தமிழ் கூறும் நல்லுலகு சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களாலும், பல்லவர் பேரரசர்களாலும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டிருந்திருக்கின்றன . அவ்வாறு ஆண்ட குறுநில மன்னர்களில் வேளிர்களும் மிக முக்கியமானவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் இன்று அழைக்கப்படக்கூடிய பகுதி முன்பு பன்றி நாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது இப்பகுதியானது தொல்பொருள் புதையல் அதாவது தொல்பொருள் கட்டிடக்கலைகளின் கருவூலம் என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான வரலாற்று நினைவுச் சின்னங்களை விட்டுச் சென்றிருக்கிறது.
அவற்றில் முக்கியமானது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கற்றளி கோயில் நார்த்தாமலை என்று அழைக்கப்படக்கூடிய நகரத்தார் மலையில் அமைந்துள்ளது.
ஆதிகாலங்களில் கோயில்கள் மரங்களால் கட்டப்பட்டிருந்தன .பிற்காலத்தில் மலைகளைக் குடைந்து குடைவரை கோயில்களாகக் கட்டப்பட்டன. அதன் பின் கற்களை கொண்டு கட்டப்பட்ட கற்றளி கோயில்கள் உருவாகின. அதன் பின் சுண்ணம் ஆகியவற்றால் எடுத்துக் கட்டப்பட்ட கோயில்களும், தற்போது உள்ள சிமென்ட், கம்பி போன்றவற்றைக் கொண்டு கட்டப்படும் நவீன கோயில்கள் வரை ஏராளமாய் உள்ளன .
விஜயாலய சோழீஸ்வரம் அமைந்திருக்க கூடிய இடத்தில் மூன்று கோயில்கள் உள்ளன . குடைவரைக் கோயில், கற்றளி கோயில் என இரு விதமான கோயில் அமைப்புகளும் இந்த இடத்தில் உள்ளன . .
கோயில் கட்டிட வகை நகரா, திராவிட வேசரா என்று மூன்று வகைப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் திராவிட பணியில் அமைந்தது. இக்கலைப்பாணியில் விமானத்தின் சிகரம் வட்ட வடிவமாக இருக்கும். இது ஓரளவு மகாபலிபுரம் கோயில்களில் பார்க்கலாம். ஆனால் இங்கு அந்த சிகர வடிவம் முழு வட்டமாக முழுமை அடைந்திருக்கக் கூடியவை காண முடிகிறது அடிப்பகுதியானது சதுர வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான கோபுர அமைப்பு இங்கு மட்டுமே காண முடியும். இக்கோயிலை சுற்றி பரிவார தேவதைகளுக்கு ஆறு சிறு கோயில்கள் உள்ளன. ஏழாவதாக ஒரு கோயிலின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. எட்டு கோயில்கள் இருந்திருக்கலாம் என தெரிகிறது. கருவறைக்கு முன்னால் அர்த்தமண்டபம் ஆறு தூண்களோடு உள்ளது. துவார பாலகர் என்று அழைக்கப்படக்கூடிய வாயில் காவலர் இருவரது சிலை உள்ளது. விமானம் நான்கு அடுக்குகளை கொண்டுள்ளது. உள்புறம் கூட உள்ளது. அதாவது கற்களால் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி கோர்த்து கட்டப்பட்ட வெயிட் கவுண்டர் வைட் எடை எதிர் எடை என்று அழைக்கப்படக்கூடிய பௌதீக தத்துவத்தின் அடிப்படையில் சிற்பங்களோடு கூடிய கற்பலகைகளை கோர்த்து கோபுர அமைப்பு உள்ளது. உள்பகுதி கூடாக இருக்கும். விமானத்தின் சிகரம் வட்ட வடிவில் இருக்கும். விமானத்தின் மாடங்களில் வீணா தட்சிணாமூர்த்தி உமா மகேஸ்வரர் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.
துவார பாலகர் சிலைக்கு கீழ் உள்ள கல்வெட்டில் இருந்து, இக்கோயிலை சாத்தம்பூதி என்ற இளங்கோவதி முத்தரையர் என்ற சிற்றரசனால் கட்டப்பட்டிருக்கலாம். என்றும் பின்னால் தென்னவன் தமிழ் திரையன் என்ற முத்தரைய சிற்றரசினால் புதுப்பிக்கப்பட்டது என்பதும் தெரிகிறது.
