சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 23 October 2025

யாருக்கும் வெட்கமில்லை 1

 மழைக்காலம் வந்தால் போதும் தொலைக்காட்சியினர் குஷி ஆகி விடுவார்கள். ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சிகள் என்றால் ஆறு குளங்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன, நீர்மட்டம் அளவு கடந்த காலங்களில் இல்லாத இந்த ஆண்டில் மிகச் சிறப்பாக தண்ணீர் வந்துள்ளது. மழை நீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக உள்ளன என்றெல்லாம் நாளுக்கு நாள், மணி ஏன் நொடிக்கு நொடி கூட செய்திகள், சிறப்பு செய்திகள், தலைப்புச் செய்திகள், சிறப்பு விவாதங்கள் என்றெல்லாம் தூள் படுத்துவார்கள்..

ஆளுங்கட்சிக்கு எதிரான தொலைக்காட்சிகள், அல்லது நடுநிலை என்ற பெயரில் தங்களது டிஆர்பி ரேட்டை உயர்த்திக் கொள்ள நினைக்கும் தொலைக்காட்சிகள், வரலாறு காணாத வெள்ளம், மக்கள் படும் அவதி, சாலையில் நிற்கிறது வெள்ளம், வீட்டிற்குள் புகுந்தது வெள்ளம், அரசு அதிகாரிகளின் அலட்சியம், என்றெல்லாம் செய்திகள், நேரடி காட்சிகள், விவாதங்கள், என்று தூள் படுத்துவார்கள். 

போதுமான போதாததற்கு வானிலை அறிக்கை, சிறப்பு தகவல்கள், என்றெல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். டீக்கடையிலிருந்து, காணும் இடங்களில் எல்லாம் ஆளாளுக்கு நிபுணர்கள் போல ஏராளமாய் கருத்து கூறுவார்கள்.

வருடா வருடம் உண்மையிலேயே விவரம் தெரிந்த நிபுணர்கள் எல்லாம் எவ்வளவு நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, நீர் செல்லும் பாதைகள் அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அதன் பயன்பாடுகள் எந்த அளவுக்கு தடைப்பட்டு நிற்கிறது அல்லது குறைகள் உள்ளன. இதை நீக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். 

அரசியல் கட்சிகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. நேற்று ஆளுங்கட்சியாக இருந்தபோது, ​​நீர் நிலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்து, அல்லது ஆக்கிரமிப்பதற்கு வழிவகை செய்தவர்கள் இப்போது உள்ள அரசை குறைத்து சொல்லுவார்கள்.

நேற்று எதிர்க்கட்சியை ஆக்கிரமிப்பு பற்றி அதிகமாய் பேசியவர்கள் இப்போது அதைப்பற்றி கண்டு கொள்ளாமல், அடக்கிக்கொண்டு, முன்னாள் ஆளுங்கட்சியை குறை சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். 

இந்த கொடுமைகளை எல்லாம் நீதிமன்றங்களில் சொல்லி, அணுகி நியாயம் கிடைக்கலாம் என்று பார்த்தால் பல நீதிமன்றங்கள் ஏற்கனவே குளங்களாக நீர் நிலைகளாக இருந்த இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளன என்ற செய்தி வேறு வந்து நம்மை பயமுறுத்தும். 

சரி அரசு, அரசியல் கட்சிகள் இந்த அமைப்புகள் தான் இந்த லட்சணத்தில் என்றால், பொதுமக்கள் அவர்களால் இயன்றவரை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு நாசம் செய்து கொண்டிருப்பார்கள். மழை நீர் செல்லும் வழிகளில் எல்லாம் குப்பை கூளங்களை போட்டு அல்லது, தளங்கள் போட்டு, போகும் பாதை எல்லாம் அடைத்திருப்பார்கள் அல்லது வீடு கட்டியிருப்பார்கள்.

மழை நீர் போவதற்கு வழி இல்லாமல் வீடுகளில் புகுந்து விட்டால், எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை, அவர்கள் சரியில்லை, இவர்கள் சரியில்லை என்று கூப்பாடு போடுவார்கள்.. 

 இந்த நூறாண்டுகளில் குறைந்தது 50 சதவீத குளங்கள் அல்லது நீர் நிலைகளாவது காணாமல் போயிருக்கும் என நினைக்கின்றேன். இதில் கூட குறைய இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு என்பது மிக அதிகமாகக் கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை.

அரசு அலுவலகங்களில் இருந்து, கார்பரேட் நிறுவனங்கள் வரை, பெரிய மனிதர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் அன்றாட காட்சிகள் குடிசை நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள், வீடுகள் கட்டி வாழ்வதை நாம் காண முடிகிறது. 

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் பெருமழை பெய்தால் ஆளாளுக்கு, வீட்டுக்கொரு ஆளாவது மண்வெட்டி, கூடையோடு குளக்கரைகளுக்கும் நீர்நிலைகளுக்கும் ஓடுவார்கள். கரையை பலப்படுத்துவது பாதையை ஒழுங்குபடுத்துவது என்ற வேலையை செய்வார்கள். இப்பொழுது எல்லாம் அரசே பார்த்துக் கொள்ளும் என்ற மனோபாவத்திற்கு வந்து, அம்மாமாதிரியான பராமரிப்பு வேலைகளைக்கூட கடனுக்கு செய்து, ஊழலுக்கு வழி வகுத்து தங்கள் தலையில் தாங்களை மண்ணை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

 எல்லோரும் பிறரை குறை சொல்லுகிற அதே நேரம் நம் பங்கிற்கு எவ்வளவு கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று யாருக்கும் தெரிவதில்லை

 தெரிந்தாலும் அதைப்பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை. இதை எல்லாம் பார்க்கும்போது யாருக்கும் வெட்கமில்லை என்று தான் தோன்றுகிறது. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...