சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 8 December 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 20.

மருத்துவத்துறையில் அனைத்து பிரிவு செயல்பாட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரே பதவி மருந்தாளுனர்கள் என்றால் மிகையாகாது. இதை தற்பெருமையாகக் கூறுகிறோம் என்று நினைத்துக் கொள்ளக் கடாது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்று எந்த விதமான மருத்துவ நிலையங்களாக இருந்தாலும், அதில் நடைபெறக்கூடிய பல்வேறு பணிகள், அவற்றில் பணியாற்றும் பணியாளர்கள், அனைத்திலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மருந்தாளுனரின் பங்கு என்பது கட்டாயமாக இருக்கும். 

மருந்தாளுநர்கள் சுகாதாரப் பராமரிப்பின் ஒருங்கிணைந்த பகுதியினர், ஏனெனில் அவர்கள் மருந்துகளைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வது, நோயாளியின் பராமரிப்பை மேம்படுத்துவதிலும், சுகாதார பாதுகாப்பினை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் ,. மருந்துகளை வழங்குதல், மருந்துத் தகவல்களை வழங்குதல், மருந்துப் பயன்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் பிற சுகாதார நிபுணர்களுடன் இணைந்து செயல்படுதல் போன்ற பலதரப்பட்ட பொறுப்புகளைக் கொண்டுள்ளனர். 

மருந்தாளுனர்களின் நேரடிப் பணியாக  மருந்து மேலாண்மை என்ற வகையில் நோயாளிகளுக்குச் சரியான மருந்து, சரியான அளவு, சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்தல், மருந்துப் பிழைகளைத் தடுத்தல்.நோயாளிகளுக்கு மருந்துகள் குறித்த தகவல்களை வழங்குதல், பக்கவிளைவுகள் பற்றி விளக்குதல், மருந்துப் பயன்பாட்டை புரிந்துகொள்ள உதவுதல் என முக்கிய பங்காற்றி வருகின்றனர். 

சுகாதாரக் குழுவின் ஒருங்கிணைப்பு என்ற வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களுடன் இணைந்து செயல்பட்ட, நோயாளிகள் ஒட்டுமொத்த பராமரிப்பை மேம்படுத்துதலை செய்து வருகின்றனர். 

மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவ கருவிகள், உபகரணங்கள், ஆகியவற்றைக் கொள்முதல் செய்தல், ஆய்வகம், அறுவை சிகிச்சை, மற்றும் வெளி, உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் அனைத்து பிரிவினருக்கும் வழங்கி சிறப்புடன் செயல்படுகின்றனர். 

உதாரணத்திற்கு ஒரு தலை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்றுகிறார் என வைத்துக் கொள்வோம். அந்த அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்து நோய்க்கிருமிகள் தொற்றாத வண்ணம் கிருமிகளற்ற, அல்லது தொற்றுநோயைத் தடுக்கும் நிலையில்(அசெப்டிக் நிலையில்) தயார் செய்த துப்புரவு பணியாளர் வேலைக்கு தேவையான கிருமிநாசினி, முதலான வேதிப்பொருள்களை மருந்தாளுநர் தான் வாங்கி தருகிறார். அறுவை சிகிச்சைக்கு முன்னர் செய்யப்படக்கூடிய அனைத்து ஆய்வக சோதனைகளுக்குமான கருவிகளையும் வேதிப்பொருள்களையும் வாங்கி கொடுத்து மருந்தாளுநர் தான் பணிபுரிகிறார். அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவையான அனைத்து கருவிகளையும் கொள்முதல் செய்து பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து பணிகளிலும் மருந்தாளுனர்கள் பங்கேற்பு உள்ளது. அறுவை அரங்கில் தேவையான அனைத்து விதமான மருந்துகள், அறுவைசிகிச்சை தையல் பொருட்கள் ஸ்யூச்சர் மெட்டீரியல்ஸ் ஆக்சிஜன் நைட்ரஸ் ஆக்சைடு வாயு உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் வாங்கி விநியோகம் செய்பவர் மருந்தாளுனரே. அதற்காக எல்லாவற்றையும் மருந்தாளுனர் செய்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆனால் எல்லா பணிகள் நடைபெற உடன் பணியாற்றுகிறார் என்பதுதான் உண்மை 


புற்றுநோயியல், தொற்று நோய்கள், தொற்றாநோய்கள், மனநலம், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு துறைகளில்  சிறப்புப் பிரிவுகளில் பங்களிப்பினை மருந்தாளுனர் செய்து வருகின்றனர். 

இவ்வாறுஇவ்வாறு அனைத்து செயல்பாடுகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவோ மருந்தாளர்களுடைய பங்கேற்பு என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அதற்குரிய மரியாதை, அங்கீகாரம் கிடைக்கிறதா என்று பார்த்தால் அது கேள்விக்குறியே.. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...