"ஸ்வஸ்தி ஸ்ரீ சாத்தம் பூதியான
இளங்கோவதி அரையன் எடுத்த கற்றளி
மழை இடித்தழிய மல்லன் விதுமன் ஆயின தென்னவன் தமிழதிரையன் புதுக்கு"
என்ற கல்வெட்டின் மூலம் இந்த கோயில் கிபி 820 லிருந்து 850க்குள் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். அதாவது இந்த கோயில் விஜயாலய சோழன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கட்டப்பட்டிருப்பது தெரிய வருகிறது. விஜயாலய சோழன் என்ற மன்னன் ராஜராஜ சோழனின் கொள்ளு தாத்தாஆவார்.
இந்தக்கோயிலுக்கு எதிரில் சமணர் குடகு என்று அழைக்கப்படக்கூடிய திருமால் கோயில் ஒன்று உள்ளது. இந்த வைணவ கோயிலிலே கேசவன் நாராயணன் மாதவன் கோவிந்தன் திரு விக்ரமன் வாமணன் அச்சுதன் ஸ்ரீதரன் பத்மநாபன் வாசுதேவன் மதுசூதனன் என திருமாலின் பன்னிரு திருக்கோலங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக காட்சியளிக்கின்றன இந்த கோயிலுக்கு முன்பு ஒரு மண்டபம் அழிந்திருக்கலாம் என்று தெரிகிறது அந்த மண்டபத்தின் மேடையின் மூன்று பக்கங்களிலும் யானைகள் பலவிதமான யாழிகள் காமதேனு போன்ற சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள எல்லாவற்றிலும் மிகவும் ஆச்சரியமான ஸ்பிங்ஸ் சிற்பம் தான் இங்கு அமைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. மனித முகமும் சிங்க உடலும் கொண்ட எகிப்து பானி சிற்பமாகும் . இங்கு வணிகர்கள் வணிக நிமித்தமாக எகிப்து உள்ளிட்ட மேலை நாடுகளோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு இது .
ஆரம்பத்தில் சமணர் குகையாக இருந்த இந்த குகை மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் 1228 ல் வைணவ குகையாக மாறியது என இங்கு உள்ளது கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது .இந்த குகையானது பதினெண் பூமி விண்ணகரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அருகிலேயே பழியிலியீச்சுரம் என்று அழைக்கப்படக்கூடிய குடைவரைக் கோயிலில் சிவலிங்கமும் துவார பாலகர் சிற்பங்களும் அமைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. இவ்வாறு சைவ வைணவ ஒற்றுமையின் அடையாளமாக, ஒரே வளாகத்திற்குள்ளேயே சிவன் பெருமாள் கோயில்கள் அமைந்திருக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இது.
இதன் அருகில் மேல மலைக்கு செல்லும் வழியில் உள்ள தலை அருவி சிங்கம் துணை என் கீழ் ஜுரஹரேஸ்வரர் என்னும் லிங்கம் ஒன்று உள்ளது. 1857 இல் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் சுனையின் நீரை இறக்கி இந்த லிங்கத்திற்கு வழிபாடு செய்ததாக சுனைக்கு அருகில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. மிக நீண்ட காலத்திற்குப் பிறகு அந்த சுனை நீர் இறைக்கப்பட்டு உள்ளே இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள ஏராளமான கற்றளிகோவில்களில் பழமையான மிக அழகான கற்றிலி கோயில் விஜயாலய சோழீஸ்வரம் என்றால் மிகையாகாது.
இந்த பகுதிகளை சுற்றி ஏராளமான பௌத்த, சமண கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் நிறைய உள்ளன.
அருகில் உள்ள சித்தன்னவாசல் இடத்தில் உள்ள குடைவரைக் கோயிலில் சமண மதத் துறவிகளுடைய சிலைகள் உள்ளன. அதேபோல நார்த்தாமலை மலையிலிருந்து விஜயாலய சோளீஸ்வரம் வரும் வழியில் தலை உடைக்கப்பட்ட மகாவீரர் சிலை ஒன்று இருப்பதைக் காணலாம்.











No comments:
Post a Comment