சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 31 March 2026

காலத்தினால் செய்த உதவி

 மழை நின்றவுடன், குடை அனைவருக்கும் ஒரு சுமையாகிவிடுகிறது.

ஆற்றில் பயனம் செய்ய பயன்படும் தோனியை கரையேறிய பின் யாரும் தூக்கி சுமப்பதில்லை. 

பயன் நின்றுவிடும்போது, ​​இப்படித்தான் விசுவாசம் முடிவுக்கு வருகிறது.

அது தங்களுக்குப் பயன் தரும்போது மக்கள் பராமரிக்கிறார்கள். அந்த பயன் தராதபோது அவர்கள் மறந்து விடுகிறார்கள்.அதுவும் மறைந்து போகிறது. 

ஆனால் மனிதர்கள் அப்படியல்லவே... 

நம்மை நோக்கிடும் ஒவ்வொரு புன்னகையும் உண்மையானதல்ல.

நம்மை நோக்கி நீட்டப்படும் ஒவ்வொரு கையும் உதவும் நோக்கத்தில் இருப்பதில்லையே.... 

நமக்கு ஊக்கமளிப்பதாக பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் நேர்மையிலிருந்து வருவதில்லை.

சில உறவுகள் நிபந்தனைக்குட்பட்டவை; அவை வசதி, சுகம் அல்லது ஆதாயத்திற்காக மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளன.

புயல் ஓய்ந்தவுடன், ஆதரவும் ஓய்ந்துவிடுகிறது.

இந்த உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத  குருடர்களாக இருக்காதீர்கள்.

இருப்பினும்... 

எந்த ஆதாயமும் இல்லாதபோதும் உடன் இருப்பவர்களை மதியுங்கள்.

பரிவர்த்தனைக்காக அல்லாமல், நிலையான இருப்பைக் கொண்டிருப்பவர்களைக் கவனியுங்கள்.

விசுவாசம் என்பது சுகமான காலங்களில் அளவிடப்படுவதில்லை.

அந்த கஷ்டத்திலும், போராட்டத்திலும், யாருக்கும் எதுவும் தரப்படக் கூடாத தருணங்களிலும் சோதிக்கப்படுகிறது.

உடன் இருக்கும் அரிதான ஆன்மாக்களைப் போற்றுங்கள்.

மழைக்காக மட்டுமே வருபவர்களை விட்டுவிடுங்கள்.. 

தங்களின் தேவைக்காக மட்டுமே வருபவர்களை விட்டுவிடுங்கள்.. 


சிறிதோ, பெரிதோ, தக்க சமயத்தில் நமக்கு உதவி செய்தவர்களை எந்நாளும் மறந்து விடாதீர்கள்.. 

"காலத்தி நாற்செய்த நன்றி சிறிதெனினும் 

ஞாலத்தின் மாணப் பெரிது" 

Monday, 30 March 2026

தேர்தல் திருவிழா 5

 பொதுவாகவே தேர்தல் என்று வந்துவிட்டால் நிறைய பேருக்கு ஜுரம் வரும். டீக்கடைகள் ஆரம்பித்து தொலைக்காட்சிகள் வரை விவாதங்களுக்கு பஞ்சம் இருப்பதில்லை. 

அவரவர் சிந்தனைக்கு ஏற்ப, இருக்கும் அல்லது விரும்பும் கட்சிக்கு ஏற்ப கருத்து கூறுவது இயற்கை தான். ஆனால் அதை தாண்டி நடுநிலைமையோடு ஆய்வு செய்து தேர்தல்களைப் பற்றி விவாதிப்பதற்கு பெரும்பாலும் யாரும் தயாராக இருப்பதில்லை. 

இந்தியாவில் சுதந்திரம் வருவதற்கு முன்னால், குடியரசு என்று அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட்டவை என இரு கூறாக கூறலாம். 

முதற்கூறு அதிகம் பாதிக்குமளவிற்கு பெரிதாக நடந்து விடவில்லை. காரணம் அந்த தேர்தல்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குட்பட்ட அரசு தான் விரும்பும் போக்கில் நடத்திய தேர்தல். அவ்வளவு தான்.

 பட்டதாரிகள், நிலச்சுவான்தார்கள், வரிகட்டியவர்கள் என குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்கேற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாதி பேர், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள் பாதிப்பேர் கொண்ட, அதிகாரம் இல்லாதவர்கள்  மூலமாக நடத்தப்பட்ட அரசுகள். 

எனவே அனைத்து மக்களும் பங்கேற்ற தேர்தலில், அனைத்து மக்களுக்குமான அரசோ இல்லை. 

1947க்கு பிறகு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி உருவாக்கிய அரசியல் சட்டம் 1950ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடியரசு என அறிவிக்கப்பட்டது. 

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் வயது வந்த அனைவரும் வாக்களித்து தேர்வு நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில்   மத்திய அரசு எனவும் மாநில அரசு எனவும் உருவாக்கப்பட்ட அரசுகளுக்கு தேர்தல்கள் நடைபெற்றது. நடைபெற்று வருகிறது.... 

சரி தேர்தல்களைப் பற்றி ஒரு முறையான ஆய்வுகளை பார்ப்போம். பொதுவாக அளிக்கப்படும் வாக்குகளை இருவிதமாக பார்க்கலாம். ஒன்று நேர்மறை வாக்குகள். மற்றொன்று எதிர்மறை வாக்குகள். 

நேர்மறை வாக்குகள் எனப்படுவது ஒரு கட்சியினுடைய கொள்கை, செயல் திட்டம் ஆகியவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கையில் அளிக்கப்படும் வாக்கு நேர்மறை வாக்குகள் ஆகும்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது சுதந்திரப் போரில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி மக்களுக்கு நல்லது செய்யும், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும், அதை செய்யக்கூடிய தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை நிறைய மக்களுக்கு இருந்தது. அந்த அடிப்படையில் போடப்பட்ட வாக்குகள் நேர்மறை வாக்குகள். 

