சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 13 October 2025

நீதி பரிபாலனம்..

 "வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே, பாதாளமூலி படருமே ! மூதேவி சென்றிருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே, மன்றோரம் சொன்னார் மனை"என்பது ஔவையின் 'நல்வழி' நூலில் வரும் ஒரு பாடலாகும். 


இதன் பொருள், நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்பவர்களின் வீடு பாழடைந்து, வேதாளம் (பேய்) வந்து சேரும்.வெள்ளெருக்கு செடிகள் வளரும். இது எதிர்மறையான விளைவுகளைக் குறிக்கும் உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது. பாதாளமூலி எனப்படும் கொடி படரும். செல்வச் செழிப்பைத் தடுக்கும் மூதேவி வந்து நிலைத்து வாழ்வாள்.பாம்புகள் குடியிருக்கும். தரும மன்றத்தில் (நீதிமன்றத்தில்) பொய் சாட்சி சொன்னவரின் வீடு என்பதாகும். இது நேர்மையற்ற செயல்களின் விளைவுகளை உணர்த்துகிறது.


ஔவையார் மிகவும் விவரமானவர். அதனால் தான் பொய் சாட்சி சொன்னவர் நாசமாய் போவார் என்று சொன்னாரே தவிர, அநீதியாய் தீர்ப்பு வழங்கியவர் நாசமாய் போவார் என்று பாடவில்லை. அந்த அளவில் அவர் முன் ஜாக்கிரதையாகவே இருந்திருக்கிறார். 


ஆனால் மனுநீதி சோழன் அவ்வளவு விவரமானவர் இல்லை. அவரது தேசத்தில் அவரது மகன் தேரோட்டி வரும்போதுகுறுக்கே வந்த கன்று குட்டியை ஏற்றி கொன்று விட்டார்.கன்றினை இழந்த நியாயம் கேட்டு பசு மாடு ஆராய்ச்சி மணியை அடித்தது. உடனே மன்னன் வந்து நடந்த குற்றத்தை அறிந்து பரிகாரமாக தனது மகனைத் தேர் காலில் இட்டு கொன்று நீதி வழங்கினார். 


ஆனால் அவருக்கு அவ்வளவு விவரம் பத்தாது. இருந்திருந்தால் தனது அரசாங்கத்தின் புலனாய்வு குழுவையோ, அல்லது மந்திரிகள், நீதிமான்களை கொண்ட குழுவையோ போட்டு அவர்களின் பரிந்துரையின்படி அல்லது ஆய்வறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கிறேன் என்று கதையை முடித்து இருந்திருக்கலாம் இல்லை... நீதிபரிபாலனம் செய்திருக்கலாம் . எடுத்துச் சொல்ல யாரும் இல்லை என்று தெரிகிறது. 


"தேரா மன்னா செப்புவது உடையேன்"என்று கண்ணகி தன் கணவன் கோவலன் அநீதியாய் கொல்லப்பட்டதாக நீதி கேட்க பாண்டிய மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் முறையிட அவன் சிந்திக்காது தீர்ப்பு வழங்கி விட்டோமே என்று பதை பதைத்து உயிரை விட்டான். 

நம் காலமாக இருந்தால் விவரமாக இருந்திருப்பான். அவன் விவரமாக நீதிமான்களான தனது மந்திரிமாரிடம் ஆலோசனை கேட்டிருந்தால், கோவலன் இறந்ததற்கு கொஞ்சம் நஷ்ட ஈடும் விசாரிப்பதற்கு ஒரு குழுவையும் போட்டு ஒப்பேத்தி இருப்பான். அந்த விவரம் அவனுக்கு தெரியாமல் போய்விட்டது. 


இவரை விட விவரம் கெட்ட மனுஷன் ஒருத்தர் இருந்திருக்கிறான், சிபிச் சக்கரவர்த்தி என்று... 

  'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,தபுதி அஞ்சிச் சீரை புக்க,வரையா ஈகை உரவோன்'என்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றைப் புலவர் தாமப்பல்கண்ணனார் பாடியிருக்கிறார் ...


திருவாரூரை ஆண்ட அரசன் சிபி சக்கரவர்த்தி மன்னனாக இருந்த காலத்தில்,  புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டிருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூறிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். காத்திருந்த பருந்து சக்கரவர்த்தியிடம் வந்து என்னுடைய வேட்டை இது என்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டது. சக்கரவர்த்தி ஒரு உயிர் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்னிடம் அடைக்கலம் தேடி வந்தால் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை என்றார். 

அதை வேட்டையாடி உண்பது எனது உரிமை, நான் என்ன பட்டினி கிடந்து சாகவா முடியும் என்று பருந்து சொல்ல. தனது தொடையில் இருந்து அந்த புறாவின் எடைக்கு சமமான எடை தசையை அரிந்து அந்த பருந்திற்கு அளித்தான்.

 ஒரு புறாவை வேட்டையாடிய பருந்திடம் இருந்து காப்பதற்காக, மன்னன் சிபி தனது உடலின் சதையை அரிந்து புறாவின் எடைக்கு ஈடாகப் பருந்துக்குக் கொடுத்த தியாக வரலாறென போற்றப்படுகிறது .

 இந்தத் தியாகம் இறுதியில் இந்திரனும் அக்கினியும் அவரைச் சோதிப்பதற்காக வந்த வேடர்களாக இருந்து, அவருடைய அறத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். 

இவ்வாறெல்லாம் உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து தங்களது உயிரையே கொடுத்து தியாகம் செய்து நீதி பரிபாலனம் செய்ததாக கதைகள் சொல்லப்படுகின்றன.


இல்லையில்லை, பழங்காலத்தில் அயோத்தியில் சிபி என்ற பேரரசர் ஆட்சி செய்தபோது என்றெல்லாம் கதைவிடுவோருமுண்டு.


பாவம் அவர்களுக்கு தெரியாது. பிற்காலத்தில் மனிதர்களே கொத்துக் கொத்தாய் செத்துப் போனாலும் ஏன் என்று கண்டு கொள்ளாத காலம் வரும், அரசுகள் வரும், அதையும் நியாயப்படுத்திய அறிவாளிகள், நீதிமான்கள் வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் என்ன ஜோதிடமா கண்டார்கள்... 



தற்கால நிகழ்வுகளையும், கடந்த கால நீதிக் கதைகளையும், புராணக் கதைகளையும் கேட்டது, படித்தது என ஒரு சேர நினைத்துப் பார்த்ததால் வந்த குழப்பம் இது. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...