"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது, உணவளிப்பவர் உயிர் காப்பவருக்குச் சமம் என்பதை உணர்த்தும் பழமையான தமிழ் இலக்கியப் பொன்மொழி. இது புறநானூறு 18வது பாடல் மற்றும் மணிமேகலை போன்ற நூல்களில் பசியின் கொடுமையையும், உணவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
நாகரீகமான உலகில் எல்லா மனிதருக்கும் அத்தியாவசியமான தேவை உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு.......
என்ன அடுக்கிக் கொண்டே போகிறேன் என்று பார்க்கிறீர்களா?! சரி? எல்லா உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது உணவு, நீர், அல்லவா?.
அப்படியாயின் நாகரீகம் அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் மனித இனத்திற்கு, தன்னுடைய இனத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதை அடிப்படை கடமையாக கொண்டிருக்க வேண்டும் அல்லவா.
உணவு ஒரு மனித உரிமை என்பது வெளிப்படையானது, இல்லையா?
2021-ல், ஐக்கிய நாடுகள் சபை "உணவுக்கான அணுகல் ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்றொரு தீர்மானத்தை முன்வைத்தது. அதன் நோக்கம் எளிமையானது. மிக மிக சாதாரணமானது. ஏனென்றால் உலகம் போருக்கு அல்லது போர் என்ற பெயரில் அழிவுக்கு செலவிடும் தொகையில் உணவுக்கான செலவு என்பது மிகக் குறைவானதே. இந்த தீர்மானத்தைக் கூட எதிர்க்க யாராவது இருக்கிறார்களா என்ன என்று நினைப்பீர்கள்.
ஆம். 193 உறுப்பு நாடுகளில், 180 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
இரண்டு நாடுகள் எதிராக வாக்களித்தன.
யார் அந்த மனிதாபிமானமிக்க மேதாவிகள் என்று பார்க்கிறீர்களா? வேறு யார்!
அகில உலக போலீஸ்காரனான அமெரிக்காவும், உலக மகா சமாதான தூதுவனான இஸ்ரேலும்.தான்.
இதை நன்கு யோசித்துப் பாருங்கள். பூமியில் உள்ள மிகவும் செல்வந்த மற்றும் உணவுப் பாதுகாப்பு மிகுந்த இரண்டு நாடுகள், மனிதர்கள் உண்ணத் தகுதியானவர்கள் என்ற அடிப்படைக்கொள்கையை கூட நிராகரிப்பதில் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இன்றி தனித்து நிற்கின்றனர்.
அந்தத் தீர்மானம் அப்படி ஒன்றும் பொதுவுடமை கொள்கை போன்று தீவிரமானதாக இருக்கவில்லை. பசி என்பது ஒரு பெரும் அநீதி மற்றும் மனித மாண்பின் மீதான மீறல் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவ்வளவே.. 2020-ல், போதுமான உணவு கிடைக்காத மக்களின் எண்ணிக்கை 240 கோடியாக உயர்ந்துள்ளது, இது உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும் என்பதை ஏற்றுக்கொண்டது. 72 கோடி முதல் 81 கோடி வரையிலான மக்கள் பசியை எதிர்கொண்டனர்.
மனித குலம் எவ்வளவோ வளர்ச்சிகளை கண்டபின் என்கிற கண்டுபிடிப்புகளுக்கு பின் தொழிற்புரட்சி விவசாய புரட்சி எல்லாம் கண்டு உலக மக்களுடைய தேவைக்கு மேலே உற்பத்தி செய்த பின்னர் கூட மூன்றில் ஒரு பகுதி மக்கள் பசியோடு பாடுகிறார்கள் என்றால் இது வெட்கக்கேடு இல்லையா,?
உலக நாடுகளில் பெரும்பாலானவர்கள் தங்களை ஏதோ ஒரு மதம் சார்ந்தவராகவே அறிவித்துக் கொள்கிறார்கள். துளி கூட மனித நேயம் இல்லாத இல்லாதவர்கள் தாங்கள் ஒரு மதத்தையோ ஒரு கடவுளையோ தொடர்பவர்கள் என்று சொல்வது மகா வெட்கக்கேடானது.
