சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 23 December 2025

செந்தமிழ்ப் பாவை 7

காலம் காலமாய் அடக்கி வைத்திருந்த பெண்ணடிமை தனத்திலிருந்து விடுதலை பெற்று, பெண்ணுரிமைக்கான போரில் பங்கெடுக்க மகளிர்க்கு அறைகூவல் விடுக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். 

பெண்கள் அடிமைத்தனம், பொருளாசை, சொல்லடிமை போன்றவற்றைத் தவிர்த்து, இல்லறப் பொறுப்புகளை ஒதுக்கி, வீரம் செறிந்த நெஞ்சுடன் போர்க்களம் புகுந்து, மண்ணுரிமை, மொழி உரிமைக்காகப் போராட வேண்டும் என்பதை உணர்த்துகிறது இப்பாடல். 

குறிப்பாக, வல்லடிமை எனப்படும் ஆண்களுக்கு அடிமையாகி இருந்ததிலிருந்து விடுபட்டு,  பொருளாதார அடிமைத்தளை நீங்கி பொருளாதாரத்தில் சம பங்கு எனு‌ம் சுய சார்பு பெற்று, மல்லடிமைச் சேற்றுப் போரெனும் உடற்திறன் பெற்று, குடும்ப பொறுப்பை ஒதுக்கி வைத்து விட்டு சொல்லடிமைத்தனத்தை தூர எறிந்து விட்டு மண்ணுரிமை, மொழி உரிமைப் போரில் ஈடுபடத் தூண்டும் பாடலாக வடித்திருக்கிறார் பாவலரேறு. 

வில்லின் நாண் போல வளைந்த புருவத்தையும், கூரிய வேல் போன்ற விழிகளையும் கொண்டவளே என்று பெண்களின் வீரம், திறமை, அழகு ஆகியவற்றை வர்ணித்து, அவர்களை எழுப்பிக் கூவுகிறார்.

வல்லடிமை கொண்டார்; வரும்பொருளிற் பங்கெடுத்தார்: ஆண்மையைக் கொண்டவர்கள் (ஆண்கள்) அடிமையாகிவிட்டனர்; வரும் பொருளிலெல்லாம் பங்கு கேட்கிறார்கள் பெண்களின் உரிமைப் போராட்டத்தைக் குறிக்கின்ற பொருளிது. 

மல்லடிமைச் சேற்றில் மனத்தைப் பதமிடுவார்: விளையாட்டுச் சேற்றுப் போர்களில் மனதை ஈடுபடுத்தி, வீரம் இழந்து கிடப்பார்கள். இதுவும் ஒரு வகை அடிமைத்தனமே... 

சொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்: அடிமைத்தனமான பேச்சுகளைப் பேசுவதற்கே பல வாய்ப்புகளை ஏற்படுத்துவார்கள்.

இல்லறத்தைத் தள்ளி இளம்பருவச் சீரொதுக்கி: இல்லறக் கடமைகளையும், இளமைக்காலச் செல்வங்களையும் ஒதுக்கிவிட்டு.

வல்லமற நெஞ்சை வளையா இரும்பாக்கி: வலிமையான மற நெஞ்சை வளையாத இரும்பாக மாற்றி வீரத்துடன் நிற்பாயாக... 

ஒல்லைப் பெரும்போர் உலைக்காமே ஏற்றியநாண் வில்லடியின் மேற்புருவ வேல்விழியே! தூங்குதியே! எல்லே இளையாய், எழுகேலோ ரெம்பாவாய்!: விரைவிலேயே பெரிய போர் மூளும்போது, வில்லின் நாணேறிய வில்லடி போல் வளைந்த புருவங்களையும், வேல் போன்ற கண்களையும் கொண்டவளே! இன்னும் தூங்குகிறாயா? எழுவாயாக! எழுவாயாக! என்று பெண்களைப் போர் புரிய அழைக்கிறார்.

பெண்களின் வீரம், விடுதலை உணர்வை வெளிக்கொணர்ந்து, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, மண்ணுரிமை, மொழி உரிமைப் போரில் ஈடுபடத் தூண்டும் பாடல் இது.

*************************

"வல்லடிமை கொண்டார்; வரும்பொருளிற் பங்கெடுத்தார்;

மல்லடிமைச் சேற்றில் மனத்தைப் பதமிடுவார்;

சொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்!

இல்லறத்தைத் தள்ளி இளம்பருவச் சீரொதுக்கி

வல்லமற நெஞ்சை வளையா இரும்பாக்கி

ஒல்லைப் பெரும்போர் உலைக்காமே ஏற்றியநாண்

வில்லடியின் மேற்புருவ வேல்விழியே! தூங்குதியே!

எல்லே இளையாய், எழுகேலோ ரெம்பாவாய்! "7

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...