கலைக் கண்ணும், கருத்துத் தேடலும், காட்சிப்படுத்தலும், கையில் ஒரு திரைப்படக் கருவியும் இருந்துவிட்டால், கால் மணி நேரத்தில் கூட காவியத்தைப் படைக்க முடியும் என அற்புதமாய் விளக்குகிறது இந்த குறும்படம்.
வாழ்வியலில் பெரும்பகுதி மக்கள் காணாத, துயரப்படும் மக்களின் சோகங்களை, அவலங்களை அற்புதமாய் குறும்படமாய் படைத்துள்ளார் இயக்குனர்.
இளம்பிள்ளை வாதத்தால் நொண்டியான மாரியை வளர்க்க முடியாமல், கடனுக்காக பண்ணையடிமையாக விற்று விட்ட விதவைத்தாய், நோயுற்று வறுமையில் இறந்து விட்டாள். பண்ணை அடிமையாக இருக்கும் நொண்டி, ஆடு மெய்த்துக் கொண்டிருக்கிறான். தாய் இறந்த செய்தி உறவினன் சந்திரன் மூலமாக சேதி வருகிறது. தாய் பட்ட கடனை அடைக்காததால் பிணத்தை சவ அடக்கத்திற்கு எடுக்க விடாமல் உள்ளூரில் பிரச்சனை செய்கிறார்கள் என்ற செய்தியையும் உறவினன் தெரிவிக்கிறார்.
முதலாளியிடம் இறுதிச் சடங்கு செய்ய, கடனை அடைத்தால் தான் சவ அடக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கிறான். மிகவும் பெருந்தன்மையாக?! ஒரு ஆட்டைக் கொடுத்து கடனை அடைத்து விட்டு வா, இதற்கு நீ ஆயுள் முழுதும் உழைத்து கடன் கட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறான் முதலாளி.
வீட்டிற்கு வருவதற்கு ஊருக்குள் வரும் பாதையில் ஆட்டுடன் நடந்து வரும் நொண்டியை தாழ்த்தப்பட்டவன் இந்த பாதையை பயன்படுத்துவதா என்று திட்டி ஆதிக்க சாதிக்காரனொருவன் அடித்து துரத்துகிறான்.
காயம்பட்ட நொண்டி மயக்கம் தெளிந்து சுற்றுப்பாதையில் வருகிறான்.
பட்ட கடனுக்காய் நொண்டியின் தாய் வீட்டை எழுதிக் கொடுக்கச் சொல்லி கடன் கொடுத்த உறவினன் காத்தவராயன் தகராறு செய்கிறான். தாமதமாவதால் சவ அடக்கத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள் உறவினர்கள்.
ஒரு கட்டத்தில் தாமதத்தை தவிர்க்க ஏரிக்குள் ஆட்டினை சுமந்து கொண்டு வரும்போது நீரில் மூழ்கி இறந்து விடுகிறான் நொண்டி.
கண்ணீரை வர வைக்கும் எதார்த்தமான குறும்படம் இது. சிறு சிறு காட்சிகளிலேயே ஏராளமான செய்திகளை சொல்லி விடுகிறார் இயக்குனர். வறுமையின் உச்சகட்டத்தில் இருந்தாலும் சாதி வெறியோடு நொண்டியை தாக்கும் ஆதிக்க சாதிக்காரன், கொஞ்ச பணத்தை கடன் கொடுத்துவிட்டு பெரிதாக அலம்பல் செய்து சவ அடக்கத்திற்கு அனுமதி கொடுக்காமல் குடிசையை எழுதி கேட்கும் சுயசாதிக்காரன், ஒரு மடக்கு சாராயத்திற்கே வெட்டிம் நியாயமாக பேசும் சொந்தக்காரன், அதற்கு ஜால்ரா போடும் உறவினர்கள், நயவஞ்சகத்தோடு உதவி செய்யும் பண்ணை முதலாளி என யதார்த்தமாய் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். மரத்திலிருந்து விழுந்து இறந்த நொண்டியின் தந்தையையும், வறுமையில் செத்த தாயையும் காட்டாமலேயே மணக்கண்ணில் நம்மை காண வைத்திருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் முழு நீள படத்தில் காட்டுமளவிற்கு உள்ள கதையினை குறும்படத்திலேயே காட்டி அசத்தி இருக்கிறார் இயக்குனர் . ராஜமுத்து, பேச்சி முத்து பாண்டியன், ஜவகர் சக்தி, முருகதாஸ், துரை நவநீதன், ராஜமகேந்திரன், ஆவுடை நாயகம், பால்ராஜ், சுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்பாக நடித்து வருகிறேன்.
அவசியம் காணவேண்டிய குறும்படம் இது....

No comments:
Post a Comment