சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 16 November 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 15

 தினசரி எந்த பத்திரிகையை புரட்டினாலும் சரி, அல்லது தொலைக்காட்சியைப் பார்த்தாலும் சரி, தவறாது வரக்கூடிய செய்தி இதுதான். வெறி நாய் கடித்து ஒரு இளைஞர் பலி, குழந்தை பலி என செய்தி வராத நாளே இல்லை எனலாம்.

இதை நினைக்கும்போதெல்லாம் எனக்கு தொழில் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் தான் நினைவுக்கு வருகின்றன. நான் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் 12 வருடங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த நேரம் எனது மருந்து கிடங்கிற்கு செல்லும் வழியில் வாகனம் நிறுத்துமிடம் அருகில் ஒரு கூட்டத்தை முதன் முதலாக பார்த்த நிகழ்வு மனதை உலுக்கியது. 

கான்விக்டு வார்டு என்று அழைக்கப்படும் கைதிகள் உள் நோயாளிகள் அறை ஒன்றின் முன்னால் பெரிய கம்பி கிராதி போடப்பட்டிருக்கும். அதற்கு இந்தப் புறமாய் ஒரு கூட்டம் அழுதபடி நின்று கொண்டிருந்தது. எனது மருந்தாளுனர் நண்பரிடம் எதற்காக இங்கு நின்று அழுதிருக்கிறார்கள் என்று கேட்டேன்.

சார் இங்கு நிற்க வேண்டாம், வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். 

பார்க்கவே மனது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கம்பிகிராதிக்கு உட்புறம் இருக்கக்கூடிய அறையிலே வெறிநாய் கடித்து ரேபீஸ் நோயாளிகள் இருப்பார்கள். சாவின் விளிம்பில் மிக மோசமான நிலையில் துடித்துக் கொண்டிருப்பார்கள். ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் உறவினர்கள் இந்த பக்கம் நின்று அந்த கொடுமையை பார்ப்பார்கள். உலகில் சாவே மோசமானது தான், அதிலும் இந்த மாதிரி ஒரு சாவை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருப்பது அதைவிட கொடுமை என்று சொன்னார். 

எனக்கு சில நாட்களுக்கு தூக்கமே வரவில்லை. 

நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் நாய் ஒன்று லேசாக கடித்து விட்டது. பழக்கப்பட்ட நாய் தான் என்றாலும் தடுப்பூசி போடச்சொல்லி மருத்துவ அலுவலர் அறிவுரை வழங்கினார். அப்பொழுதெல்லாம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய் கடி ஊசி எல்லாம் கிடையாது. நாய்கடி தடுப்பு ஊசி போட மாவட்ட தலைமை மருத்துவமனை தான் செல்ல வேண்டும். அங்கு சென்றால் அவர்கள் தினசரி காலை 11 மணி வரை ஒரு மணி நேரம் ஒதுக்கி இருப்பார்கள்.அது என்ன, ராகுகாலம், எமகண்டம் இல்லாத நல்ல நேரமோ என்னமோ தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட நேரம் தான் போடுவார்கள். அதுவும் மொத்தமாக நாய் கடி தடுப்பூசி போட வேண்டியவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக வரவழைத்து போடுவார்கள். தோப்புளை சுற்றி 14 ஊசி போட வேண்டும். ஊசி போட்டால் கடுமையாக வலி இருக்கும். ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுக்க சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் போட்டு தீர வேண்டிய கட்டாயம். 

கிங் இன்ஸ்ட்ரீட்யூட்டில் இருந்து அந்த மருந்தை பெறுவார்கள். வெளியில் அதிகம் கிடைக்காது. அந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டால் வேறு வழியும் கிடையாது. 

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாய் கடி பற்றி பெரிதாக விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. 91 ஆம் ஆண்டு நான் குன்றாண்டார் கோவில் ஒன்றிய அறிவொளி ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது கூட்டமாக டீக்கடையில் வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு அவசரமாக கிளம்பியதை பார்த்தேன். எனது உதவி ஒருங்கிணைப்பாளர் சக்தி முத்துகிருஷ்ணனனிடம் இதைப் பற்றி விசாரிக்க அவர் சொன்னார் இங்கு நாய் கடிக்கு  ஒருத்தர்  மந்திரிக்கிறார். மந்திரிக்க தான் வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு ஓடுகிறார்கள் என்று சொன்னார்கள். இந்தக் காலத்தில் இன்று இப்படி இருக்கிறார்களா என்று நாங்கள் வியந்து பேசிக் கொண்டிருந்தோம். மக்களிடையே இன்னும் எவ்வளவு தூரம் விழிப்புணர்ச்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவொளி இயக்கத்தில் இதைப் பற்றி பேசினோம்.

ஓரிரு வருடங்கள் தாண்டி முத்துகிருஷ்ணனை சந்தித்தபோது பழைய பேச்சு வந்தது. இன்னும் நாய் கடிக்கு மந்திரிக்கிறார்களா என்று விசாரித்தேன்.