அதேபோல பொதுவுடமை தத்துவம் தான் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் அதை நடைமுறைப்படுத்தக் கூடிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நன்மை பயக்கும் என்று பொதுவுடைமை கட்சிகளுக்கு ஒரு சாரார் வாக்களித்தனர். இதுவும் நேர்மறை வாக்குகளே...

அதேபோல திராவிட இயக்க கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்கள், திராவிட இயக்கத்தார் ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு நல்லது கிடைக்கும் என்ற நேர்மறை எண்ணங்களோடு ஆதரவளித்தனர். 

திரைப்படத் துறையில் திராவிட கொள்கைகளையும், சமூக சீர்திருத்தங்களையும்  பொதுவுடைமை கருத்துக்களையும் பரப்பி வந்த திரு எம் ஜி ராமச்சந்திரன் தனியாக கட்சி தொடங்கும் போது அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில்  அவருக்கு வாக்களித்தது நேர்மறை வாக்குகளே. 

அதேபோல திரு என்டிஆர், திரு விஜயகாந்த் போன்ற திரைப்பட நட்சத்திரங்கள் நம்பிக்கைகளை விதைத்ததால் அவர்களுக்கு அந்த நம்பிக்கையின் அடிப்படையில் போடப்பட்ட வாக்குகள் நேர்மறை வாக்குகளே!!! 

புதிதாக ஒரு கட்சியை துவக்கி, கொள்கை, திட்டம் அறிவித்து யாரும் செயல்படும்போது, முதலில் விழும் வாக்குகள் நேர்மறை வாக்குகளே.... 

இனி எதிர்மறை வாக்குகளை பார்ப்போம்... 


அன்பின் ஆட்சி

 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" (குறள் 80) என்பது அன்பின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள்.

 அன்போடு செயல்படும் உடலே உயிர் உள்ளது; அன்பு இல்லாதவரின் உடல் வெறும் எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட சடலத்திற்குச் சமம் என்பது இதன் பொருள்.

"எங்கு அன்பு ஆள்கிறதோ, அங்கு அதிகார வேட்கைக்கு இடமில்லை; எங்கு அதிகாரம் மேலோங்கி நிற்கிறதோ, அங்கு அன்பு இருப்பதில்லை. ஒன்று மற்றொன்றின் நிழலாகத் திகழ்கிறது." - கார்ல் ஜங்

அன்பும் அதிகாரமும் நமக்கு, அவற்றின் தூய வடிவங்களில், அரிதாகவே ஒரு நிலவு ஜங் நினைவூட்டுகிறது. அன்பு வழிகாட்டும்போது, ​​ஆதிக்கம் மறைந்துவிடுகிறது. அதிகாரம் மேலோங்கும்போது, ​​பிணைப்பு வலுவிழந்துவிடுகிறது. ஒன்று மறைத்து வைத்திருப்பதை மற்றொன்று வெளிப்படுத்துகிறது; இதன் மூலம், நமது மனிதநேயத்தை வலுப்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு அவை நம்மைத் தூண்டுகின்றன.

அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிடக்கூடிய வலிமை கொண்டது.

அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது.-கதே

 உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான்.-வால்டேர் 

இவ்வாறு அன்பை போதிக்காத மதங்களும் இல்லை மார்க்கங்களும் இல்லை அரசியல் அமைப்புகளும் இல்லை. ஏராளமான அறிஞர்களும் அன்பைத்தான் போதித்திருக்கிறார்கள். எல்லா மத இலக்கியங்களும் இறை தூதர்களும் போதிப்பது அன்பைத்தான். அது 2000, 3000 ஆண்டுகளுக்கு மேலாக அன்பை போதிப்பதாகத்தான் சொல்லிக் கொண்டார்கள்.

 ஆனால் நடைமுறையில் எல்லாம் இருக்கிறது அன்பை தவிர...... 

இப்போது தான் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு போப் ஆண்டவர் போருக்கு எதிராக மனம் நொந்து போய் சபித்ததை நான் பார்க்கிறேன். நீங்கள் யாராவது பார்த்திருந்தால் தயவு செய்து சொல்லுங்களேன்


அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் , சங்கீதம் 144-ஐ மேற்கோள் காட்டி, "போருக்காக என் கைகளைப் பயிற்றுவிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும்" என்று கூறி, ஈரானில் உள்ள அமெரிக்கப் படைகள் கடவுளால் பாதுகாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார். அவர் இந்த இராணுவ நடவடிக்கையை தெய்வீக அங்கீகாரம் பெற்றது என்று சித்தரித்து, கடவுளின் அருள் படைகளுடன் இருக்கிறது என்று குறிப்பிட்டார். இருப்பினும், போப் லியோ XIV கடுமையாகப் பதிலளித்து, போரில் கடவுளின் பெயரைப் பயன்படுத்தும் யோசனையை விமர்சித்தார். அவர் ஹெக்ஸெத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், "சிலர் இந்த மரணத் தேர்வுகளில் கடவுளின் பெயரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்," என்று கூறிய போப், "ஆனால் கடவுளை இருளால் பயன்படுத்திக்கொள்ள முடியாது," என்றும் மேலும் கூறினார். வன்முறை ஒருபோதும் நீதிக்கு வழிவகுக்காது என்பதை வலியுறுத்தி, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி அவர் அமைதிக்கு அழைப்பு விடுத்தார். 

குருத்தோலை ஞாயிறன்று வத்திக்கானில் ஆற்றிய உரையின்போது, ​​போர்களைத் தொடங்கும் தலைவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் நிராகரிப்பதாக போப் தெரிவித்தார்.


