சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 19 March 2026

யார் சிறந்த ஆட்சியாளன்?!

ஒரு சிறந்த ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்ற தமிழ் கூறும் நல்லுலகு, சங்க இலக்கியங்களிலேயே தனது ஆழ்ந்த கருத்துக்களை பதிவிட்டுள்ளது. நம்மவன், அயலவன் என்ற வெறுப்பு வெறுப்பின்றி, அறநெறி பிறழ்ந்திடாமல் அனைவருக்கும் பொதுவானவனாய் திகழ்ந்திட வேண்டும். இல்லை எனில் வந்து நம்மை முன்பு ஆண்ட மாற்றானே தேவலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது.

 உதாரணத்துக்கு நம் நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். சில பெருசுகள் இப்போது இருக்கும் கொள்ளைக்காரனை விட முன்னாடி இருந்த வெள்ளைக்காரனே தேவலாம் என்று புலம்புவதை கேட்டிருக்கிறோம்.

 நமக்கு கேட்கும் போது கோபமும் எரிச்சலும் தான் வரும்.

காரணம் நம்மை ஆள்பவர்கள் எனக்கு நீயா வாக்களித்தார்? நான் ஏன் உனக்கு செய்ய வேண்டும்? அல்லது பரிசு பொருள் வாங்கிக் கொண்டுதானே வாக்களித்தாய்? அல்லது நாங்கள் ஆளப்பிறந்தவர்கள்! எங்களை யாரும் அசைக்க முடியாது!!... நாங்கள் மைய அரசு.. நீங்கள் யார் எங்களை கேட்பதற்கு என்ற கர்வத்தோடு மக்களை நிர்த்தாட்சண்யமாய், நிராகரித்து ஆள்வதால் தான் நொந்து போய் அவ்வாறு கூறுகின்றனர்.

ஒரு மன்னனுக்குரிய கடமைகளையும், அறநெறி சார்ந்த ஆட்சியின் சிறப்பையும் மதுரை மருதன் இளநாகனார் புறநானூறு 55-வது பாடல் மூலம் உரைக்கிறார்..

பெரிய கொடிகள், நேர்த்தியான தேர்கள், வீரமிக்க வீரர்கள், வலிமையான புகழை உடையவர்கள் என நான்கு வகையான செல்வங்கள் இருந்தாலும், அரசனின் வெற்றி என்பது அறநெறி சார்ந்த ஆட்சியில் தான் உள்ளது.

 மன்னன் தன் மக்கள், பிற மக்கள் என்ற வேறுபாடின்றி, சூரியனைப் போன்ற வீரம், சந்திரனைப் போன்ற குளிர்ந்த தன்மை, மற்றும் வானம் போன்ற கொடைத்திறன் கொண்டு, அறநெறி தவறாமல் செங்கோல் ஆட்சி நடத்தி, நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார் .

“...நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என

நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;

அதனால், நமரெனக் கோல்கோ டாது,

பிறர்எனக் குணங் கொல்லாது,

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும் மூன்றும்

உடையாய் ஆகி இல்லோர் கையற

நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்

கடுவளி தொகுப்ப ஈண்டிய

வடுஆழ் ஏக்கர் மணலினும் பலவே!"

இது போலத்தான் நமக்கும் ஆட்சியாளர்கள் வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஆனால் ஒரு கவிஞர் கூறியதைப்போல

பட்டு வேட்டியைப்பற்றி கனாக்கண்டு கொண்டிருக்கையில்

இடுப்பு வேட்டியும் களவாடப்பட்டுக்கொண்டிருக்கிறதே!!! 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...