உலகில் மனிதன் என்று சமூகத்திலிருந்து அரசாக இயைந்து வாழ ஆரம்பித்தானோ அன்றிலிருந்து, போரில் இறங்கி ஒருவரோ அல்லது இருவரோ ஒரு தரப்போ அல்லது இரு தரப்போ அழிவது என்பது இயற்கையான விடயம் என வரலாறு இயம்புகிறது.
ஆனால் ஒருவன் புகழ் பெற்று தன்னிறைவோடு வாழ்கிறான் என்றால் பொறாமை கொண்டு, பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் கூட்டு சேர்ந்து அவனை அழிக்க முயற்சி செய்வது, போரிடுவது என்பதும் காலம் காலமாக நடந்து வந்த விடயம் தான்.
இம்மாதிரி தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் இவ்வாறு பாடுகிறார்.
ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டு போவதும் இயல்புதான். ஆனால் ஒருவன் ஏழு பேரைத் தாக்கி அழித்தல் புதுமையானது. அதனை இன்று கண்டோம். இதற்கு முன்பு கண்டதில்லை.பசும்பூண் செழியனின் பெருமையையும் செம்மாப்பையும் அறியாமல் அவனை எதிர்த்துப் போரிடுவோம் என வந்த எழுவரின் கொட்டம் அடங்க வேப்பம்பூவும், உழிஞையும் சேர்த்துத் தலையில் சூடிக்கொண்டு, கிணைப்பறை முழக்கத்துடன் போரிட்டு அழித்தலை இன்றுதான் காண்கிறேன் என்கிறார் இடைக் குன்றூர் கிழார் எனும் புலவர்.
"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை....
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி,
'பொருதும்' என்று தன்தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க,
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே" . புறநானூறு 76
இதை காணும் போது பண்டைக்கால முதல் புகழ்பெற்றிருந்த பாரசீகம் எனும் இன்றைய ஈரானை அழிப்பதற்கு அமெரிக்கா இஸ்ரேல் அரபு நாடுகள் உள்ளிட்ட கூட்டமைப்பு துடிப்பதை காண்கிறோம்.
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை போலும்....
.
No comments:
Post a Comment