உணவு ஒரு மனித உரிமை

 "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது, உணவளிப்பவர் உயிர் காப்பவருக்குச் சமம் என்பதை உணர்த்தும் பழமையான தமிழ் இலக்கியப் பொன்மொழி. இது புறநானூறு 18வது பாடல் மற்றும் மணிமேகலை போன்ற நூல்களில் பசியின் கொடுமையையும், உணவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

நாகரீகமான உலகில் எல்லா மனிதருக்கும் அத்தியாவசியமான தேவை உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு....... 

என்ன அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று பார்க்கிறீர்களா?! சரி? எல்லா உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது உணவு, நீர், அல்லவா?. 

அப்படியாயின் நாகரீகம் அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் மனித இனத்திற்கு, தன்னுடைய இனத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதை அடிப்படை கடமையாக கொண்டிருக்க வேண்டும் அல்லவா. 

உணவு ஒரு மனித உரிமை என்பது  வெளிப்படையானது, இல்லையா?

2021-ல், ஐக்கிய நாடுகள் சபை "உணவுக்கான அணுகல் ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்றொரு தீர்மானத்தை முன்வைத்தது. அதன் நோக்கம் எளிமையானது. மிக மிக சாதாரணமானது. ஏனென்றால் உலகம் போருக்கு அல்லது போர் என்ற பெயரில் அழிவுக்கு செலவிடும் தொகையில் உணவுக்கான செலவு என்பது மிகக் குறைவானதே. இந்த தீர்மானத்தைக் கூட எதிர்க்க யாராவது இருக்கிறார்களா என்ன என்று நினைப்பீர்கள். 

ஆம். 193 உறுப்பு நாடுகளில், 180 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இரண்டு நாடுகள் எதிராக வாக்களித்தன.

யார் அந்த மனிதாபிமானமிக்க மேதாவிகள் என்று பார்க்கிறீர்களா? வேறு யார்! 

அகில உலக போலீஸ்காரனான அமெரிக்காவும், உலக மகா சமாதான தூதுவனான இஸ்ரேலும்.தான். 

இதை நன்கு யோசித்துப் பாருங்கள். பூமியில் உள்ள மிகவும் செல்வந்த மற்றும் உணவுப் பாதுகாப்பு மிகுந்த இரண்டு நாடுகள், மனிதர்கள் உண்ணத் தகுதியானவர்கள் என்ற அடிப்படைக்கொள்கையை கூட நிராகரிப்பதில் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இன்றி தனித்து நிற்கின்றனர்.


அந்தத் தீர்மானம் அப்படி ஒன்றும் பொதுவுடமை கொள்கை போன்று தீவிரமானதாக இருக்கவில்லை. பசி என்பது ஒரு பெரும் அநீதி மற்றும் மனித மாண்பின் மீதான மீறல் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவ்வளவே.. 2020-ல், போதுமான உணவு கிடைக்காத மக்களின் எண்ணிக்கை 240 கோடியாக உயர்ந்துள்ளது, இது உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும் என்பதை ஏற்றுக்கொண்டது. 72 கோடி முதல் 81 கோடி வரையிலான மக்கள் பசியை எதிர்கொண்டனர்.

மனித குலம் எவ்வளவோ வளர்ச்சிகளை கண்டபின் என்கிற கண்டுபிடிப்புகளுக்கு பின் தொழிற்புரட்சி விவசாய புரட்சி எல்லாம் கண்டு உலக மக்களுடைய தேவைக்கு மேலே உற்பத்தி செய்த பின்னர் கூட மூன்றில் ஒரு பகுதி மக்கள் பசியோடு பாடுகிறார்கள் என்றால் இது வெட்கக்கேடு இல்லையா,? 

உலக நாடுகளில் பெரும்பாலானவர்கள் தங்களை ஏதோ ஒரு மதம் சார்ந்தவராகவே அறிவித்துக் கொள்கிறார்கள். துளி கூட மனித நேயம் இல்லாத இல்லாதவர்கள் தாங்கள் ஒரு மதத்தையோ ஒரு கடவுளையோ தொடர்பவர்கள் என்று சொல்வது மகா வெட்கக்கேடானது. 

 அமெரிக்கா தனது மக்கள்தொகைக்கு பலமுறை உணவளிக்க போதுமான உணவை உற்பத்தி செய்கிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனாலும், உணவு ஒரு மனித உரிமை என்பதை உறுதிப்படுத்தும் நேரம் வந்தபோது, ​​அமெரிக்கத் தூதர்கள் மறுத்துவிட்டனர்.

 "சர்வதேச சட்டத்தின் வரையறை இல்லாத உணவுக்கான உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை."என அமெரிக்கப் பிரதிநிதி திட்டவட்டமாக அறிவித்தார். 

 "சமநிலையற்றவை, துல்லியமற்றவை மற்றும் விவேகமற்றவை" என்று அவர்கள் அந்தத் தீர்மானத்தில் உள்ள விதிகள் குறித்து சால்ஜாப்புகள் கூறினர்.

 "உணவு இறையாண்மை" என்ற சொற்றொடர் தான் அவர்களைப் பொருத்தமட்டில் உண்மையான முட்டுக்கட்டையாக இருந்தது . 

இது, சமூகங்களின் சொந்த உணவு முறைகளைக் கட்டுப்படுத்தவும், எதை, எப்படி, யாருக்காகப் பயிறிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

இது அமெரிக்கா பல பத்தாண்டுகளாகக் கட்டமைத்து ஏற்றுமதி செய்து வரும் உலகளாவிய வேளாண் வணிக மாதிரிக்கு இடையூறாக அச்சுறுத்துகிறது.

உணவை ஒரு உரிமையாக  ஏற்றுக்கொண்டால், அரசாங்கங்களுக்குப் பொறுப்புகள் உண்டு என்பதையும்  ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று பொருள். அவர்களுக்கு அதுதான் பிரச்சினை. 


