கெண்டை மீன் போன்ற அழகான விழிகளை உடையவளே! தண்டமாகிய ஆயுதமேந்திய எதிரிகள் ஆண்களின் சிண்டைப் பிடித்துவிட்டார்கள் பார்... பெருமிதத்துடன் கம்பீரமாக வாழ்ந்த எம்தமிழர் இவ்வுலகில் அடிமையாக வாழ்வதுவோ?! இப்பூவுலகில் பீடும் பழம்பெருமையும் கொண்ட வாழ்வு பாழ்பட்டுப் போவதுவோ?! விலங்குகள் போல் உண்பதும் உறங்குதலும் உயர்ந்த நிலை எனக்கொள்வதுவோ?!
பெண்ணெனப்படும் பேறுபெற்றாள் விழிப்புணர்வு பெற்றால் பேருரிமை பெற்றலாகாதோ??
பெண்களின் தொண்டே பெருந்தொண்டு ஆகாதோ!! விழித்தெழுந்து வீரச்சமர் புரிய வாவென்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்....
********************
தண்டைப் பிடித்தவரோ தாவித் தமிழரின்
சிந்தைப் பிடித்தனர்காண்! செம்மாந்த எந்தத்தமிழர்
ஆண்டை நிலத்தில் அடிமையுறத் தாழ்வதுவோ?
பண்டைப் பெருமையும் பாழ்பட்டுப் போவதுவோ?
உண்டிங் குறங்குவதே ஓங்குநிலை என்பதுவோ?
பெண்டிர் விழிப்புற்றால் பேருரிமை வாயாதோ?
தொண்டிற் பெருந்தொண்டு தோகையர்தம் தொண்டன்றோ?
கெண்டை விழியே! கிளர்கேலோ ரெம்பாவாய்! 13
🙏 🙏
No comments:
Post a Comment