இப்போதெல்லாம் யாரும் மந்திரிக்க வருவதில்லை என்றார். 

மக்கள் திருந்தி விட்டார்களா என்று கேட்டேன். 

அதெல்லாம் ஒன்றும் இல்லை, நாய் கடிக்கு மந்திரிக்கிறவரை, நாய் கடித்து அவர் இறந்து விட்டார். அதனால் மந்திரிக்க ஆள் இல்லை என்றார். 

நாய்க்கடி, பாம்பு கடி, தேள் கடிக்கெல்லாம் மந்திரிக்கும் கூத்துக்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் காலம் மாறிவிட்டது. மருத்துவ முறைகளும் மிகவும் முன்னேறிவிட்டன.

விலங்குகளை காப்பாற்ற மிருகவதை தடைச் சட்டத்தை மத்திய அமைச்சர் மேனகா காந்தி கொண்டு வந்த பிறகு தெருநாய்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. அதன் விளைவாக தாறுமாறாக தெரு நாய்கள் பெருகி, வெறி நாய்களும் அதிகமாகிவிட்டன அதனால் வெறிநாய் கடிக்கான தேவைகளும் மிக அதிகம் ஆகிவிட்டது.

நான் பொது சுகாதாரத்துறை இயக்குனராக மருந்து கிடங்கு அலுவலராக பணியாற்றிய பிறகு இது தொடர்பான பல விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம்கிடைத்தது.

பொது சுகாதாரத்துறை இயக்குனராகம் தான் மாநில அளவில் சுகாதார செயலாளர் அவர்களது வழிகாட்டுதலுடன் அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வருகிறது.

அதனால் எனது பணி இயக்குநரகத்தில் வெறிநாய்கடி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை,செலவிடப்பட்ட மருந்துகள், மற்றும் செலவினங்களை மருத்துவம் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம், மருத்துவக் கல்வி இயக்குநரகம், பொது சுகாதாரத்துறை போன்ற துறைகளில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை, போடப்பட்ட ஊசி மருந்துகள் கணக்கு, அதற்கான செலவு தொகையை தொகுத்து பொது சுகாதார துறை இயக்குனர் எப்போது கேட்டாலும் அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அதற்காக தலைமை செயலகம், தமிழ் நாடு மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் மற்ற அலுவலகங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்தேன். 

தொடர்ச்சியாக துணை இயக்குனர்களாக மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களுக்கு வரும்போது சுகாதாரத்துறை செயலாளர் இது பற்றி விசாரிப்பார் ஒரு முறை சுகாதாரச் சட்டம் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூட்டம் நடத்தும் போது 24 மணி நேரமும் எப்போது வந்தாலும் நாய்க்கடிஊசி போடுகிறார்கள் அல்லவா என்று கேட்டார்.

அப்போது அதிகம் கழிவாகுமே Wastage என்ற பேச்சு வந்த  போது. பட்டென்று பதில் அளித்தார் நாய் கடி ஊசி மருந்துக்காக செலவை காட்டிலும் ஒரு மனிதனின் உயிர் மிகவும் மேலானது. எந்த இடத்திலும், எந்த காலத்திலும்,  எப்போது வந்தாலும் நாய்க்கடி தடுப்பூசியை உடனே போட வேண்டும் என்றும், அதற்கென சுற்றறிக்கையை விடும்படி அறிவுறுத்தியதோடு, அடிக்கடி விசாரித்து வந்தார்.

இயக்குனர்களும், என்னை ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட செல்லும்போதெல்லாம் நாய்க்கடி ஊசி ஒழுங்காக பராமரிக்கப்பட்டு, முறையாக வழங்கப்படுகிறதா, நான்கு தவணைகளும் முறையாக போடப்படுகின்றனவா, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதை எல்லாம் பார்வையிடுமாறு அறிவுறுத்துவார். 

நான் எல்லா நிலைகளிலும் பணியாற்றியதால் அந்தப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன நன்கு உணர்ந்து செயல்பட முடிந்தது எனக்கு மன நிறைவை தந்தது. 

இருந்தபோதிலும் இன்னமும் வெறிநாய்க்கடியால் மனிதர்கள் இறப்பது மன வருத்தத்தை தருகிறது.அரசு ஏராளமாய் செலவு செய்து, போதுமான மருத்துவ வசதிகள் வழங்கியபோதிலும், அதற்கு முறையான சிகிச்சையை செய்வதில் அலட்சியப் போக்கு மக்களிடையே நிலவுகிறது என்பதுதான் துயரமான விஷயம்.. 

நான் ஊர் சுற்றியாக இந்தியாவில் பல பகுதிகளை சுற்றி வந்திருக்கிறேன்.வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் சிறப்பாக நடைபெறுவதையும், அதில் மருந்தாளுனர்களுக்கும் பங்கேற்பு இருப்பதும்  பெருமையாக உள்ளது. 



1 comment:

  1. Atharghu karanam public waste meals veliyil kottuvathaal perughi vittathu

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...