இஸ்ரேல் இன்னும் சுத்தம். இஸ்ரேல் தனது வாக்கெடுப்புக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை, ஆனால் சர்வதேசத் தீர்மானங்கள் மீது அமெரிக்காவுடன் ஒத்த கருத்துடன் வாக்களிக்கும் அதன் போக்கு, அதன் நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அவர்கள் இரட்டையர்கள் என்று சொல்வதை விட இரட்டை கொள்ளைகள் என்று சொல்லலாம். 

பொதுவாகவே அமெரிக்காவிற்கு எதிரான கருத்தோட்டம் கொண்ட எந்த ஒரு வாக்கெடுப்பும் வெறும் அடையாளமாகவே தோன்றியது. களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாத, ஐ.நா.வின் மற்றுமொரு தீர்மானமாகவே அது பார்க்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, உணவு ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. காசாவில், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பஞ்சச் சூழலை எதிர்கொண்டுள்ளனர்; அங்கு உதவிப் பொருட்கள் செல்லும் வாகனங்கள் தடுக்கப்பட்டுள்ளன, மேலும் உணவைப் பெற முயன்ற பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனில், தானிய ஏற்றுமதி ஒரு புவிசார் அரசியல் பேரம்பேசும் சக்தியாக மாறியது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பயிர் விளைச்சலை அழித்து, நீர் அமைப்புகளைச் சீர்குலைத்து வருகிறது.


இங்கே ஒரு கசப்பான முரண் உள்ளது. உணவு ஒரு மனித உரிமை அல்ல என்று அமெரிக்கா கூறிக்கொண்டிருக்கும் வேலையில், ஆறு அமெரிக்கக் குழந்தைகளில் ஒருவர் உணவுப் பாதுகாப்பற்ற குடும்பத்தில் வாழ்கிறார். பசி என்பது இனி எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் பிரச்சனை மட்டுமல்ல.

இந்த அமைப்பு எல்லா இடங்களிலும் உடைந்து கொண்டிருக்கிறது.

மக்கள் உண்ணத் தகுதியானவர்கள் என்று 180 நாடுகள் ஒப்புக்கொள்ளும்போது, ​​உலகின் இரண்டு பெரும் செல்வந்த நாடுகள் அதற்கு மறுப்பு தெரிவிக்கும்போது, ​​யாருடைய நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அது உங்களுக்குச் சொல்லிவிடும்.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதி. 



Sunday, 29 March 2026

போர்கள்...

 

தேசங்களுக்கிடையே போர்

நீதியை, 

தம் பக்கத்து 

நியாயம் காத்திடவென...

 பரிதவிப்பதென்னவோ 

பாவப்பட்ட சனங்களே!! 

தேவை சமாதானம்


 சில திரைப்படங்கள் வந்தபோது மிகச் சிறப்பாக இருந்திருக்கும். காலங்கள் செல்ல செல்ல காலத்திற்கு ஒவ்வாததாக மாறிவிடும். சில திரைப்படங்கள் பல காலத்திற்கு நிலைத்திருக்கும். சில திரைப்படங்கள் அப்போதே பார்ப்பதற்க்கு லாயக்கற்றதாய் குப்பையாக இருக்கும். ஆனால் சில திரைப்படங்கள் மட்டும் வரலாற்று சின்னமாய் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பார்த்து ரசிக்கத்தக்கதாய் இருக்கும். 

அரசுகள் ஏராளமாய் மாறி இருக்கலாம். அரசியல் சூழல் கூட மாறி இருக்கலாம். மக்களின் வாழ்க்கை முறை தேவை முறை மாறி இருக்கலாம். ஆனால் மனிதனின் பேராசையும் மண் பொன் பொருளுக்கான மோகமும் பிறரை ஏமாற்றி சுரண்டி கொள்ளையடிக்கும் அக்கிரமங்களும் எல்லா காலங்களிலும் இருக்கும். அதை எதிர்த்து எல்லா காலங்களிலும் போராட்டங்கள் நடைபெறும். அப்படி ஒரு வரலாற்று நிகழ்வினை, ஹிட்லர் முசோலினி போன்றோரின் நாசிச பாசிச வெறியாட்டங்களுக்கு இந்த உலகமே பயந்திருந்த போது அவர்கள் உயிரோடு இருக்கையிலேயே அவர்கள் முன்னமே அவர்களை கிண்டலும் கேலியும் செய்து நையாண்டியாக திரைப்படமெடுத்து பாடம் கற்பித்தவர் சார்லி சாப்ளின். அவரெடுத்த மாபெரும் சித்திரம் தான் "த கிரேட் டிக்டேட்டர்" எனும் இந்த கருப்பு வெள்ளை சித்திரம். இதுவரை 300 கோடி பேர் பார்த்திருந்தாலும் இன்னமும் பார்த்து ரசிக்கக் கூடிய திரைப்படம் இது. 
ஹிட்லர்கள் மாறி இருக்கலாம் முசோலினி மடிந்திருக்கலாம்.சில ஆட்சியாளர்கள் துரத்தப்பட்டு எங்காவது ஓடி இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு வேறு பெயர்களில், வேறு வேறு ரூபத்தில், வேறு வேறு அரசியல் கட்சிகளாக, நாட்டினராக ட்ரம்புகளாக, நெத்தன் யாகுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இதில் கடைசி காட்சியில் சார்லி சாப்ளின் ஆற்றிய உரை தான் இது. 
மிக நீளமாக இருந்தாலும் அறிவு சார் மக்கள் அவசியம் படிக்கத்தான் வேண்டும்.
-சாப்ளினின் "த கிரேட் டிக்டேட்டர்" இறுதி உரை..


இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது..

