" Give me forty, call me thotti"என்று தமிழக அரசு மருந்தாளுநர் சங்கத்தின் முன்னோடி ஸ்தாபகர் திரு நவாப் ஜான் அவர்கள், அவருடைய முன்னோர்கள் காலத்தில் கம்பவுண்டர்கள் கூறியதாக சொல்லுவார். அதாவது சம்பளத்தை உயர்த்தி கொடுத்து விடு, எப்படி வேண்டுமானால் அழைத்துக் கொள் என்று அரசாங்கத்தை பார்த்து கூறியதாக கூறுவார்.
ஒரு மனிதனுடைய கௌரவம், அவன் வகிக்கும் பதவியினுடைய கௌரவம், ஊதிய நிலை பொறுத்தது என்றாலும் வெறும் ஊதியம் மட்டுமே தீர்மானித்து விடாது.
தான் வகிக்கும் பதவிக்கு தகுந்த மாதிரி தன்னை வளர்த்துக் கொள்ளுதல், சமூகத்திற்கு பணியாற்றுதல், தரத்தினை உயர்த்துதல், சேவை தரத்தை மேம்படுத்துதல் என்று எல்லா வகையிலும் உயர்நிலையை அடைவதாக இருக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக நண்பர்கள் அவ்வாறு தங்களை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஒரு மருந்தாளுனர் பதவி என்பது உருவாக்கப்பட்டதற்கு ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை எத்தனை பேருக்கு உண்மையில் தெரிந்திருக்கும். மேலும் வேறு எந்த துறைக்கும் இல்லாத ஒரு கௌரவம். தேசிய அளவில் மருந்தியல் வார விழா கொண்டாடப்படுவதும், சர்வதேச அளவில் சர்வதேச மருந்தியல் தினம் கொண்டாடப்படுவதும் எத்தனை பேர் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியிருக்கிறார்கள். அந்த வருடத்தில் நம்முடைய குறிக்கோள் என்ன என்று எப்பொழுதாவது சிந்தனை செய்திருக்கிறோமா...
மருந்தாளுநர் என்பவர் தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில், சரியான அளவில் மருந்துகளை வாங்கி, பாதுகாப்பான முறையில் சேமித்து, விநியோகிப்பவர் என்பது உலகம் அறிந்த உண்மை.
"தடுப்பூசியின் ஆதரவாளர்களாக மருந்தாளுநர்கள்,"
"ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தியுங்கள், மருந்தகத்தைப் பற்றி சிந்தியுங்கள்"
"நோயாளி பாதுகாப்பை உறுதி செய்ய மருந்தாளுநர்களுடன் இணையுங்கள்"
."உலகின் மருந்தகம் - இந்தியா"
"மருந்தாளுநர்: சுகாதாரப் பராமரிப்பின் ஒருங்கிணைந்த பகுதி"
என ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற ஏதேனும் ஒரு குறிக்கோளோடு, தேசிய மருந்தியல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த தலைப்பை பற்றி என்றைக்காவது நாம் சிந்தித்து இருக்கிறோமா என்றால் பதில் பூஜ்யம் தான்.
சங்கங்கள் அவர்கள் நடத்தக்கூடிய கூட்டங்கள், பத்திரிக்கை செய்திகள், அல்லது சமூக ஊடகங்கள் என எதை எடுத்தாலும் ஊதியம், பதவி உயர்வு, பணப்பலன் இதைத் தாண்டி துளியாவது சமூக சிந்தனையோடு பேசுகிறோமா என்றால் நிச்சயமாக கிடையாது.
தொடர் மருத்துவக் கல்வி வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக ஒரு காலத்தில் சங்கத்தில் அரசிடம் முறையிட்டோம்.
வளர்ந்து வரும் நவீன விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ப புதிது புதிதாக வரக்கூடிய மருந்துகளை பற்றியும் ஒவ்வொரு மருந்தாளுநரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர் மருத்துவக் கல்வி Continuing Medical education பற்றி பேசப்பட்டது. அங்கும் அரசு சார்பாக நடத்தப்பட்ட கூட்டங்களில் மருத்துவர்கள் சம்பிரதாயமாகவும், சடங்கு பூர்வமாகவும் நடத்தினார்கள் தவிர புத்தாக்க பயிற்சியாக நடந்திடவில்லை. வரக்கூடிய அதிகாரிகளும் அங்கு பணி தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டு மிரட்டிக் கொண்டுதான் இருந்தார்களே தவிர அதன் நோக்கம் கைகூடுமாறு பெரும்பகுதி செயல்படவில்லை. சில விதிவிலக்குகள் வேண்டுமானால் இருந்திருக்கலாம்.
நான் அறிவொளி இயக்கத்தில் நிறைய பயிற்சி முகாம்கள் நடத்தியவன் என்ற முறையில் ஒருமுறை இம்மாதிரி பயிற்சி முகாம் ஒன்று திருச்சியில் நடைபெற்றபோது புத்தாக்க பயிற்சி என்பது குறித்து எனது கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவித்தேன்.
அடுத்த வருடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தாக்க பயிற்சி அதாவது தொடர் மருத்துவக் கல்வி தொடர்பான நிகழ்வு வரும்போது இணை இயக்குனரும், இருக்கை மருத்துவ அலுவலரும் அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட மருத்துவர்களும் என்னை அழைத்து விவாதித்தார்கள். அப்பொழுது நான் எப்படி நடத்தலாம் என்பதை பற்றி எனது கருத்துக்களை தெரிவித்தேன். வேண்டிய கல்வித் தாள்களை Study materials வழங்கிடவும், மருந்தாளுர்களிடம் பின்னூட்டம் பெற்றிடவும் செய்தால் புத்தாக்க பயிற்சி சிறப்பாக இருக்கும் என்று கூறினேன்.
சில நாட்கள் கழித்து அழைப்பிதழ் தயார் செய்து மருந்தகத்தில் அளித்தார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் என் பெயரிட்டு ஒரு அழைப்பிதழ் கொடுத்தார்கள். எனக்கு எதற்கு தனியாக என்று கேட்டேன். பிரித்துப் பாருங்கள் என்றார்கள். எனக்கும் ஒரு தலைப்பு கொடுத்து அந்த புத்தாக்க பயிற்சியில் நானும் பேசுற மாதிரி அழைப்பிதழ் அளிக்கப்பட்டு இருந்தது.
நான் சவாலாக எடுத்துக் கொண்டு இதற்காக பல்வேறு புத்தகங்களை தேடிப்பிடித்து, குறிப்புகளை தயார் செய்து பேசினேன்.
இறுதியாக ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டேன். ஒரு மருந்தாளுனர் மிகவும் ஆர்வமாக எழுந்து கேள்வி கேட்டார்.
"ஊதிய குழுவில் மருந்தாளுனருடைய ஊதியம் என்னவாக இருக்கும்" என்று கேட்டார்.
எனக்கு கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது....
(இப்ப கூட பாருங்களேன். . மிக குறைவானவர்களே படிக்கிறார்கள். என்னையா தப்பு தப்பா எழுதி கிழிக்கிறாய் என்று திட்டினால் கூட பரவாயில்லை என்று தோன்றுகிறது)


தங்கள் கட்டுரை எங்கள் கருத்தை எட்டியது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வளருங்கள் எழுதுங்கள்
ReplyDelete