அமெரிக்கா தனது மக்கள்தொகைக்கு பலமுறை உணவளிக்க போதுமான உணவை உற்பத்தி செய்கிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனாலும், உணவு ஒரு மனித உரிமை என்பதை உறுதிப்படுத்தும் நேரம் வந்தபோது, அமெரிக்கத் தூதர்கள் மறுத்துவிட்டனர்.
"சர்வதேச சட்டத்தின் வரையறை இல்லாத உணவுக்கான உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை."என அமெரிக்கப் பிரதிநிதி திட்டவட்டமாக அறிவித்தார்.
"சமநிலையற்றவை, துல்லியமற்றவை மற்றும் விவேகமற்றவை" என்று அவர்கள் அந்தத் தீர்மானத்தில் உள்ள விதிகள் குறித்து சால்ஜாப்புகள் கூறினர்.
"உணவு இறையாண்மை" என்ற சொற்றொடர் தான் அவர்களைப் பொருத்தமட்டில் உண்மையான முட்டுக்கட்டையாக இருந்தது .
இது, சமூகங்களின் சொந்த உணவு முறைகளைக் கட்டுப்படுத்தவும், எதை, எப்படி, யாருக்காகப் பயிறிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இது அமெரிக்கா பல பத்தாண்டுகளாகக் கட்டமைத்து ஏற்றுமதி செய்து வரும் உலகளாவிய வேளாண் வணிக மாதிரிக்கு இடையூறாக அச்சுறுத்துகிறது.
உணவை ஒரு உரிமையாக ஏற்றுக்கொண்டால், அரசாங்கங்களுக்குப் பொறுப்புகள் உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று பொருள். அவர்களுக்கு அதுதான் பிரச்சினை.
இஸ்ரேல் இன்னும் சுத்தம். இஸ்ரேல் தனது வாக்கெடுப்புக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை, ஆனால் சர்வதேசத் தீர்மானங்கள் மீது அமெரிக்காவுடன் ஒத்த கருத்துடன் வாக்களிக்கும் அதன் போக்கு, அதன் நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அவர்கள் இரட்டையர்கள் என்று சொல்வதை விட இரட்டை கொள்ளைகள் என்று சொல்லலாம்.
பொதுவாகவே அமெரிக்காவிற்கு எதிரான கருத்தோட்டம் கொண்ட எந்த ஒரு வாக்கெடுப்பும் வெறும் அடையாளமாகவே தோன்றியது. களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாத, ஐ.நா.வின் மற்றுமொரு தீர்மானமாகவே அது பார்க்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, உணவு ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. காசாவில், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பஞ்சச் சூழலை எதிர்கொண்டுள்ளனர்; அங்கு உதவிப் பொருட்கள் செல்லும் வாகனங்கள் தடுக்கப்பட்டுள்ளன, மேலும் உணவைப் பெற முயன்ற பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனில், தானிய ஏற்றுமதி ஒரு புவிசார் அரசியல் பேரம்பேசும் சக்தியாக மாறியது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பயிர் விளைச்சலை அழித்து, நீர் அமைப்புகளைச் சீர்குலைத்து வருகிறது.
இங்கே ஒரு கசப்பான முரண் உள்ளது. உணவு ஒரு மனித உரிமை அல்ல என்று அமெரிக்கா கூறிக்கொண்டிருக்கும் வேலையில், ஆறு அமெரிக்கக் குழந்தைகளில் ஒருவர் உணவுப் பாதுகாப்பற்ற குடும்பத்தில் வாழ்கிறார். பசி என்பது இனி எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் பிரச்சனை மட்டுமல்ல.
இந்த அமைப்பு எல்லா இடங்களிலும் உடைந்து கொண்டிருக்கிறது.
மக்கள் உண்ணத் தகுதியானவர்கள் என்று 180 நாடுகள் ஒப்புக்கொள்ளும்போது, உலகின் இரண்டு பெரும் செல்வந்த நாடுகள் அதற்கு மறுப்பு தெரிவிக்கும்போது, யாருடைய நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அது உங்களுக்குச் சொல்லிவிடும்.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதி.

No comments:
Post a Comment