தீபாவளி எனும் தீப ஒளி திருநாள் ஆசிய கண்டத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழா. அதற்கு வாழ்த்து சொல்லலாம் என்று நினைத்தேன். வாழ்த்து சொல்லவில்லை என்றால் தமிழனே இல்லை, இந்துவே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
சரி, தீபாவளியின் தாத்பரியம் என்னவென்று அறிந்து கொள்ளலாம் என்று கூகுளானந்தாவை கேட்டேன். வேறு ஒன்றும் இல்லை, google தான். பிரேமானந்தா, நித்தியானந்தா மாதிரி ஏதாவது ஒரு ஆனந்தா சொன்னால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், எனவே கூகிளானந்தாவை தேடினேன்...
ஆதியில் சமணர்கள் தான் தீப ஒளி திருநாளை கிமு 600 ல் இருந்து கொண்டாடி வருகிறார்கள் என தெரிகிறது.
இது சமணரிடமிருந்து ஹிந்துக்கள் சுவீகரித்துக் கொண்ட விழா. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசருடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவுமுழுவதும் நடைபெற்ற இச்சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.
வைகறைப்பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து படியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் முடிவெய்தியிருப் பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.
அவ்வரசன் மற்ற அரசர்களை வர வழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகிற்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழி படும் பொருட்டு அவர் முடிவெய்திய நாளில் வீடுதோறும் அறிவொளிக்குச் சான்றாக விளக்குகளை ஏற்றி விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தார். இந்த விழா தீபாவளி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது (தீபம்- விளக்கு ஆவளி - வரிசை) மகாவீரர் விடியற்காலையில் முடிவெடுத்தபடி தீபாவளி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின் விளக்கேற்றி அறநெறிப் போதனைகளை நினைவிருத்தி தீபாவளி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
![]() |
பழங்கால இலக்கியச் சான்றுகள், கல் வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளின் துணை கொண்டு அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய குறிப்புகள் "சமணமும் தமிழும்", பக்கம்: 79-80).
"மகாவீரருடைய
அதேபோல பௌத்தத்தில், தீபாவளியை 'தீபதான உற்சவம்' என்றும் அழைப்பர்.
கதைப்படி, புத்தர் போதிகயாவில் மெய்ஞானம் பெற்ற பிறகு, அவரது தந்தை அரசர் சுத்தோதனர் மகனின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர், அவனைப் பார்க்க விரும்பினார்.
இதற்காக, புத்தர் இராசகிரக மகாநகருக்கு அருகிலுள்ள மங்களகிரி என்ற மலையில் இருந்தபோது, புத்தரை மன்னரின் தலைநகரான கபிலவஸ்துக்குத் திரும்பி வரும்படி சுத்தோதனார் ஒரு தூதரை அனுப்பினார். ஆனால் தூதுவர் புத்தரைச் சந்தித்த பிறகு அவருடைய சீடரானார். முந்தைய தூதர் வராததால், சுத்தோதனர் மற்றொரு தூதரை அனுப்பினார், அவரும் புத்தரின் கீழ் துறந்தவரானார், மேலும் புத்தரை மீண்டும் அழைத்து வரும் இராச கட்டளையை துறந்த தூதுவர் ஏற்கவில்லை. அவ்வாறே பல தூதர்களை ஒவ்வொருவராக அனுப்பினார், அவர்களின் பெருமானின் கீழ் உண்மையை உணர்ந்து துறவிகள் ஆனார்கள். புத்தருடன் மங்களகிரியிலிருந்து யாரும் திரும்பவில்லை.
கடைசியாக, சுத்தோதனர் தனது விசுவாசமான மந்திரி கலோதயனை அனுப்பினார், அவர் பின்வாங்க மாட்டார், இராச கட்டளையை நிராகரிக்க மாட்டார் என்று மன்னர் நம்பினார். காலோதயன், அரச தேரோட்டியான சந்தகனுடன் மங்களகிரியை நோக்கிச் சென்றான். புத்தரின் உபதேசத்தைக் கேட்ட காலோதயன் பெருமானின் பாமர மாணவனாக மாறினாலும், புத்தரை மீண்டும் கபிலவஸ்துவிற்கு வரச் செய்தான். புத்தரும் அவரது துறவிகளும் கபிலவஸ்துக்குச் செல்ல அறுபது நாட்கள் ஆனது. பெருமானும் அவருடைய மாணவர்களும் கபிலவஸ்துக்கு விசயம் செய்த நாளன்று, நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விளக்குகளை வரிசையாக வைத்திருந்தார்கள். புத்தபெருமானின் புனித வருகையைக் கொண்டாடும் வகையில் தீபங்களை வாங்க முடியாத அனைத்து ஏழைகளுக்கும் வறியர்களுக்கும் மக்கள் தீபம் அளித்தனர். இந்த நாள் தான் ஐப்பசி மாத அமாவாசை.
புத்தரின் திருவிசயத்தை வழிபடுவதற்காக கபிலவத்துவின் மக்கள் தீபங்களை தானமாக அளித்து, ஊர் முழுவதும் அவற்றைத் தொடர அமைத்து, சோதிப்பிரகாசத்தால் பூமியை தூயமாக்கியதால் அன்றைய தினம் 'தீபதான உற்சவம்' என்றும் 'தீபாவளி' என்றும் அழைக்கப்பட்டது. மகாராசா அசோகர் மகாத்தவிரர் மௌகளிப்புத்திரர் மற்றும் இந்திரகுப்தர் ஆகியோரின் மேற்பார்வையில் மௌரியத்தலைநகர் பாடலிபுத்திரத்தின் 'அசோகாராமம்' தனது மடாலயத்தில் தீபதானம் உற்சவத்தை கொண்டாடினார்.
