சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 14 September 2025

இரட்டை குவளை

 ராஜபாண்டியன் சென்னை மையபேருந்து நிலையத்தில் தஞ்சை செல்லும் பேருந்துக்காக பரபரப்பாக காத்திருந்தான் . அவன் சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து, நீண்ட காலம் கழித்து இப்போது தான் கிராமத்திற்கு செல்கிறான். 

அவனை வழி அனுப்ப வந்த நண்பன் மெல்ல அவனது தோளைத் தட்டி "பஸ் வரநேரம் இருக்கு, வா டீ சாப்பிடலாம்" என்று கூப்பிட்டான். 

அவனுக்கு சிரிப்பு வந்தது. 

"டீ குடிக்க போனதனால் தானே இவ்வளவு பிரச்சினை. இவ்வளவு காலங்கழிச்சு ஊருக்கு போற மாதிரி ஆச்சு" என்றான்.

அவனும் பெரும்பகுதி சின்ன வயதில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தான். 

கந்தர்வகோட்டை பக்கத்துல ஒரு சின்ன குக்கிராமம் அவனுடைய சொந்த ஊர். மிகவும் வசதி குறைவானது அவனது குடும்பம். அவனது அப்பாவுக்கு பெருசா நிலவசதி எல்லாம் கிடையாது.

 பெரும்பாலும் கூலிவேலை செஞ்சு தான் எல்லாம் பொழப்பு நடந்துட்டு இருந்துச்சு. 

அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் பக்கத்துல இருக்க ஊர்ல இருக்க ஸ்கூல்ல தான் தொடக்க கல்வி எல்லாம் படிச்சான். இவனும் நல்லா படிக்கிறதுனால மேலே படிக்க அனுப்ப சொல்லி வாத்தியார் சொன்னார். 

இவனோட அப்பா வசதி இல்லைன்னு படிக்க அனுப்ப முடியாதுன்னுட்டார். 

எஸ் சி ஹாஸ்டல்ல சேர்த்து விடுப்பா,சோறு போடுவாங்க, துணி கிடைக்கும் நீ என்ன பண்ண போற அனுப்பிவிடுப்பா என்று சொல்லி வாத்தியார் வற்புறுத்தினதுனால அவனது அப்பா ஹாஸ்டல்ல கொண்டு வந்து சேர்த்து விட்டார். 

படிக்கிற இடத்துலயும் இல்லாத வீட்டு பசங்கன்னா கொஞ்சம் மட்டமா தான் நடத்துவாங்க. அதுவும் எஸ்சினா சொல்லவே வேணாம். 

 எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான் எடுப்பான். அது கூட மத்த பசங்களுக்கு பொறுக்காது. தமிழ் வாத்தியார் அவ்வை பாட்டி வறுமை பற்றி சொன்ன பாட்டு அழகா சொல்லிக் கொடுப்பாரு. 

"கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது;

அதனினும் கொடிது இளமையில் வறுமை;

அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;"

"அதனும் கொடிது எஸ் சி யாய் பிறப்பது தானே "என்று வாத்தியார் கிண்டலாய் சொல்லுவார். 

 ஹாஸ்டலில் தங்கி நன்றாக படித்தான். எஸ் எஸ் எல் சி படிக்கையில் இரவு விழித்து படிப்பதற்காக நண்பர்கள் டீ குடிக்க கூப்பிடுவார்கள். 

இவனுக்கு பழக்கம் இல்லை என்று மறுத்து விடுவான். ஆனால் நண்பர்கள் கூட்டி செல்வார்கள். 

பழக்கம் இல்லை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது, பைசா இல்லை என்பது தான் காரணம். 

ஒருமுறை விடுமுறையாக ஊருக்கு சென்றபோது நான்கு ரோட்டில் உள்ள டீக்கடைக்கு டீ சாப்பிட போனான்.

நால்ரோடு முகத்துல ஒரு கூரை கொட்டகை.கரி புடிச்ச மாதிரி இருக்கும். உட்காருவதற்கு ஒரு சின்னதா பென்ச் இருக்கும்.

 கருப்பா ஒருத்தர் சட்டை கூட போடாம நின்னுட்டு டீ போட்டுட்டு இருந்தாரு. 

இவன் டீ கேட்ட உடனே டீ போட்டு இருந்த ஆளு கன்னாடி கிளாஸை கையில் எடுத்தவாரே யாரு மவண்டா நீ என்று கேட்டார். 

பெஞ்சில் உட்கார்ந்து இருந்தவன் கீழத்தெரு ராமன் மவன் பாண்டி தான் என்றான். 

ராமசாமி மகன் என்று சொன்னால் கௌரவம் குறைந்துவிடும் என்று ராமன் என்றான். 

டீ போடுற ஆளு கண்ணாடி கிளாஸ வச்சிட்டு சில்வர் டம்ளர் எடுத்து டீ போட்டு தரையில் வைத்தார்.

 இவனுக்கு ஒன்னும் புரியல எடுத்து டீ குடிச்சிட்டு காசை வைத்துவிட்டு வந்துட்டான். 

வந்து அப்பாகிட்ட "அது என்னப்பா கண்ணாடி கிளாஸ்ல டீ தர மாட்டாங்களா? தனியா ஒரு சில்வர் டம்ளர் எடுத்து டீ போட்டு வச்சாங்க" என்று கேட்டான். 

