சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 20 September 2025

நினைவலைகள்

 20.09.1978 இந்த நாள் என் வாழ்க்கையை மறக்க முடியாத நாள்.. 

என் வாழ்க்கையில் திசை வழி காட்டிய நாள்...

பிறந்த ஊரை விட்டு இதுதான் என் சொந்த ஊர் என்று என் எதிர்கால வாழ்வை நிர்ணயித்த நாள்....

 பிறந்தநாள் நாம் நிர்ணயிப்பதல்ல.

படிப்பு.. நாம் என்ன விரும்புகிறோம் என்பதை விட, எது நமக்கு அமைந்தது என்பது தான் முக்கியம்..

 என்னுடைய குடும்ப சூழலுக்கு, என்னுடைய பெற்றோரால் சக்திக்கு மீறி படிக்க வைத்து, எதிர்காலத்திற்கு வழிகாட்டி விட்டனர். 

படித்தால் வேலை கிடைக்குமா? அரசு வேலை கிடைக்குமா என்று யாராலும் நிர்ணயிக்க முடியாத காலம்... 

ஆனால் நாங்கள் படித்த காலத்தில் ஒரு சில படிப்புகள் படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. தொழில்நுட்ப பட்டய படிப்புகள் படித்தால் ஓரளவு வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. குறிப்பாக மருந்தியல் பட்டய படிப்பு(Diploma in pharmacy) , ஊடுகதிர் தொழில் நுட்ப படிப்பு(X ray technician .) , போன்றவை நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 

அப்படிப்பட்ட சூழலில் நான் படித்தது மருந்தியல் பட்டய படிப்பு... வழிகாட்டிய தேவி மணி சாருக்கு நன்றி.. 

வெறும் 18 வயது நிரம்பிய நிலையில், என்னுடைய டிப்ளமோ என் கைக்கு கிடைத்தவுடன் வேலை உறுதியானது.. 

வேலை வாய்ப்புக்காக புதுக்கோட்டையில் பதிந்துவிட்டு 20 நாள் காத்திருந்தேன்.. 

பிறந்ததிலிருந்து தாய் தந்தையரை குடும்பத்தினரை பிரிந்தே பழக்கம் இல்லாத எனக்கு முதன் முதலாக வீட்டை விட்டு வேலைக்காக வெளியே செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. 

மதுரை நகர தெருக்களில் மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த நான் முதன் முதலாக வேலைக்காக காத்திருந்த 20 நாட்களில் சுமார் 10 நாட்கள் கேரளாவில் மூணாறில் இருந்த சூசன் மெடிக்கல்ஸ் என்ற மருந்து கடைக்கு வேலைக்கு சென்றேன். 

மதுரையில் வக்கீல் புது தெருவில் பொழுது போகாத நாட்களில் நான் பகுதி நேரத்துக்கு சென்ற கிருஷ்ணகுமார் மெடிக்கல்ஸ் உரிமையாளர் மோகன் சார் உதவியால் மூணாறுக்கு வேலைக்கு சென்றேன். 

சூசன் மெடிக்கல் உரிமையாளர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அந்தோணி சார் என்னை மிகவும் அன்பாக கவனித்துக் கொண்டார். அவர்கள் வீட்டுப் பிள்ளையாக அவுட் ஹவுஸில் தங்கி இருந்தேன். மூணாறில் வேலைக்கு சென்றேன் என்று சொல்வதை விட சுற்றுலா சென்றேன் என்று தான் சொல்ல வேண்டும். பத்து நாட்கள் மகிழ்ச்சியாக மூணாறு சுத்தி சுத்தி வந்தேன். 

அவர்கள் என்னை அங்கேயே வைத்துக் கொள்ள பிரியப்பட்டார்கள் அவர்களது கடைக்கு எனது டிப்ளமோ சான்றிதழை பதிவு செய்வதற்காக தயாராக இருந்தோம் அன்று ஞாயிற்றுக்கிழமை ஆனதால் தபால் அனுப்ப இயலவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்காணலுக்கு வர வேண்டி எனது மாமா திரு இராமநாதன் அவர்கள் புதுக்கோட்டையில் இருந்து தந்தி அடித்து இருந்தார் . 

ஒருவேளை அந்த தந்தி கிடைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய டிப்ளமோ மருந்து கடை லைசன்ஸுக்காக கேரளாவில்அரசிற்கு அனுப்பப்பட்டிருக்கும். நான் வராமலே அங்கேயே தங்கியிருந்திருப்பேனோ என்னவோ தெரியவில்லை. 

