சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 4 September 2025

ஆசிரியர் தினம்

 மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். மாதாவையும் பிதாவையும் மதிக்கின்றோம், வணங்குகின்றோம். நம்மை ஏன் பெற்றவர்கள். அவர்கள் இந்த உலகிற்கு நம்மை கொண்டு வந்து சேர்த்தவர்கள் அவர்கள்.


ஆனால் இந்த உலகிற்கு ஒரு சான்றோனாக அறிமுகப்படுத்துபவர் குரு. அவர் தான் ஆசிரியர். அவர் தான் அறிவு கண்ணை திறந்து வைத்து அகிலத்தையே காட்டி நம்மை கனவு காண வைத்து, கனவுலகில் இருந்து மெய்யான உலகில் சிந்திப்பதற்கு, செயலாற்றுவதற்கு, முன்னேறுவதற்கு வழிகாட்டியவர்கள்.


தெய்வம்... அதை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே. அதனால் அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

ஆனால் தெய்வம் ஒன்று இருந்தால் அது இந்த மூவராக தான் இருக்க முடியும்..


 பெற்ற அன்னையை மதித்து போற்ற வேண்டும் என்பதற்காக தான் அன்னையர் தினம் கொண்டாடுகிறோம். நம்மை ஆளாக்கிய தந்தையை போற்றிட தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். 


நம்மை அறிவுபூர்வமாக வளர்த்து அகிலத்திற்கு தந்த ஆசிரியர்களை போற்றிய ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோம். 

 ஆனால் இவ்வாறு வருடத்திற்கு ஒரு நாள், பெருமைக்கு ஒரு நாள், வைத்து கொண்டாடுவது உண்மையில் பெருமையா என்ன?!  


இவ்வாறு தினங்கள் கொண்டாடுவதை விட நாள்தோறும் அவர்களை மதித்திட வேண்டும். அந்த சிந்தனை நமக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு வருடத்திற்கு ஒரு தினத்தை, சிறப்பாக நாம் மதிப்பவர்களை, மதிக்க வேண்டியவர்களை, பெருமைப்படுத்த வேண்டும் வேண்டியவர்களை, நினைத்து மகிழத்தான் இவ்வாறு நாட்களை வைத்து கொண்டாடுகிறோம். 


அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட தேசத்தில், பெண்களுக்கும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வி முழுமையாக கிடைக்காத சூழலில், சனாதன சக்திகள் கை மேலோங்கி இருந்த காலத்திலேயே, ஜோதிபா பூலே, சாவித்ரி பாய் பூலே போன்ற பெருமக்கள் ஏராளமான சிரமங்களுக்கிடையே கல்விப் பணியைத் தொடங்கினார்கள். அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும். 


 நான் என்றும் என்னுடைய ஆசிரியர் திரு பொன் பாண்டியன் அவர்களை நினைத்துக் கொள்வேன். படிப்பு மட்டுமே போதாது, பொது வாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி நல்லொழுக்க வகுப்பு மாதிரி பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்குவார்.


நம் நாட்டில் எத்தனையோ அற்புதமான முன் மாதிரியான ஆசிரியர்கள், லட்சக்கணக்கில் இருந்து கொண்டு, கோடிக்கணக்கான பேரை வளர்த்து, அறிவாளிகளாக்கி, ஆளாக்கி மகிழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


நான் அறிவொளி இயக்கத்திற்காக, குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் குக்கிராமங்களுக்கெல்லாம் பயணித்த போது எனக்கு அறிமுகமானவர் தாமரை என்ற ஆசிரியர். சொந்த ஊர் திருநெல்வேலிக்கு பக்கம் என்று நினைக்கிறேன். ஆனால் மின்னாத்தூர் என்ற ஒரு குக்கிராமத்தில் ஒரு குடிசை போட்டு, அதில் குடும்பத்தோடு வசித்துக் கொண்டு, அங்குள்ள ஊர் மக்களோடு ஒன்றிப்போய் மக்களுக்கு நல்லது கெட்டது சொல்லி வழிகாட்டக்கூடிய ஒரு அற்புதமான மனிதராக அவரைக் கண்டேன். இது ஒரு உதாரணம் தான்.


இவரை போல ஏராளமான ஆசிரியர்கள் நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கிடைத்ததா என்பது எனக்கு தெரியாது.


 இன்னொரு பள்ளியில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் பெரிய சங்கத் தலைவர். நாட்டுக்கு நல்லது செய்வதற்காக பள்ளியையும் தியாகம் செய்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பார். ஊர் மக்கள் எல்லாம் அவரிடம் கெஞ்சினார்கள். ஐயா நீங்கள் வந்து பாடம் எல்லாம் நடத்த வேண்டாம் எங்கள் பிள்ளைகளை வேறெங்காவது நாங்கள் கொண்டு போய் சேர்த்து விடுகிறோம் டிசி கொடுப்பதற்காக பள்ளிக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள் இம்மாதிரி சில விதிவிலக்குகளும் உண்டு...


ஆனால் உண்மையில் ஆசிரியர்களை நாம் மதிக்கிறோமா என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பல திரைப்படங்களில் ஆசிரியர்களை கேலிச்சித்திரமாக காட்சிப்படுத்துவதை கண்டிருக்கிறோம்...


1940களில் திரு ஏ. வி மெய்யப்ப செட்டியார் இயக்கிய சபாபதி என்ற ஒரு படத்திலே தமிழ் ஆசிரியரை கிண்டல் பண்ணி கேலி சத்திரம் ஆக்கி ஏராளமான காட்சிகள் மக்களெல்லாம் சிரித்து மகிழ்ந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ திரைப்படங்கள் ஆசிரியர்களை கேலிச்சித்திரம் ஆக்குவதை எத்தனை பேர் கண்டித்திருக்கிறோம்.


ஒரு காலத்தில் கல்வியிலே கடைக்கோடியில் இருந்த நம் தேசத்தை, இன்றைக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக்கி சாதித்திருக்கிறோம் ஆசிரியர்களுடைய பங்கு எவ்வளவு மகத்தானது என்பதை புரிந்து கொள்ள முடியும். 


நமக்கு முகம் தெரிந்த ஆசிரியர்களில் இருந்து, முகம் தெரியாத ஆசிரியர் வரை நாடு முழுக்க மக்களை முன்னேற்றிக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் நமது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...