சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 25 May 2026

எது சுதந்திரம்?!

 " சுதந்திரம் என்பதற்கு ஏதேனும் அர்த்தம் இருந்தால், அது மக்கள் கேட்க விரும்பாததை அவர்களிடம் சொல்லும் உரிமைதான்." - ஜார்ஜ் ஆர்வெல்

"எது சுதந்திரம்" என்ற கேள்விக்கு நிறைய பேருடைய பதில் என்னவென்றால், தாங்கள் விரும்பும் கருத்துக்களை கூறுவதை பிறர் ஏற்றுக் கொள்ளுதலே. ஆனால் அதே நேரத்தில் தமக்கு பிடிக்காத கருத்தை ஒருவர் கூறிவிட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூட வேண்டாம், அதைச் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் அல்லது சகித்துக் கொள்ளும் பக்குவம் கூட இல்லாததுதான் சுதந்திரத்திற்கு எதிராக அமைந்து விடுகிறது. 

ஜார்ஜ் ஆர்வெல், பேச்சுரிமை மற்றும் அறிவுசார் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை எடுத்துரைக்கிறார். 

மக்கள் பிரபலமான அல்லது பெரும்பாலோர் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அல்லது வசதியான விஷயங்களைக் கூறும்போது உண்மையான சுதந்திரம் சோதிக்கப்படுவதில்லை. மாறாக, மற்றவர்கள் விரும்பாத கடினமான உண்மைகளை அவர்கள் பேசும்போதுதான் சோதிக்கப்படுகிறது. 

இணக்கமான கருத்துக்களை மட்டுமே ஏற்கும் ஒரு சமூகம் தன்னை உண்மையாகவே சுதந்திரமானது என்று கூற முடியாது. நேர்மையான விவாதம் பெரும்பாலும் நம்பிக்கைகள், அதிகாரம் மற்றும் சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடுகிறது. மக்கள் அச்சமின்றி கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும், சங்கடமான உண்மைகளை வெளிப்படுத்தவும் அனுமதிக்கப்படும் போது முன்னேற்றம் சாத்தியமாகிறது. அச்சத்தால் திணிக்கப்படும் மௌனம் உண்மையை பலவீனப்படுத்தி, அறியாமையை வலுப்படுத்துகிறது. சுதந்திரத்திற்கான கருத்து வேறுபாடுகளுக்கான சகிப்புத்தன்மையும், வெளிப்படையான உரையாடலும் தேவை. உண்மை எப்போதும் இனிமையானதாக இருப்பதில்லை, ஆனால் நேர்மையாகப் பேசும் உரிமையைப் பாதுகாப்பது நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் இன்றியமையாதது என்று ஆர்வெல் நமக்கு நினைவூட்டுகிறது. துணிச்சலான குரல்கள் புரிந்துகொள்ளப்படுவதற்கு முன்பே பெரும்பாலும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன. அறிவுசார் சுதந்திரம் சமூகத்தில் வளர்ச்சி, விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது. நேர்மையான வெளிப்பாடு இல்லாத சுதந்திரம் வெறுமையாகவும் அர்த்தமற்றதாகவும் ஆகிவிடுகிறது. உண்மையான சுதந்திரத்தில் கடினமான உண்மைகளைக் கேட்கும் துணிச்சலும் அடங்கும். 

அந்த சகிப்புத்தன்மை இல்லாததால் தான் யாரேனும் தமக்கு பிடிக்காத கருத்தை கூறிவிட்டால், அதை தடை செய்ய போராடும் அளவுக்கு அல்லது மிருகத்தனமான பலத்தை பயன்படுத்தி அடக்கும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. அதிலும் பெரும்பான்மை சமூகத்திற்கு அல்லது ஆதிக்க சக்திக்கு எதிரான கருத்துக்கள் வரும்போது சுதந்திரத்திற்கு எதிரான குரல் கொடூரமாக வருகிறது. உலகெங்குமே மாற்றுக் கருத்துடைய திரைப்படங்கள், கலைப்படைப்புகள், கருத்து ஓவியங்கள் கட்டுரைகள் வரும்போது அதிகார வர்க்கத்தின் கூக்குரல்கள் ஆதிக்க சக்திகளின் கூக்குரல்கள் கொடூரமாக ஒலிக்கின்றன, அடக்குமுறைகளை கையாளுகின்றன. அதனால்தான் மத நல்லிணக்கமற்ற, சகிப்புத்தன்மையற்ற, குழப்பமான, அசாதாரண சூழ்நிலைகள் உலகில் தோன்றி விடுகின்றன. மக்களிடையே அமைதி குலைந்து விடுகிறது. நேர்மையான குரல் எழுப்புபவர்கள் ஒரு விதமான பயத்தோடு வாழ வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. 

இது மிகவும் ஆபத்தான போக்கு... 

"நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நான் மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்லும் உரிமை உனக்கு இருக்கவேண்டும் என்பதற்காக எனது உயிரையும் கொடுத்து போராடுவேன்.-ரூசோ

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...