அப்போது மருந்தியல் பட்டய படிப்பு தமிழகத்திலேயே மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டில் மட்டும் தான் இருந்தது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும், கொஞ்சம் பக்கத்து மாநிலங்களுக்கும் மருந்தாளுனர் பணியிடங்களுக்கு வருடத்திற்கு வெளிவரும் நூறு மருந்தாளுநர்களை மட்டுமே நம்பி இருந்ததால் வேலை என்பது உறுதியாக இருந்தது. 

தனது மருந்து கிடைக்கு லைசென்ஸ் வாங்க மருந்தாளுநர் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை விட, எனக்கு அரசு பணி கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் சூசன் மெடிக்கல் உரிமையாளர் திரு அந்தோணி சார் என்னை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

  மாவட்ட சுகாதார அலுவலர் மரு. கிருஷ்ணன் அவர்கள் நேர்காணல் நடத்திஎனக்கு திருவரங்குளம், நண்பன் சக்திவேலுக்கு மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் பணியாணை வழங்கினார். அப்பொழுதெல்லாம் அரசுப்பணி ஆணையை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் எல்லாம் வழங்குவதில்லை. டெஸ்பேட்ச் கிளார்க் என்று அழைக்கப்படும் அணுப்புகை எழுத்தாளர் தான் அனுப்பி வைப்பார், அல்லது கையொப்பம் பெற்றுக் கொண்டு வேலை ஆணையக் கையில் கொடுப்பார். எங்களுக்கெல்லாம் முதலமைச்சரிடம் வேலை ஆணையை பெறும் புண்ணியம் எல்லாம் கிட்டவில்லை. 

மதுரை மாநகரத்துக்குள்ளே வாழ்ந்த எனக்கு திருவரங்குளம் போன்ற கிராமத்துக்கு செல்லும்போது உண்மையிலேயே ஒன்றும் புரியவே இல்லை. 

திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற போது அங்கு நோயாளிகள் யாருமே இல்லை. மருத்துவர் அறைக்குள் மெல்ல தலை நீட்டியதும், உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. 

"ஓ. பி எல்லாம் முடிஞ்சிருச்சு சாயங்காலம் வாப்பா" என்ற குரல் கேட்டது. 

குரலுக்கு சொந்தக்காரர் மருத்துவர் கோபண்ணா. இந்நிலையத்தின் மருத்துவ அதிகாரி. 

நான் மெல்ல நுழைந்தவாறு வணக்கம் செலுத்தி விட்டு "சார் நான் பார்மசிஸ்ட் புதுசா வேலைக்கு சேர வந்திருக்கேன். 

அவர் மேலும் கீழும் என்னை ஏற இறங்க பார்த்தார். இவ்வளவு பொடியன் அரசுப் பணியில் சேருகிறானா என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. "சங்கரநாராயணன் வரவில்லையா" என்று கேட்டார். 

என்னுடைய நண்பன் சங்கரநாராயணன் ஏற்கனவே திருவரங்குளத்திற்கு வந்து மருத்துவரை சந்தித்து நான் இங்கு வந்து சேர்ந்து விடுவேன் சார் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறான். 

நண்பன் சங்கர நாராயணனின் உறவினர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் வேலை செய்து விடலாமே ஏன் கிராமத்தில் போய் சேருகிறாய் என்று சொல்லவும் அவர் ஆரம்ப சுகாதார நிலையம் வரும் திட்டத்தை கைவிட்டு விட்டார். 

நான் அகப்பட்டதால் என்னை அங்கு நியமித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். 

பணியில் சேர்ந்தவுடன் அங்கு இருக்கும் அலுவலர்களை அழைத்து என்னை அறிமுகப்படுத்தினார். எல்லோருக்கும் ஆச்சரியம்... நிறைய பேர் சார் என்று வணக்கம் செலுத்தினார்கள். சிலர் அய்யா என்று சொன்னார்கள். 

எல்லோருமே என்னை விட வயதில் மூத்தவர்கள். 

சார், ஐயா என்று அழைத்தது மிகவும் கூச்சமாக இருந்தது.

 உடனடியாக அங்கிருந்த ஆண் செவிலிய உதவியாளரை அழைத்து ராஜரத்தினம் இவரை உங்கள் அறையில் தங்க வைத்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் சொல்லிவிட்டார். ராஜரத்தினம் அங்கு இருக்கக்கூடிய சிறிய ஓட்டலில் சாப்பாட்டிற்கு சொல்லிவிட்டு, அவர் குடியிருந்த வீட்டில் என்னை அழைத்து சென்று விட்டார்.. 

இதுதான் அரசு பணியில் சேர்ந்த கதை. என் வாழ்க்கை பாதையை மாற்றிய கதை... 

அன்றிடவே எனக்கு பயம் தேடி வேலையை விட்டுவிட்டு ஊருக்கு சென்று விடலாம் என்று தீர்மானித்து விட்டேன் அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்





1 comment:

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...