மன்னித்துக்கொள்ளுங்கள்,

நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை,

அது என்னுடைய வேலையும் அல்ல,

நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை,

முடிந்தால் அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்..

யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன்,

நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும்,

மனிதர்கள் அப்படித்தான்,

நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும்,

அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல,

நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை,

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது,

நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது..

வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும்,

ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம்..

மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது.

அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது,

துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது.

வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்,

ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம்..

ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன்,

நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம்.

நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது.

நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது.

மிதமிஞ்சி சிந்திக்கிறோம்,

மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம்.

இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே..

புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே.

இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும்.

அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.

விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன.

மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே..

இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது.

நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது.

அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது..

நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்,

நம்பிக்கை இழக்காதீர்கள்.

நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை,

பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது.

மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும்.

மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது..

போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள்,

நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும்,

எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்.. உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்..

உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள்.

மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள்.

இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர்கள்,

மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது.

நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள், நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்..

சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்..

17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” 

ஒரு மனிதனுக்குள்ளோ,

ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம்.

எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம், உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்,

மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி, இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி..

மகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி! இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன..

புதியதோர் உலகைப் படைப்போம்,

அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்..

இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள்.

அவர்கள் சொன்னதெல்லாம் பொய்,

அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது..

சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள்.

ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்,

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம், நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க..

அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம்..

வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்..

(ஹிட்லரைப் பகடி செய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்' திரைப்படம்...)

Saturday, 28 March 2026

சிரிப்பே சிறந்த மருந்து...

சிரிப்பு நல்ல மருந்து. சிந்தனையை தூண்டி அறிவாற்றலை உயர்த்தும். 

துன்பங்கள் நேரிடும் போது ஆற்றுப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு சிரிப்பு மிகவும் அவசியம் துக்கங்களிலிருந்து விடுபட சிரிப்பு அவசியம் ஆகவே சிரிப்பு என்பது இல்லாவிட்டால் மனிதனுடைய வாழ்க்கை என்பது எந்திரமாகிவிடும் அல்லது நரகமாகிவிடும் அதனால் தான் திருவள்ளுவர் இக்குறளினை அருளியுள்ளார் 

"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்." 

துன்பங்கள் வரும் போது, ​​மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை

 தன்னையே பார்த்துச் சிரிப்பவனுக்கு, சிரிப்பதற்குரிய விஷயங்களுக்கு ஒருபோதும் பஞ்சம் ஏற்படுவதில்லை.” - எபிக்டெட்டஸ்

உங்கள் சொந்தக் குறைகள், தவறுகள் மற்றும் முழுமையற்ற தன்மைகளைப் பார்த்து நீங்கள் புன்னகைக்க முடிந்தால், வாழ்க்கை மிகவும் இலகுவானதாக மாறிவிடுகிறது. சுய விழிப்புணர்வு பணிவும் ஒன்றிணையும்போது, ​​அவை நம்மை அவமான உணர்விலிருந்து அச்சத்திலிருந்து விடுவிக்கின்றன என்று எபிக்டெட்டஸ் நமக்கு நினைவூட்டுகிறது. நமது மனித இயல்பை மறைப்பதற்குப் பதிலாக, நாம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் - அதன் மூலம், இந்த ஆழமானதொரு வலிமையை நாம் கண்டடைகிறோம்.

இன்று நாடிருக்கும் நிலைமைக்கு மனம் நொந்து போகும் நிலைதான் உள்ளது. எனவே சிரிப்பினும் அருமருந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் இந்த உலகத்தில் உள்ள யாரையும் நம்மால் திருத்த முடியாது. 

Friday, 27 March 2026

காலங்கள் மாறினாலும்....

 உலகில் மனிதன் என்று சமூகத்திலிருந்து அரசாக இயைந்து வாழ ஆரம்பித்தானோ அன்றிலிருந்து, போரில் இறங்கி ஒருவரோ அல்லது இருவரோ ஒரு தரப்போ அல்லது இரு தரப்போ அழிவது என்பது இயற்கையான விடயம் என வரலாறு இயம்புகிறது. 

ஆனால் ஒருவன் புகழ் பெற்று தன்னிறைவோடு வாழ்கிறான் என்றால் பொறாமை கொண்டு, பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் கூட்டு சேர்ந்து அவனை அழிக்க முயற்சி செய்வது, போரிடுவது என்பதும் காலம் காலமாக நடந்து வந்த விடயம் தான். 

இம்மாதிரி தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் இவ்வாறு பாடுகிறார்.

ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டு போவதும் இயல்புதான். ஆனால் ஒருவன் ஏழு பேரைத் தாக்கி அழித்தல் புதுமையானது. அதனை இன்று கண்டோம். இதற்கு முன்பு கண்டதில்லை.பசும்பூண் செழியனின் பெருமையையும் செம்மாப்பையும் அறியாமல் அவனை எதிர்த்துப் போரிடுவோம் என வந்த எழுவரின் கொட்டம் அடங்க வேப்பம்பூவும், உழிஞையும் சேர்த்துத் தலையில் சூடிக்கொண்டு, கிணைப்பறை முழக்கத்துடன் போரிட்டு அழித்தலை இன்றுதான் காண்கிறேன் என்கிறார் இடைக் குன்றூர் கிழார் எனும் புலவர். 

"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,

புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை.... 

நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்

பீடும் செம்மலும் அறியார் கூடி, 

'பொருதும்' என்று தன்தலை வந்த

புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க,

ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே" . புறநானூறு 76



இதை காணும் போது பண்டைக்கால முதல் புகழ்பெற்றிருந்த பாரசீகம் எனும் இன்றைய ஈரானை அழிப்பதற்கு அமெரிக்கா இஸ்ரேல்  அரபு நாடுகள் உள்ளிட்ட கூட்டமைப்பு துடிப்பதை காண்கிறோம்.

