சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 15 February 2026

மகா.. சிவராத்திரி

 மக்கள் உற்சாகத்துடன் பிரம்மாண்டமாக மகா சிவராத்திரியை கொண்டாடி முடித்து விட்டனர். 

மகாசிவராத்திரி பற்றி ஏராளமான தத்துவ கதைகள் சொல்லப்படுகின்றன. ஏன் மகா சிவராத்திரி கொண்டாட வேண்டும் என்றெல்லாம் அதை பற்றி ஏராளமான மத உபன்யாசகர்கள் நிறைய புராண கதைகள் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். 

அதில் மனதை தொடக்கூடிய கதையிது. ஒரு வேடன் வேட்டைக்கு சென்றபோது, ​​ஒரு கொடிய விலங்கிடம் சிக்கிக் கொள்கிறான். அதனிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, உறக்கம் வந்து கீழே விழுந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வில்வ இலையாக பறித்து போட்டுக் கொண்டே இருந்தான். பொழுது விடியும் போது அந்த கொடிய விலங்கு சென்று விட்டது. மேலே இருந்து கீழே குதிக்கும் போது இவன் பறித்து போட்ட வில்வ இலை குவியல்களுக்கு கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது. அந்த மாசி மாத சிவராத்திரி ஆனதால் அவன் பறித்துப் போட்ட இலைகள் சுவாமிக்கு அர்ச்சனையாக சிவன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு வேண்டிய வரம் அளித்தான் என்று சொல்லுவார்கள். 

அவன் சிவனை நினைத்தானோ இல்லையோ, பசியோடு இருக்கும் தன் குழந்தைகளையும் மனைவியையும் நினைத்து எப்படியாவது உயிர் பிழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவன் விடிய விடிய இலையை பறித்து போட்டுக் கொண்டிருந்தார். இது ஒரு கதை.  

மும்மூர்த்திகளுக்கிடையே யார் பெரியவர் என்ற தர்க்கம் எழுந்தபோது, ​​விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து கொண்டே கீழே சென்றதாகவும், பிரம்மன் அன்னப்பறவை வடிவம் எடுத்து ஆகாயத்தில் பறந்து சென்றதாகவும் இருவருமே அடிமுடி காணாத நிலையில், சோதியாக இறைவன் காட்சி அளித்ததாகவும் ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. 

எது எப்படி இருந்தாலும் அவதாரங்களை விட பஞ்சபூத சக்திகளே பிரபஞ்சத்தில் உயர்ந்தது என்று சொல்லாமல் சொல்லி விட்டார்களோ என்னவோ. 

பொதுமக்களை பொறுத்தவரை சிவராத்திரியை விமர்சனமாக கொண்டாடுவது காலம் காலமாக செய்து வரும் வழக்கம்.

 கிராமப் பகுதிகளில் எல்லோரும் தங்களது முன்னோர்களான குலதெய்வத்தை வணங்கச் செல்வார்கள். உயர் சாதி வகுப்பினர் சிவன் கோயிலுக்கு செல்வார்கள். விடிய விடிய வழிபாடுகள் நடக்கும் இதெல்லாம் எப்போதும் நடந்து வருகிற விஷயம்தான். 

கிராமப் பகுதிகளில் சிவன் ராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்கு ஊரோடு சேர்ந்து வேட்டையாடி வந்து வேட்டை பண்டத்தை எல்லா குடும்பத்திற்கும் பங்கு போட்டுக்  கொடுப்பது வழக்கம். 

இப்போது வாகன வசதிகளை பெருத்து விட்டதால் எல்லோருமே எல்லா சிவன் கோயில்களுக்கும் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.. நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வரும் பிரசாதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள். 

எந்த கோயிலுக்குள்ளும் நுழைய முடியாத அளவிற்கு பக்த கோடிகள் பெருகிவிட்டன. 

இதெல்லாம் மகிழ்ச்சி தான்... ஆனால் மற்றொரு பக்கம் எந்த தொலைக்காட்சியை திறந்தாலும் ஒரு கார்ப்பரேட் சாமியார் அல்லது சில கார்ப்பரேட் சாமியார்கள் மகா சிவராத்திரியை வைத்து அடிக்கின்ற கூத்துகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. பிரம்மாண்டம்.... பிரம்மாண்டம்.... மகா பிரம்மாண்டம் என போய்க்கொண்டிருக்கிறார்கள். ஊரில் இருக்கிற பிரபலங்கள் எல்லாம் அங்கே போய் குவிகிறார்கள். உயர்தட்டு மக்கள் கலந்து கொள்வதற்கு ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கான ரூபாய்களை கொட்டியழ கார்ப்பரேட் சாமியார்கள் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சியையும் விட்டு வைக்காமல் நேரடி ஒளிபரப்பு வேறு...... 