அவனோட அப்பா சொன்னாரு "இப்பவாச்சும் பரவாயில்ல சில்வர் டம்ளரில் தராங்க. முன்னாடி எல்லாம் செரட்டையில தான் டீ தருவாங்க" என்றார். 

"டவுன்ல எல்லோருக்கும் கன்னாடி கிளாஸ்ல தானே தர்றாங்க, இங்க நமக்கு மட்டும் இப்படி" என்று கேட்டான். 

"இங்கே எல்லாம் இப்படித்தான்"

காலங்கள் கடந்தன. கல்லூரி படிப்பு எல்லாம் முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தான். 

அப்போது இவனுடைய நண்பர்கள் இவனை பார்க்க வந்திருந்தார்கள். வந்தவர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்க டீ கடைக்கு அழைத்துச்சென்றான். 

அவனுக்கு அங்கு அழைத்துச் செல்ல விருப்பமில்லை. அவர்களுக்கும் சில்வர் கிளாஸ் கொடுத்து விடுவார்களே என்ற கவலை அவனுக்கு... 

இவன் கந்தர்வகோட்டை போகலாம் என்றான். அவர்கள் தான் பரவாயில்லை இங்கேயே சாப்பிடலாம் என்று கூறிவிட்டனர்.

அந்தக் கடையில் டீ குடிக்க போன போது சில சாதி வெறி பிடித்த அகராதிகள் அங்கு இருந்தன. 

வந்தவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு டீ போடுகிற ஆள் சில்வர் கிளாஸ் எடுத்து வைத்தார். பாண்டியனுடன் வந்து ஒரு நண்பன் கண்ணாடி கிளாஸ்லேயே போடுங்கள் என்றான். 

டீ போடுகிற ஆள் பாண்டியனை பார்த்து இவங்கெல்லாம் என்ன வர்ணம் என்று கேட்டார்.

 இவனுடைய நண்பன் கடுப்பாகி கொஞ்சம் கருப்பு வெளுப்பும் கலந்த வர்ணம் தான் என்றான். 

உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் "ஏன் மயிராண்டிகள் சில்வர் கிளாஸ்ல குடிக்க மாட்டார்களோ" என்று நக்கலாய் கேட்டான். 

பாண்டியனுடைய நண்பன் "ஏன் கண்ணாடி கிளாஸ்ல தர மாட்டீங்களா" என்றான்.

"ஏண்டா நீங்க குடிச்ச எச்ச கிளாஸ்ல நாங்களும் குடிக்கணுமா, உங்களுக்கு தான் தனியா சில்வர் கிளாஸ் வச்சிருக்கில்ல" என்று உட்கார்ந்து இருந்தவன் திட்ட ஆரம்பித்தான். 

உட்கார்ந்து இருந்தவர்களும், டீ போடுகிறவனும் ஆளாளுக்கு கத்த ஆரம்பித்தார்கள். 

அதில் ஒருவன் உங்க பொம்பளைகளே நாங்கள் வைச்ச எச்சம் தான்டா என்று கேவலமாக திட்டினான்.

 பாண்டியனுக்கு எங்கிருந்துதான் கோவம் வந்தது என்று தெரியவில்லை அம்மாதிரி பெண்ணை கேவலமாக பேசியவனை எட்டி அறைந்தான். 

ஒரே தள்ளுமுள்ளு பிரச்சனை ஆகிப்போனது. தற்செயலாக அங்கு வந்த போலீஸ்காரர் பிரித்து அனுப்பிவைத்தார். 

இரு தரப்பிலும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றார்கள். தகவல் அறிந்த செங்கொடி ஆட்களும், இவர்களுக்கு ஆதரவாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இரட்டை குவளை முறை தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம். இரட்டைக்குவளை முறை தீர்க்கப்படாவிட்டால் நாங்கள் இதை பெரிய அளவுக்கு கொண்டு செல்வோம் என்று தகராறு செய்தார்கள். 

சமாதான கமிட்டி அது இது என்று பெரிய அளவுக்கு போய்க்கொண்டிருந்தது. அதனால் அதற்கு மேல் தகராறு பெரிதாகிவிடவில்லை. பாண்டியனுடைய வீட்டில் எல்லோரும் அவனை சமாதானப்படுத்தி அவனுடைய நண்பன் மூலமாக சென்னைக்கு அனுப்பி விட்டார்கள். 

நீண்ட காலத்திற்கு பிறகு ஊருக்கு வந்து சேர்ந்தான். 

டீ சாப்பிட டீ கடைக்கு போனான். 

டீக்கடையில் எல்லோருக்கும் பேப்பர் கப்பிலே டீ கொடுத்தார்கள். இரட்டைக்குவளைகள் காணாமல் போயின. 


இவன் போகும்போது காது பட ஒருவன் கூறினான். 

நாங்கள் குடிச்ச கிளாஸ்ல இவனுகளுக்கும் தரனுமாம். இவனுக குடிச்ச கிளாஸ்ல நாங்களும் குடிக்கணுமாம். இப்ப பேப்பர் கப்.. என்ன பண்ணுவாங்க......... 

என்றான். 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...