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை போலும்....

Thursday, 26 March 2026

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள்

 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்" (குறள் 475) என்பது திருவள்ளுவர் அருளிய திருக்குறள் ஆகும்.

 மிகவும் லேசான மயிலிறாக இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்,அதேபோல வலிமை குறைந்தவர் அல்லது மென்மையானவர் என்று ஒருவரை அற்பமாக எண்ணி, அவர்களுக்குத் தாங்க முடியாத அளவு பொறுப்பையோ, பணியையோ கொடுத்தால், அது அவர்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் குறள் இதுவாகும்.

 இந்தக் குறளின் உண்மையான பொருளைப் படித்த காலத்தை விட பணிக்கு வந்த பிறகு கற்றுக் கொண்டதே அதிகம். 

ஒரு நண்பருக்கு உதவ போய், என்னை பலிகடா ஆக்கி கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் பணி மாற்றம் செய்தார்கள். வேலைக்கு போவதற்கு என்ன பலிகடா என்று நினைக்கிறீர்களா?! 

ஒரு நாளைக்கு சராசரியாக 500 லிருந்து 600 வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்வார்கள். நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி ஒரு நோயாளிக்கு நான்கு அல்லது ஐந்து மருந்துகளை வைத்துக் கொண்டால் எவ்வளவு பேருக்கு மருந்து கொடுக்க எப்படி கஷ்டப்பட வேண்டும், என்பதை புரிந்து கொள்ள முடியும். இது தவிர சராசரியாக 40 லிருந்து 50 உள் நோயாளிகள் வேறு. அரசினுடைய மருத்துவ வழிகாட்டுதல் தரும் மெடிக்கல் கோடில் 150 வெளிப்புற நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுனர் 75 உள் நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுனர் நியமிக்கப்பட வேண்டும். 

அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் பணியாற்ற வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். 

நான் தற்செயலாக மருத்துவமனையின் ஒரு அறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தபோது பழைய பதிவேடுகளைப் பார்க்க நேரிட்டது. கரையான் அரித்த பழைய சம்பளப் பதிவேட்டை பார்த்தபோது, 1930 ஆம் ஆண்டு இரு மருத்துவ அலுவலர்கள், ஒரு கம்பவுண்டர், ஒரு மகப்பேறு உதவியாளர், ஒரு ஆண் செவிலி உதவியாளர், ஒரு ஆண் துப்புரவாளர் ஒரு பெண் துப்புரவாளர் பணியாற்றியதாகத் தெரிந்தது. இன்னும் சொல்ல போனால் 1901 ஆம் ஆண்டு வருடத்திய பதிவேடு கூட நான் பார்த்தேன். அப்படி என்றால் குறைந்தது 125 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த மருத்துவமனை அது.(Local fund dispensary, sub Taluk hospital, Dispensary, Primary Health Centre, Taluk Hospital) உள்ளாட்சி மருந்தகம்,பின்பு ஆரம்ப சுகாதார நிலையமாக அதன் பின் தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது என்று பல்வேறு மாற்றங்களைக் கண்ட மருத்துவ மணையாகும். 

அன்றைக்கு ஒரு கம்பவுண்டர். இன்றைக்கும் ஒரே மருந்தாளுநர். ஒரே பணியிடம் என்றால் நிர்வாகத்திற்கும் அரசிற்கும் என்ன மாதிரியான மனோபாவம், புத்தி இருக்கும் என்பது உங்களுடைய சிந்தனையை விட்டுவிடுகிறேன்.


ஒருமுறை மருத்துவமனை மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அப்போது மருத்துவமனை வளர்ச்சியைப் பற்றி நிறைய விஷயங்கள் பேசப்பட்டன. நான் அனைவருடைய அனுமதியையும் பெற்று மருத்துவமனை நிலை குறித்து பேசினேன். நூறாண்டு காலம் செயல்பட்ட மருத்துவமனை வளர்ச்சி, நோயாளிகளின் எண்ணிக்கை அனைத்தையும் விளக்கி விட்டு பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் மாறவில்லை என்பதை எடுத்துரைத்தேன். எல்லோரும் தீர்மானங்களை போடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். பேரூராட்சி தலைவர் மட்டும் அதைப் பற்றி இங்கே ஏன் பேசுகிறீர்கள் இங்கு பிண பரிசோதனை நடைபெறுவதில்லை, அதை எப்பொழுது நடத்தப் போகிறீர்கள் என்று கேட்டார். நான் ஏற்கனவே இருக்கக்கூடிய பிரச்சனைகள் இப்படி இருக்கும்போது எப்படி செய்ய முடியும் என்று பணியாளர் பிரச்சினையை பற்றி பேசினேன். வாக்குவாதம் ஆகி வெளிநடப்பு செய்து விட்டார். அவ்வளவுதான் ஆகமொத்தம் இந்நிகழ்ச்சி நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதே நிலைமைதான் மாறவே இல்லை. 

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கைக்கு கொஞ்சம் கூட பொருத்தமே ஒரு மருந்தாளுநர் மட்டுமே பணிபுரியக்கூடிய மன நிலையங்கள் உள்ளன.

இதனால் மனவேதனைக்கு ஆளாகி நோய் வாய்ப்பட்டு செத்து சீரழிந்த மருந்தாளுநர்கள் மிக அதிகம் இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது என்று தெரியவில்லை. 

எது சுதந்திரம்?!