இந்நிகழ்வு 'சிதவிரகாதை' என்னும் திருநூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் பௌத்த மதத்திற்குள் புகுந்த சனாதனவாதிகள் அம்மதத்தையும் சனாதன மதமாக மாற்றிவிட்டனர். மகா யானம் ஹீனயானம் என்று அம்மதத்தை இரண்டாக பிளந்து புத்தருடைய போதனைகளை மட்டும் நம்புபவர்கள் ஹீனயாணிகள் என்றும், இறை நம்பிக்கைக்கு எதிராக போதித்த புத்தரையே கடவுளாக நம்பி வணங்குவோர் மகாயானிகளாகவும் மாற்றி விட்டனர்.
சமண, பௌத்த சமயத்தினரை வீழ்த்திய பிறகு சமணர்கள், பௌத்தர்களைப் பெருவாரியாக ஹிந்துமதத்தில் சேர்த்தனர் ஆரியர். விரும்பியோ, விரும்பாமலோ, பல்வேறு காரணங்களால் இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, மகாவீரர் நினைவைப் போற்றும் வகையில் விளக்குகளை ஏற்றி தீபாவளியைக் கைவிடாது தொடர்ந்தனர். (டாக்டர் மா. இராசமாணிக்கனார், தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம் 33 - 34).
பார்த்தான் மன்னன். அரசவைக் கூட்டி கருத்து கேட்டான். தளபதிகள் சமன பௌத்த திருவிழாவை கொண்டாடுவது தலையை வெட்டி விடுவோம் என்றார்கள்.
அவர்கள் தான் கூறுகெட்டவர்கள் ஆயிற்றே. அடிதடி சண்டையைத் தவிர ஒரு எழவும் தெரியாது என்று நினைத்து. மந்திரிகளை கேட்டான். அவர்கள் விவரமான ஆரியர்கள் அல்லவா. மக்களே கவருகிற மாதிரி ஏதாவது கதை விட்டால் சரியாகிவிடும் அந்த திருவிழாவை நம் திருவிழாவாக மாற்றி விடுவோம் என்றார்கள். அதற்காக புராணக் கதைகளை உருவாக்கினார்கள்.
மன்னனை திருமாலின் அம்சம் என்றார்கள். மன்னன் உச்சி குளிர்ந்து போனார். இந்த கதைகளை நம்புவார்களா என்று கேட்டார். கலகலப்பு படத்தில் சொன்ன மாதிரி நம்பினால் தான் சோறு என்றவுடன் சந்தானம் நம்புவாரல்லவா, அது போல புராணக் கதைகளை நம்பினால் தான் தீபாவளி மன்னன் சொன்னவுடன் ஏற்றுக்கொண்டார்கள்.மன்னனுக்கு பயந்து ஏற்றுக்கொண்டார்களா அல்லது புராணக்கதைகள் பிடித்து போய், அதிலேயே மயங்கி ஏற்றுக்கொண்டார்களா என்று தெரியவில்லை.
புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப் பண்டிகைக்குத் தக்கவாறு இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும் கூறுவது (அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்). இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்கு அடியில் ஒளித்தது, கண்டு தனது படைப்புத் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டதாக மிரண்ட பிரம்மா திருமாலிடம் வேண்டுகிறார். திருமால் பன்றி அவதாரம் எடுத்து புவியை மீட்க, இதனால் பூமியும் பன்றியும் கொண்ட உறவில் பிறந்த பவுமன் என்பவன் தாயைத் தவிர யாராலும் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெறுகிறான். அழிக்கப்படமுடியாது என்ற ஆணவத்தில் (தாய்க்குலத்தைப் பற்றிய தப்புக்கணக்கு போட்ட முதல் மனிதனாக இருக்கலாம்) கடவுளுக்கும் மக்களுக்கும் அவன் துன்பம் தர, திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்க, திருமகள் சத்யபாமாவாக அவரை மணக்க, இருவரும் 'நரக'ர்களை துன்புறுத்திய 'அசுர'னுடன் போர் புரிகிறார்கள். சத்யபாமா தனது மகன் நரகாசுரனாக மாறிவிட்ட பவுமனைக் கொல்கிறார் என்பது புராணக்கதை.
நரகாசுரன் இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக் கொண்டாடச் சொல்லி வேறு கேட்டு கொண்டானாம். அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்? இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை.
இதில் நரகாசுரனே தனது இறந்தநாளைக் கொண்டாடவேண்டும் என்று கேட்டதாக ஒரு வடிவமும், சத்யபாமா கேட்டுக்கொண்டதாக மற்றொரு வடிவமும் கொண்ட கதைகளும் உள்ளன. அதுபோல இரண்யாட்சதன் கதைக்குப் பதிலாக மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதத்தை ஒளித்து வைத்து அதை மீட்க திருமால் பன்றி வடிவம் எடுத்ததாகவும் மற்றொருவர் வேறுபட்ட கதையும் உண்டு.
இராமாயண இதிகாசத்தில் இராமர்- இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும், அயோத்திக்கு திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளில் தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகிறது.
கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார்.
தமிழகத்தில் முதன்முதலாக கி.பி.15ஆம் நூற்றாண்டு விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. வர சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தஞ்சை மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் தேர்திருவிழாவின் போது வான வேடிக்கையுடன் தீபாவளி டதகொண்டியதாக அங்குள்ள சுவரோவியங்கள் மூலம் அறியலாம்.

Wonderful.. detailed description.. greetings
ReplyDelete