சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 18 March 2026

தேர்தல் திருவிழா 2

 தேர்தல் என்றவுடன் ரொம்ப நாளா ஒரு விஷயத்தை பெருமையா பீத்திக் கொண்டே இருந்தோம். அது என்னடான்னா ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே, இங்க தமிழ் பேசும் நல்லுலகில் தேர்தல் முறை நடந்ததாம். 

உலகம் பூரா மன்னராட்சி நடந்துட்டு இருந்த காலத்துல தேர்தல் முறையா? அதிசயமா இருந்தது!. உலக அரசியலமைப்பு முறையில் மன்னராட்சி, நிலப்பிரபுத்துவம் மட்டுமே இருந்த காலத்துல, தொழில் புரட்சி ஏற்பட்டு முதலாளிகள் கூட்டம் வந்து சேர்ந்தது. ஏராளமான தொழிலாளர்கள் வந்து சேர்ந்தாங்க. அது சார்ந்த வணிகர்கள் நிறைய பேர் வந்தாங்க .வழக்கம் போல மன்னராட்சி முறை எல்லாரையும் அடக்கி ஆளும்போது, புது பணக்காரர்களான முதலாளிகளும் அறிவு ஜீவிகளும் உருவாக்கினது தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் முறை. மன்னராட்சியை கட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து பொதுமக்களும் பங்கேற்க கூடிய தேர்தல் முறையாக உருவாக்கினார்கள். 

இது வரதுக்கு ரொம்ப காலம் பிடிச்சது. 16, 17, 18 ஆம் நூற்றாண்டு காலங்களில் தான் ஐரோப்ப நாடுகள் ஆரம்பிச்சு இரண்டாம் உலகப் போருக்கு பின்னாடி கிட்டத்தட்ட உலகம் முழுமைக்கும் ஓரளவுக்கு,  பெயர் அளவிலோ ஜனங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிற நாடாளுமன்ற தேர்தல் முறை வந்தது. அதுலயும் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தா கூட ஏனென்று கேள்வி கேட்க முடியாத மன்னராட்சி காலத்துக்கு இது பெரிய புரட்சிகரமான மாறுபட்ட அரசியலமைப்பு தான். 

அப்படி இருக்கும்போது நம்ம ஊருல குட ஓலைமுறை எப்படி இருந்ததுன்னு கொஞ்சம் பார்ப்போமே... 

குடவோலை முறை என்றால் என்ன?

குடவோலை என்பது சோழர்கள் காலத்தில் நடை முறையில் இருந்த நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

இடைக்காலச் சோழர்களின் ஆட்சி காலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இந்த குடவோலை முறை தேர்தல் நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

இதில் இரண்டு காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன. இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் முதலாம் பராந்தக சோழன் ஆவான். 

இதை படிச்ச உடனே ஆஹா எல்லோரும் ஓட்டு போடலாம் போல இருக்கே.. அப்படின்னு நினைச்சுறாதீங்க... தேர்தல்ல நிக்கிறதுக்கு என்ன தகுதி என்று கொஞ்சம் பாருங்க.. 

உத்திரமேரூர் கல்வெட்டின்படி வேட்பாளராக நிற்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதி

*கால் நிலத்துக்கு மேல் அரை நிலம் உடையவர்

*தனது நிலத்திலேயே வசிக்க வீடு கட்டிக் கொண்டுள்ளவர்

*35 வயதிலிருந்து 70 வயதிற்குட்பட்டவர்

*3 ஆண்டுகளுக்குள் வாரியப்பணி புரியாதவர்

*வேதங்கள் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்

*ஒரு வேதமாவது அறிந்தவனுக்கு அரைக்கால் நிலம் இருந்தாலும் போதும்

*அவர்கள் தொழிலில் நிபுணனாக இருத்தல் வேண்டும்

*பொருள் சுத்தம் மனச் சுத்தம் உடையான்…

அதாவது சொந்தமா நிலம் இருக்கணும். அது கூட பரவாயில்லை. கட்டாயம் வேதத்தை படிச்சிருக்கணும். மத்தவங்களுக்கு எடுத்துச் சொல்லணும். அப்படின்னா பிராமணனை தவிர வேற யாரும் வர முடியாது. 

ஏன்னா நிலங்களை பறிச்சு சதுர்வேதிமங்கலம்னு பிராமணர்கள் கையில மன்னர்கள் கொடுத்தார்கள். இன்னொரு பக்கம் சமஸ்கிருதம் பிராமணர்கள் மட்டுமே படிக்கக் கூடிய மொழியாக இருந்தது. சூத்திரர்கள் காதுகளில்  சமஸ்கிருதமே விழக்கூடாது என்று நிலைமை இருந்தது. அப்படின்னா வேற யாரு வருவா. சுத்தமான பார்ப்பனியம் தான் அது...


இந்த முறையை எப்படி சோழர் காலத்தில், மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுத்த முறையை இன்றைய ஜனநாயக முறைக்கு முன்னோடி எனச் சொல்லலாம்னு தெரியலை. 

சோழமன்னன் இராஜராஜன் காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் நிர்வாகத்தலைவரை தேர்ந்தெடுக்கும்போது, அந்த ஊரில் அதற்குத் தகுதியுள்ளவர்கள் யார்யாரெனப்பார்த்து ஊர்மக்கள் முன்னிலையில் அவர்கள் அத்தனைபேரின் பெயரையும் ஒவ்வொரு ஓலையில் ஒருபெயரெனெழுதி, எல்லோலைகளையும் ஒருகுடத்திற்குள் போட்டு ஏதேனும் ஒரு குழந்தையைகொண்டு குடத்திலிருந்து ஏதேனும் ஒரு ஓலையை எடுக்கச்சொல்லி அதில் யார்பெயர் இருக்கிறதோ அவரை தலைவராக நியமித்தார்கள். இதுவே குடவோலைமுறை என்பது.

குடவோலை என்பது ஜனநாயக முறையிலானதா?

நிச்சயம் இல்லை. குடவோலை முறையில் ( ஸம்சத்வர வாரியம்,ஏரி வாரியம், தோட்ட வாரியம் பொன்றவை ) தேர்ந்தெடுக்கப்பட உயர் சாதி மக்கள் மட்டுமே (பார்ப்பனர், வேளாளர்) தகுதி பெற்றவர் ஆவார். அவர் பெயர் மட்டுமே ஓலையில் எழுதி குடத்தில் போடப்படும். அது தேர்வு மட்டுமே, தேர்தல் இல்லை. இது உயர் சாதி மக்களுள் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் முறையும் அல்ல. மற்ற சாதியினரை தகுதி நீக்கம் செய்ய நிலம் (கால் வேலி நிலம்) ,வீடு உடைமை, வரி கொடுப்பது, ஒரு வேதத்திலாவது அறிவு, நன்நடத்தை , தூய மனம் , மந்திர பிரமாணத்தை அறிவது மற்றும் அதை மற்றவர்க்கு போதிக்க திறமை இருப்பது போன்றவை தகுதியாக வைக்கப்பட்டது. இதையா நாம ஜனநாயக முறைன்னு இவ்வளவு நாளா பீத்திக்கிட்டு இருந்தோம்... 


இன்னும் தொடரலாமா?!.. 



No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...