சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 24 September 2025

நினைவலைகள் 3

 நான் பணியில் சேர்ந்த காலத்தில் மருத்துவமனைகளுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் மருத்துவ வசதிகளில் மிகப்பெரிய இடைவெளி இருக்கும். மருத்துவமனைகளில் நிறைய மருந்துகள் இருக்கும். 

ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அந்த காலங்களில் அதிக மருந்து இருக்காது. நாங்கள் வேலைக்கு சென்ற காலத்தில் ஐந்து அல்லது ஆறு மிக்சர் மருந்துகள், மக்கள் மொழியில் சொல்வதானால் தண்ணீர் மருந்து வழங்கப்படும்.

Mixture Carminative, Mixture Kaoline, Mixture Sedative expectorent, Mixture Diaphoretica, Mixture Alkaline Belladonna, Mixture Alkaline Diuretica.,Mixture Alpha..... 

என்ன தலையை சுற்றுகிறதா?! வேறொன்றும் இல்லை.. இந்த ஆறு ஏழு வகை மிக்சர்கள்தான் பெரும்பாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும். அது நாமே தயார் செய்வது. காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, நீர்க்கடுப்பு, செரிமான கோளாறுகள் போன்ற அன்றாடம் சந்திக்க கூடிய நோய்களுக்கு இந்த மருந்துகள் மிக அற்புதமாக குணப்படுத்தும்...

மக்கள் ஆஸ்பத்திரிக்கு வரும்போது எது கொண்டு வருகிறார்களோ இல்லையோ தண்ணி மருந்து வாங்க பாட்டில் கொண்டு வருவார்கள். அந்த தண்ணி மருந்து தயார் செய்த காலத்தில் மருந்தாளுனர்களுக்கு நல்ல மரியாதையும் கிராக்கியும் இருந்தது 

குறிப்பாக கார்மினேட்டிவ் மிக்சருக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கும். (அதில் ஒரு ரகசியம்) அதை இப்போது சொன்னால் நன்றாக இருக்காது.

மாத்திரைகளில் சல்பாடிமிடின், சல்பாகொனைடின், பி காம்ப்ளக்ஸ் போன்ற சில மாத்திரைகளும், ஆஸ்பிரின் பவுடர் மெக்னீசியம் டிரைசிலிகேட் பவுடர் போன்ற சில பவுடர் வகைகளும் பெரும்பாலும் இருக்கும்.

ஒரு இருபது வகை மாத்திரை இருந்தாலே பெரிய விஷயம் தான். யுனிசெப் நிறுவனத்திலிருந்து இலவசமாக வைட்டமின் ஏ அண்ட் டி காம்ப்ளக்ஸ் போன்ற சில மருந்துகள் வரும். மற்ற வகையில் மருந்துகள் இந்த எண்ணிக்கை மிக குறைவுதான். 

பெரும்பாலும் வரக்கூடிய நோயாளிகள் சாதாரணமாக காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, சிரங்கு, காயங்கள் போன்ற சிறு நோய்களுக்கு தான் அதிகம் வருவார்கள். பெரிய அளவுக்கான நோய்கள் கிராமங்களில் அதிகம் வராது. அப்படியே வந்தாலும் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவோம். அவ்வளவு ஏன் நான் வேலை செய்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனக்குத் தெரிந்து மூன்று நீரிழிவு நோயாளிகளும் இரண்டு ரத்த அழுத்த நோயாளிகள் மட்டுமே இருந்தனர். ஏன் இவ்வளவு உறுதியாக சொல்லுகிறேன் என்றால் தினசரி வரக்கூடிய நோயாளிகளின் நோய் பட்டியல் Morbidity data தயார் செய்கிற வேலை என்னுடையது... 

நான் பணி ஓய்வு பெறும் காலத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ரகத்தில் மருந்து கிடங்கு அலுவலராக பணிபுரிந்தேன். அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்கின்ற பணியில் உதவி செய்வது என் வேலை. வரக்கூடிய நோயாளிகளுடைய எண்ணிக்கை, நோய்களினுடைய எண்ணிக்கை போன்ற பல்வேறு செயல்பாடுகளை வைத்து தான் நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். நான் வேலை பார்த்த அதே திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்த நோயாளிகளுடைய பட்டியலை பார்த்தால் கிட்டத்தட்ட 15 இல் இருந்து 20% வரை நீரிழிவு ரத்த அழுத்த நோயாக நோயாளிகளாக இருந்தது தெரிந்தது. இது அங்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டினுடைய நிலைமை அது தான். இந்த 50 ஆண்டுகளில் எவ்வளவு பெரிய மாறுதல்கள்.. எவ்வளவு பெரிய முன்னேற்றங்கள்... நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. 



தொடர்ந்து சிந்திப்போம்



No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...