங்கள் தாண்டி, மொழிகள் தாண்டி, மதங்கள் தாண்டி இயல்பாய் வருவது காதல். 

படிப்பு, அந்தஸ்து, இனம், மதம், ஜாதி எல்லாம் பார்த்து பொருந்தி வந்த பிறகு செய்தால் அதற்கு பெயர் வெறும் ஏற்பாடு தான். 

தெஹ்ரானின் புறநகரில் உள்ள ஒரு ஸ்கிராப் உலோகத் தொழிற்சாலையில், ஒரு இளம் ஈரானிய ஆணுக்கும் ஆப்கானிய தொழிலாளியின் மகளுக்கும் இடையே ஒரு தடைசெய்யப்பட்ட காதல் மலர்கிறது.அது சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள் தான் இத்திரைப்படம். 


அப்துல் சலாம் முன்னாள் ஆப்கானிய படைவீரர். தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது குண்டு வீச்சில் தனது வீடு, மனைவியை இழந்தவர். மகளோடு ஈரானுக்குள் கள்ளத்தனமாக தனது உறவினர் குழுவோடு நுழைந்தவர்.அவர் தனது மகள் மார்வேனாவுடன் ஈரானின் எல்லைப்புறநகரில் சகேபி என்பவர் நடத்தி வரும் ஒரு ஸ்கிராப் உலோகத் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். தொழிற்சாலையை ஒட்டி உள்ளே அமைந்துள்ள சேரி குடிசையில் வசிக்கிறார். முதலாளி சகேபி, ஆப்கானிய வந்தேறிகளுக்கு ஆதரவாக வேலை தங்குமிடம் கொடுத்து ஆதரித்து வருகிறார். 


 மார்வேனாவிற்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும்  இளம் ஈரானிய தொழிலாளியான சேபருக்கும் இடையே  உருவான நேசம் காதலாக மலர்கிறது .


அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் ஈரானிய தொழிலாளி  கெபூர்  வேலை இழந்த தனது மைத்துனருக்கு வேலையும், தங்குமிடமும் தனது முதலாளி சகேபிடம் கேட்கிறார்.


கடந்த காலத்தில் மேனேஜராக பணிபுரிந்த அவனது மைத்துனர் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை இழந்து கடன் பட்டதால் மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு வீடு இன்றி நிற்கிறார். ஆகவே அவருக்கு இங்குள்ள தகரகொட்டகையிலாவது குடியிருக்க அனுமதி வேண்டுகிறார். 


வேலை கொடுக்க தயாராகும் ஆப்கானிய அகதிகள் குடியிருக்கும் தகர குடிசைகளில் தங்க அனுமதி மறுக்கிறார் இதனால் வெறுப்படைந்த கெபூர் ஈரானிய போலீசாரிடம் ஆப்கானிய அகதிகள் பற்றி துப்பு கொடுத்து விடுகிறார். 


போலீஸ் அவர்களது பட்டறையை சோதனை இட வரும்போது, அகதிகள் அனைவரும் அருகில் உள்ள சுரங்கம் போன்ற அமைப்பில் ஒளிந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறார்கள். 


மீண்டும் சில காலம் கழித்து கெபூர் சகேபிடம் தனது மைத்துனர் வேலை இருப்பிடம் குறித்து கேட்டபோது மீண்டும் மறுத்து விடுகிறார். ஆப்கானிய தொழிலாளிகள் திருட்டுத்தனமாக இருக்கும் போது ஏன் ஈரானியருக்கு உதவி செய்யக்கூடாது என கேட்கிறார். 


ஆப்கனியர்கள் கஷ்டத்தில் இருக்கும் நமது உறவினர்கள் உதவி செய்ய வேண்டியது நமது கடமை என்கிறார் சகேப். இல்லை குறைந்த கூலிக்கு இரு மடங்கு வேலை வாங்கி சுரண்டலாம் என்று தான் வைத்திருக்கிறீர்கள் என்று கபூர் வாதாடுகிறான். சகேப் கோபத்தில் அறைந்து அனுப்பி விடுகிறார். 


மீண்டும் போலீஸ் படை வருகிறது ஆப்கானிய தொழிலாளிகள் சுரங்கத்திற்குள் ஓடி ஒளியும்போது இம்முறை அவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கே போலீஸ் வருகிறது. 


அப்துல் சலாம் தனது குழுவோடு மீண்டும் ஆப்கானிஸ்தானத்திற்கு திரும்பி விடுகிறோம் என்று போலீஸிடம் உறுதி கூறுகிறார். 


போலீஸ் திரும்பி சென்று விடுகிறது அப்துல் சலாமும் தனது குடும்ப குழுவினரோடு ஆப்கானிஸ்தானத்திற்கு திரும்ப ஏற்பாடு செய்கிறார்.சேபெரும் மர்வேனாவும் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சேபர் அவளை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறான் உறவினரும் முதலாளியும் மறுக்கிறார்கள். 


சேபர், மர்வேனா காதல் அப்துல் சலாமுக்கு தெரிய வருகிறது. தனது மகளை அடித்து இழுத்து செல்கிறார். ஒரு ஆப்கானிய பெண் இரானியரை திருமணம் செய்து கொள்வது சாத்தியம் அல்ல, பிரச்சனைகள் வரும், மேலும் தனது கௌரவத்துக்கு இழுக்கு என என்று அவர் மறுக்கிறார்.


இந்தப் போராட்டத்தில் காதலர்கள் இணைகிறார்களா என்பதுதான் கதை. 


சேரிப்பகுதியில் வாழும் அகதி தொழிலாளிகளின் பிரச்சனைகள், அவர்களது சந்தோசங்கள், கொண்டாட்டங்கள், போலீஸ் கெடுபிடி இடையே இவர்களது காதல் என திரைப்படம் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. 


மார்வேனாவாக நடித்த ஹசிபா இப்ராஹிமி, சேபராக நடித்த சேத் சோஹெய்லி, அப்துல் சலாமாக  நடித்த நாடர் ஃபல்லா, சகேபியாக நடித்த அலிரேசா ஓஸ்டாடி, மற்றும் மசூத் மிர்தஹேரி என எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். 


எழுதி இயக்கியவர் ஜம்ஷித் மஹ்மூதி

தயாரித்தவர் நவீத் மஹ்மூதி

எடிட்டர் செபிதே அப்துல் வஹாப்

இசையமைத்தவர் சஹந்த் மஹ்தி ஜாதே

3 பிப்ரவரி 2014 வெளியான இத்திரைப்படம் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய பாரசீக மொழியில் உருவானது. 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...