இதைப் பார்க்கும்போது துறவி என்பதற்கான இலக்கணங்கள் என்னவென்று சொல்லப்பட்டதோ அதெல்லாம் தூர குப்பையில் எறியப்பட்டு விட்டதை கண்கூடாகக் காணலாம். 

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின் என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகுமென்பதே கருத்து. 

அந்தக் காலத்தில் துறவிகளில் இருவகை இருந்திருக்கிறார்கள். ஒருவகை உலகை வெறுத்து துறவிகளாக மாறி இருக்கிறார்கள். சிலர் பக்குவப்பட்டு உலக பந்தங்களை துறந்து துறவியாக மாறி இருக்கிறார்கள். ஆனால் துறவிகள் என்றால் ஒரே இலக்கணம் தான். அன்றாடம் பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டும். பிச்சை எடுப்பதற்கு திருவோடு... சிலருக்கு வெறும் கையிலேயே பிச்சை.... உடுத்திக் கொள்வதற்கு கந்தலாடை, மாற்று கந்தலாடை ஒன்று தேவைப்பட்டால்..... தைத்துக் கொள்வதற்கு ஊசி நூலும் கொஞ்சம் மருந்துகளும் வைத்துக் கொள்ளலாம் என்று புத்தர் தனது சீடர்களுக்கு இலக்கணமாக கூறியிருக்கிறார். 

ஒரு மரத்தடியில் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்கக் கூடாது என்ற ஒரு நெறிமுறை இருந்தது. அதுவும் மரத்தடியில் தான்... இரண்டு நாளைக்கு மேல் தங்கினால் இது என்னுடைய இடம் என்ற எண்ணம் வந்துவிடும் என்பதால் இரு இரவுகளுக்கு மேல் தங்கக் கூடாது. என்ற ஒரு விதிமுறை. தேசாந்தியாக பிரிவது தான் அவர்களுக்கு வகுக்கப்பட்ட நியதி..

ஒரு சீன துறவியை பற்றி சொல்வார்கள் ..அவர் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போது, ​​காற்று அடித்த திசையில் அவரது தாடி அசைவதை பார்த்து அப்பக்கம் சென்று கொண்டிருந்தார். காற்று சுழன்றடித்து வேறு திசையை காட்டி வேறு திசையில் தாடி திரும்பிய போது இந்தப் பக்கம் தான் போக வேண்டுமா என்றுதிரும்பிச் சென்றாராம். 

அவ்வாறு உலக சிந்தனைகளை துறந்த துறவிகளை எல்லாம் கேள்விப்பட்டுள்ளோம். 

ஆனால் நமது போதாத காலம் நாம் பார்க்கிற துறவிகள் எல்லாம் பிரம்மாண்டமான மாளிகைகள், சொகுசு கார்கள், தங்க நகைகள், என அடுக்கிக் கொண்டே போகலாம். உலக பந்தங்களில் உள்ள அத்தனை கேளிக்கைகளையும் அனுபவித்து கொண்டு துறவிகள் என்று வேஷம் போட்டு வாய்க்கு வந்ததை புளுகிக் கொண்டு, புருடாக்கள் விட்டுக் கொண்டு திரிகிறார்கள். ஆட்ட பாட்டமென இவர்கள் சிவன் ராத்திரி கொண்டாடும் லட்சணம் இதுதான்.. 

இதை பார்க்கும் போது சிறுவயதில் மதுரையில் என் வீட்டுக்கு அருகே உள்ள அரசமரத்து பிள்ளையார் கோயில் மகா சிவராத்திரி தான் நினைவுக்கு வருகிறது. 

அங்கு ஏராளமான பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கதாகாலட்சேபங்கள், இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும். 

ஒருமுறை குன்றக்குடி அடிகளார் நடுவராக இருந்து நடத்தி வைத்த பட்டிமன்றத்தின் தலைப்பு "மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது திருக்குறளா, பகவத் கீதையா, மார்க்சியமா..... 

நினைத்து பார்க்கவே மிகவும் ஆச்சரியமாக உள்ளது!!! 



No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...