 சுதந்திரமாக இருப்பது என்பது, வெறும் ஒருவரின் விலங்குகளைக் களைந்துவிடுவது மட்டுமல்ல; மாறாக, பிறரின் சுதந்திரத்தை மதித்து மேம்படுத்தும் வகையில் வாழ்வதாகும்-நெல்சன் மண்டேலா 
எது சுதந்திரம் என்பதற்கு ஏராளமான வரையறைகள் கூறப்படும். ஆனால் சுதந்திரத்தின் அருமை என்பது அது எவ்வளவு மதிப்பு மிக்கதென்று அடிமைப்பட்டிருப்பவனுக்கு தான் தெரியும். 

சுதந்திரம் என்பது தடையின்றி நினைத்ததைச் செய்யவும், விரும்பியபடி வாழவும், பேசவும், மாற்றங்களை உருவாக்கவும் உள்ள உரிமையாகும். தனிமனித சுதந்திரம் பாலின சுதந்திரம் இனத்தின் சுதந்திரம் நாட்டின் சுதந்திரம் எதுவாக இருந்தாலும் ஒருத்தனை வெறுமனே அடிமை விலங்கிலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல அவனது பொருளாதார சமூக அடிமைத்தனங்களில் இருந்து விடுவிப்பது என்பதுதான். 

ஐநா சபை, சுதந்திரத்தை மனித உரிமைகளின் அடிப்படை தூணாகக் கருதுகிறது. குறிப்பாக கருத்துச் சுதந்திரம் (பிரிவு 19), தனிநபர் உரிமை, மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள் மூலம் உலகெங்கிலும் சமாதானம், ஜனநாயகம், மற்றும் அடிமைத்தனமற்ற சுதந்திரமான வாழ்வை உறுதி செய்வதே ஐநாவின் முக்கிய நோக்கமென்று அறிவித்துக்கொள்கிறது. 

ஆனால் பொருளாதார ரீதியாக நாடுகளை சுரண்டுவதற்கு எந்த விதமான ஒழுங்கு கட்டுமுறையும் இன்றி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்றைக்கு மனித உரிமைகள், நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை தூக்கி குப்பையில் போட்டுவிட்டன . ஐநா சபையை வெறும் பேச்சு மன்றமாக ஆக்கிவிட்டு உலக மக்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் எதார்த்த உண்மை.


Wednesday, 25 March 2026

ஆதித்தமிழரும் அறிவியல் அறிவும்...

 ஆதி காலத்திலேயே தமிழர்கள் இயற்கையையும், அது சார்ந்த விடயங்களையும், ஆராய்ந்து அவற்றை மதித்து வணங்கி வந்தனர் என்பதற்கு ஏராளமாய் இலக்கியச் சான்றுகள் உள்ளன. 

பூமியைச் சுற்றி சூரியனும், இதர கோள்களும் சுற்றி வருவதாக பின்னாளில் சோதிட புளுகர்கள் நம் தலையில் மிளகாய் அரைப்பதற்கு முன்னரே, சூரியனும் அது சார்ந்த விசும்பு ஆகாயம் ஆகிய மண்டலங்கள் பற்றி அறிவு பெற்று இருந்தோம் என்பதை புறநானூற்றுப் பாடல் 30 விளக்குகிறது.

சூரியனின் பயணம், அது இயங்கும் மண்டலம், காற்றின் திசை, வெற்றிடமான ஆகாயம் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து, நேரில் சென்று அளந்தது போலத் துல்லியமாகச் சொல்லக்கூடிய அறிஞர்கள் உள்ளனர்., அது போலசோழன் நலங்கிள்ளியின் புகழைப் பாடும்போது, ஒரு மன்னன் சூரியனைப் போல ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக , புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் வானியல் காட்சிகளைப் பாடியுள்ளார்.

"செஞ் ஞாயிற்றுச் செலவும்,

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,

வளி திரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்று இவை

சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்

இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்

அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி"

அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே ஆகாயம் பற்றிய அறிவு பெற்று இருந்த தமிழர் இன்று அத்தனை விஞ்ஞான கருவிகளும் வந்து கண்ணுக்கு முன்னரே காட்சிகள் காட்டிய பின்னரும் சூரியன், கோள்கள் பற்றிய புளுகுகளை நம்புகிறாரே என்னவென்று சொல்ல?!!! 

Tuesday, 24 March 2026

எது முக்கியம் வெற்றியா அல்லது வெற்றிக்கான வழியா?

நெறிசார்ந்த காரணங்களுக்காக, நெறிபிறழ்ந்த செயலைச் செய்யாதே.” - தாமஸ் ஹார்டி

ஒரு நல்ல காரியத்துக்கு பொய் சொன்னா தப்பில்லை என்றெல்லாம் நிறைய சப்பைக் கட்டுகளை கேட்டிருக்கிறோம். 

தர்மத்திற்கான அல்லது அறத்திற்கான வெற்றியை அடைய அறம் பிறந்த வழியில் சென்றால் தவறில்லை என்று நிறைய புராணக் கதைகள் புருடா கதைகள் எல்லாம் உண்டு .

 ஆனால் அறம் சார்ந்த, அறத்தை மட்டுமே நேசிப்போர், அறவழி காட்டுவோர் ஒருபோதும் அறத்திற்காக, அறம் பிறழ்ந்த வழிமுறைகளை கூறுவது இல்லை. ஏற்றுக் கொள்வதும் இல்லை.

நல்ல நோக்கங்களைக் கொண்டு, தீய செயல்களை நியாயப்படுத்துவதற்கு எதிராக இக்கூற்று எச்சரிக்கிறது. அறநெறி என்பது வெறும் சாக்குப்போக்குகளையோ அல்லது விளைவுகளையோ சார்ந்ததல்ல; மாறாக, அது அச்செயலின் உள்ளார்ந்த நேர்மையையே சார்ந்தது என்று ஹார்டி வலியுறுத்துகிறார். உன்னதமான இலக்குகளை அடைவதற்காகவே எனினும், நாம் நெறிசார்ந்த எல்லைகளை மீறும்போது, ​​நாம் காக்க முற்படுவதாகக் கூறும் அதே அறக்கோட்பாடுகளையே பலவீனப்படுத்துகிறோம்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்கிறார் திருவள்ளுவர். 

