நான் முன்பே குறிப்பிட்டிருந்ததை போல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துக்கான ஒதுக்கீடு என்பது மிக குறைவாக தான் இருக்கும். வருடத்திற்கு மருந்துக்கென்று ரூபாய். 2000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசினுடைய மருந்து கிட்டங்கி MSD எம்எஸ்டிக்கு தேவையான மருந்து பட்டியலையும் அனுப்பி வைப்போம். சில காலம் கழித்து கள்ளி மர பெட்டிக்குள் வைத்தடைத்து மருந்துகள் வந்து சேரும்.
இது போல யுனிசெப் நிறுவனங்களில் இருந்து மருந்துகள் வந்து சேரும். வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய மருந்து, மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்தளிப்பார்கள்.
பெரும்பாலும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் ஏ அண்ட் டி போன்ற சத்து மாத்திரைகளும் அல்கோபார், பிப்ரசின் சிட்ரேட் போன்ற பூச்சி மாத்திரைகளும் மெக்சோ பார்ம், ஐவிஎஃப், ஓஆர்எஸ் போன்ற மருந்துகள் பெரும்பாலும் இருக்கும்.
அப்புறம் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் போன்ற தலைப்புகளின் கீழ் கொஞ்சம் மருந்துகள் கிடைக்கும். அதை வைத்து சமாளிப்போம்.
அதன் பின்னர் வருடத்திற்கு 5000 ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு அதிகரித்தது.
அந்த ஒதுக்கீட்டை வைத்து அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களே பொதுத் துறை நிறுவனங்களான ஐடிபிஎல், டிடிபிஎல், பெங்கால் இமயூனிடி, ஸ்மித் ஸ்டானிஸ்டிரீட் போன்ற நிறுவனங்களில் மருந்துகளை பெற்று ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனைகளை நடத்துவோம். அதன் பின்னர் அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலகங்களே நேரடியாக அந்த நிறுவனங்களிடமிருந்து தேவையான மருந்துகளை பெற்றுக் கொண்டு வழங்கியது.
அதன் பின்னர் அந்த முறை மாறி இயக்குனரகங்கள் ஆணை பிறப்பித்து, அதன்படி அந்த நிறுவனங்கள் வழங்கும் மருந்துகள் முறை நடைபெற்றது.
பின்னர் இன்ப சாகரன் என்கிற ஐஏஎஸ் அதிகாரி சுகாதாரச் செயலாளராக வந்தபோது நேரடியாக சுகாதாரத் துறையின் ஆணைப்படி மருந்து நிறுவனங்கள் வழங்கும் முறை வந்தது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன், மருந்துகள் இந்தியாவில் மட்டும் தான் எல்லா மருத்துவ நிலையங்களிலும் தேவையான மருந்துகள் தாங்களே தீர்மானித்து பயன்படுத்தும் முறை வந்துள்ளது என்றால் எத்தனை நிலைகளை தாண்டி வந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்...
1990களில் தான் ஒரு முன்மாதிரியான புரட்சிகரமான திட்டம் வந்தது. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது, உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு அத்தியாவசிய மருந்துகள், சிறப்பு சிகிச்சை மருந்துகள் என்று ஒரு அட்டவணை தயாரித்து, அவற்றை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்ட மாவட்ட மருந்து கிடங்குகளிலும் சேமித்து வைத்து, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் பெற்று பயன்படுத்தும் நிலை உருவானது.
இதற்காக அனைத்து மருத்துவ நிலையங்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த நிறுவனங்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப தேவைப்பட்டியலை தயாரித்து, தங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டு மூலமாக மருந்துகளை பெற்று வழங்கும் முறை வந்தது. மேலிருந்து அனுப்பப்படக்கூடிய உள்ளூர் மருந்துகள் தேவை என்பதை முழுமையாக புரிந்து கொள்ள வாய்ப்பில்லாததால், அவர்களே தங்களுக்கு தேவையான மருந்துகள் பெற்றுக்கொள்ளும் போது உபரியாக மருந்துகள் தேக்கமடைவது, வீணாவது தவிர்க்கப்படுவதோடு தங்களின் நிலையத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் முறை இது. நிதி ஒதுக்கீடு முறை என்பது அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் வெளிப்புற, உள்புறநோயாளிகள் வருகை, அறுவை சிகிச்சைகள் போன்ற சாதனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் அந்தந்த பகுதிக்கு ஏற்ப தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது சாத்தியமானது. இவ்வளவும் நான் சொல்வது அரசினுடைய திட்டத்தை சாதாரணமாக புகழ்ந்து விட்டு போவதற்காக அல்ல.
இதை நான் சொல்வதற்கு முழு உரிமையும் தகுதியும் இருக்கிறது. 40 ஆண்டுகள் அரசுப் பணியில் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, மருந்தகம், இ எஸ் ஐ மருந்தகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டம் மருந்து கிடங்கு, த. சி. காவலர் மருந்தகம், திகார் சிறை புது டெல்லி, பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் என பல்வேறு இடங்களில், 20க்கு மேற்பட்ட நிலையங்களில், மருந்தாளுனர், தலைமை மருந்தாளுநர், மருந்து கிடங்கு அலுவலர் என பல நிலைகளில் பணிபுரிந்தவன் என்பதால், எல்லா மாற்றங்களையும் நானே வாழ்க்கையில் சந்தித்தவன் என்றேன். உரிமையோடு எழுதுகிறேன்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சுற்றி பார்த்தவன், சென்ற இடங்களில் எல்லாம் மருந்தகங்களை எட்டிப் பார்த்து வந்தவன், இந்த அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவத்துறை குறிப்பாக மருந்துகள், மருந்து விநியோகம் எந்த அளவிற்கு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அனுபவித்து இதை எழுதியிருக்கிறேன். உண்மையில் எவ்வளவு பெரிய மாற்றங்களுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெருமை என்றென்றும் நமக்கு உண்டு.
நினைவலைகள் தொடரும்...
No comments:
Post a Comment