சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 17 March 2026

தேர்தல் திருவிழா 1

 தேர்தல் திருவிழா வந்துவிட்டது. திருவிழா என்றாலே எல்லோருக்கும் ஒரு கொண்டாட்டம் தான். பலதரப்பட்ட மக்கள் அவரவர் விரும்புகிற மாதிரி பல விஷயங்கள் நடைபெறும். 

கோவில் திருவிழாவிற்கு நாள் குறித்து விட்டார்கள் என்றால் யாரும் வெளியூர் போக மாட்டார்கள்.  திருவிழா கொண்டாட்டத்தில் ஆட்டப்பாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அர்ச்சகருக்கு வருமானத்திற்கு பஞ்சம் இருக்காது. பூ வியாபாரிகள்  அர்ச்சனை சாமான்கள் விற்பவர்கள், பலூன் வியாபாரிகள், வித்தை காட்டுபவர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆருடம் சொல்பவர்கள், தின்பண்ட பலகார கடை வைத்திருப்பவர்கள், துணி வியாபாரிகள் என ஆரம்பித்து எல்லோரும் கொண்டாட்டமாய் இருப்பார்கள். 

அவரவர் சாதிசனத்திற்கு வசதிக்கு ஏற்பட்டவாறு மண்டகப்படிகள் நடத்துவார்கள். கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம், கூத்து, இசை கச்சேரி, என  ஊரே களை கட்டும். நாடகத் தெருக்கூத்து நடிகர்கள் ஆடல் கலைஞர்கள், பட்டிமன்ற பேச்சு வியாபாரிகள் ,ஏன் பிக்பாக்கெட்கார்கள், செயின் பறிப்பவர்கள்கூட குஷி ஆகி விடுவார்கள். எல்லோரிடமும் பணம் புழங்கும். எல்லாம் நடந்து முடிந்த பின் மக்கள் ஓய்ந்து விடுவார்கள். 

கிட்டத்தட்ட தேர்தலும் அது போல தான். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசு நிர்வாக இயந்திரம் அல்லோகலப்படும். அரசியல்வாதிகள்  கூட்டணி பேச்சு வார்த்தை அது இது என்று அந்தர் பல்டிகள் அடிப்பார்கள். 

ரோடு ஷோக்கள், பொதுக்கூட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. பொதுக்கூட்டங்களுக்கு மைக் செட் கட்டுபவர்கள், தோரணங்கள் கொடி கட்டுபவர்கள், கூட்டங்களுக்கு ஆள் சேர்த்து வருபவர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஜருராகி விடுவார்கள். அன்றாடம்காச்சிகள் யார் கூப்பிட்டாலும் காசு வாங்கிக் கொண்டு கூட்டங்களுக்கு செல்வார்கள். வேட்பாளர்கள் ஜம்பமாய் அளந்து விடுவார்கள். அவர்களுக்கு பணியாற்றுவோர் பகிரங்கமாய் வீடு வீடாய் போய் வாக்கு சேகரிப்பார்கள். யாருக்கும் தெரியாமல் திருடர்களைப் போல் ஒளிந்து போய் காசு கொடுப்பார்கள். கட்சித் தலைவர்களிடம் இருந்து கடை மட்ட தொண்டர்கள் வரை காசு புழக்கத்தோடு கொண்டாட்டமாய் இருப்பார்கள். இதில் அடிதடி, ரவுடித்தனம் செய்பவர்களுக்கும் வேலை இருக்கும் வாய்ப்பிருக்கும். வாய்ப்பிருப்பவர்கள் கள்ளத்தனம் பண்ணி ஜெயிக்க பார்ப்பார்கள். ஆருடம் சொல்பவர்களைப் போல தேர்தல் நேரங்களில் பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் தேர்ந்த ஞானிகளை போல ஆளாளுக்கு ஜோசியம் சொல்வதைப் போல அளந்து விடுவார்கள். புளுகுவார்கள் என்று சொல்லக்கூடாது, தேர்தல் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துக்களை திணிப்பார்கள். 

தேர்தல் முடிந்த பிறகு எல்லோரும் எப்பொழுதும் போல அவரவர் வேலையை பார்க்க போய்விடுவார்கள்.

தேர்தல் முடிந்த பிறகு ஜெயித்தவர்கள் வெற்றியைப் பற்றி புள்ளி விவரங்களோடு அளந்து விடுவார்கள் தோற்றவர்கள் தோல்விக்கான காரணங்கள் பற்றி புள்ளி விவரங்களோடு கண்ணீரோடு கதைகள் சொல்லுவார்கள். ஒரு சில விபரம் தெரிந்தவர்கள் மட்டும் ஆய்வுகள் நடத்தி நடந்து முடிந்த தேர்தல்கள் பற்றி ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள். அறிவு ஜீவிகள் படித்துவிட்டு போய்விடுவார்கள் அவ்வளவு தான்...



தொடர்வோமா? 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...