 தூய்மையான நெஞ்சுடன் அறவழியில் சென்று, அடையும் வெற்றியால், புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. எனவே அறம் பிறழ்ந்து, நெறி பிறழ்ந்த வழியில் வரக்கூடிய வெற்றி என்பது நெறிசார்ந்த நோக்கமாயினும் தவறே...

இன்று நாடுகளில் தொடங்கி, அரசியல் கட்சிகள், வர்த்தக நிறுவனங்கள் என  தனி நபர்கள் வரை வெற்றி பெறுவதற்காக எந்த வகையிலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நெறியான விஷயங்களை வென்றிட நெறியற்ற முறையில் அடைந்திட முயற்சிக்கக் கூடாது என அறிஞர்கள், அறவழி செல்வோர் கூறுகையில், நெறியற்ற, நேர்மையற்ற செயல்களை விரும்பும் அமைப்புகள் நேர்மையான வழியிலா செல்லப் போகிறார்கள்?! 

Monday, 23 March 2026

அரை உண்மை

 உலகில் மிகவும் வலிமையானது உண்மை. உலகில் மிக மோசமானது அரை உண்மை. 

என்னடா பாதி உண்மை இருக்கிறதே, இதை போய் மோசம் என்று சொல்கிறார்களே என்று கூட நினைக்கலாம். 

பொய் என்பது உண்மைக்கு நேர் எதிரானது, அது எப்போதுமே ஆபத்தானது தான், அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது, அதோடு அனுசரித்துப் போகவும் முடியாது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

உண்மை என்பது சத்தியத்தின் வடிவம். அதை நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுதான் சத்தியம். அது நிரந்தரமானது. 

ஆனால் இந்த இரண்டிற்கும் நடுவே இருக்க கூடிய உண்மை இருக்கிறது அல்லவா அது மிகவும் ஆபத்தானது, மோசமானது, கேவலமானது. 

ஏனெனில் உண்மையை சென்றடைவதை அது தடுக்கிறது, என்பதை விட அது உண்மை முகமூடி மாட்டிய பொய்யின் வடிவம். ஆனால் அது உண்மை கிடையாது. ஒருவர் உண்மையை தேட விடாமல், திசை திருப்பி, பொய்யை உண்மை என்று நம்ப வைக்கும் பச்சை அயோக்கியத்தனம். ஏனெனில் அந்த பாதி உண்மைக்குப் பின் மோசமான பொய் தான் இருக்கிறது. அந்த பொய்யை உண்மை என்று நம்ப வைத்து கழுத்தறுக்கிறது.

 அதனால் தான் அரை உண்மை பொய்யை விட ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது. 

" அரை உண்மை என்பது பொய்யின் மிகவும் ஆபத்தான வடிவமாகும், ஏனெனில் அதை மறுக்க முடியாத தர்க்கத்தின் ஒரு பகுதியைக் கொண்டு நியாயப்படுத்த முடியும்." - மேன்லி ஹால்


ஒரு அரை உண்மை தவறாக வழிநடத்துகிறது, ஏனெனில் அது நியாயமானதாகத் தோன்றும் ஒன்றின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அது துல்லியத்தையும் திரிபையும் கலந்து, கேள்வி கேட்பதை கடினமாக்குகிறது, ஏற்றுக்கொள்வதை எளிதாக்குகிறது. மேலோட்டமாகத் தர்க்கரீதியாகத் தோன்றுவதை விட ஆழமாகப் பார்க்கவும், நம்புவதற்கு அல்லது செயல்படுவதற்கு முன்பு முழுமையான சித்திரத்தை ஆராயவும் ஹால் நமக்கு நினைவூட்டுகிறது.

துரதிஷ்டவசமாக நம் வாழ்க்கையில் அரை உண்மையைத் தான் அதிகம் கண்டு கொண்டிருக்கிறோம் அரசியல்வாதிகளிலிருந்து வியாபாரிகளிலிருந்து, பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் வரை கூறும் அன்றாட வாழ்வில் நாம் அரை உண்மையை தான் உண்மை என்று நம்பி அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறோம்... 


எல்லாம் கவிதை மயம்

இளம் குழவியின்

குழறும் மழைச்சொல்லில்...

ஆரிராரோ பாடி

அழும் குழந்தை

அமர்த்தும் அன்னை சொல்லில்..

கார்காலத்து மண்டூகங்களின்

 கூட்டுக்கூச்சலில்..

கரைந்து உண்ண

அழைத்திடும் காகத்தின்

அறைகூவலிள்..

இலக்கணம் ஏதுமறியா

காதற்கிருக்கனின்

பிதற்றலில் கூட

இருக்கலாம்...

எல்லாம் கவிதை மயம்...


Saturday, 21 March 2026

சமகால சமூகம்"

 வந்தது தேர்தல்

மகிழ்ந்தனர் மாந்தர்.. 

ஆட்டபாட்ட அலப்பறைகள்

அளவின்றி காண்பீர்.. 

கொள்கைகள் மறந்த

கூட்டணி பேச்சுக்கள்.. 

குவாட்டருக்கும் பிரியானிக்கும்

குவியும் கூட்டங்கள்...

வானத்தையே வளைத்து 

வர்ணஜால வாக்குறுதிகள்.. 

கோடை மழைபோல்

குமுறிடும் பேச்சுமழை... 

காசுக்கு விலைபோன 

காக்கா மீடியாக்கள்... 

இத்தனைக்கும் நடுவில் 

மாற்றங்கள் தேடும்

"சமகால சமூகம்" 



எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...