சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 5 October 2025

எங்கே போகின்றன திரைப்படங்கள்

 திரைப்படங்கள் என்றாலே எதார்த்தத்திற்கும் அறிவுக்கும் பொருத்தமற்றதா என்ன?! 


பெரும்பாலும் உலகெங்கும் உருவாகும் திரைப்படங்களின் தாக்கமென்பது மேற்கத்திய சினிமாக்களின் பாதிப்பாகத்தான் உள்ளது. மேற்கத்திய திரைப்படம் என்றாலே கிரைம், செக்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு சாதனங்களாகத்தான் உள்ளது.


இந்திய திரைப்படங்களின் துவக்கம் என்பது ஏற்கனவே இருந்த நாடகங்களின் தொடர்ச்சி என்பதால் பெரும்பாலும் புராணக் கதைகளும் மாயாஜால கதைகளுமே வந்தன. பின்னர் சமூகத் திரைப்படங்கள் வந்தாலும் அவை மேற்கத்திய திரைப்படங்களின் பாதிப்புகளுக்கு ஆளானவையாகத்தான் அமைந்தன.


முன்பு திரைப்படங்கள் வெளி வரும் போது வேடிக்கையாக காதல், பாசம், பாடல்கள், சண்டை நிறைந்த குடும்பப் படம் என்று விளம்பரம் செய்வார்கள். 


ஆக எப்பேர்பட்ட படம் எடுத்தாலும், எந்த மாதிரியான தலைப்பில் படம் எடுத்தாலும், காதல், மோதல், செண்டிமெண்ட், சண்டை, இத்யாதி இத்யாதி எல்லாம் கலந்து கலவையாக படம் எடுத்து தொலைப்பார்கள். 

நான் உள்ளடக்கத்தை  பற்றி பேசப்போவதில்லை. உருவகப்படுத்துகிற லட்சணம் கொஞ்சமாவது பொருத்தமாக எதார்த்தத்தோடு ஒட்டியதாக இருந்ததா, இருக்கிறதா என்பது பற்றி தான். 

எல்லா திரைப்படங்களிலும் வில்லன்கள் சகல கெட்ட பழக்கங்களும் உடையவனாக இருப்பான். கொடுமைகளை திட்டமிட்டு செய்து கொண்டே இருப்பான். கதாநாயகன் நல்லவனாக இருப்பான். எந்த கெட்ட பழக்கங்களுக்கு ஆட்படாமல் பிறருக்கு நன்மை செய்து கொண்டே இருப்பான். நிறைய கஷ்டப்படுவான். பிறகு எதிரிகளை வீழ்த்தி வெற்றி கொள்வான். இதில் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். ஆனால் பெரிய அளவுக்கு வித்தியாசம் இருக்காது. 


வில்லன்கள் சட்டத்திற்கு விரோதமாக பல காரியங்கள் செய்து கொண்டே இருப்பார்கள். கதாநாயகன் தோழன் அல்லது தோழி உதவியோடு அவர்களை துப்பறிந்து சண்டை போட்டு அவர்களின் கதையை முடிப்பான். சட்டம் ஒழுங்கு அதற்கென்று ஏதேனும் நிர்வாக அமைப்பு இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் தெரியாது. எல்லா விளையாட்டுக்களும் கதாநாயகனும் வில்லன்களும் மட்டுமே செய்து கொள்வார்கள். 

 

இதில் என்ன அதிசயம் என்று பார்க்கிறீர்களா. அதெல்லாம் ஒன்றும் இல்லை. முன்பெல்லாம் கதாநாயகன் எம்ஜிஆர் சிவாஜி, போன்ற கதாநாயகர்கள் எதிரிகள் கூட்டத்தை ஒற்றை ஆளாக தனது காமெடி நண்பன் உதவியோடு அடித்து உதைத்து துவம்சம் செய்து கட்டிப் போட்டு வைப்பார்கள். இறுதியில் போலீசார் வந்து விசாரிக்ககூடாமல் அவர்களை கைது செய்து அவர்கள் பாட்டுக்கு சென்றுவிடுவார்கள்.எல்லா படங்களிலும் காவலர்கள் இறுதியில் வருவார்கள். போனால் போகிறது என்று நீதிபதியிடம் தண்டனைக்கு அழைத்துச் செல்வார்கள். கதாநாயகன் அல்லது கதாநாயகி எதிரியை கொலை செய்து விட்டால் நீதிபதி மிகவும் சீரியசாக, அவர் தற்காப்புக்காக செய்தார் எனவே மன்னித்து விடுதலை செய்கிறோம் என்று சொல்லிவிடுவார். இந்த கூத்துக்களை நாம் மிக நீண்ட காலம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் தற்போது வரும் படங்கள் எல்லாம் இன்னும் அட்வான்சாக போய்விட்டன. கதாநாயகன் ஒற்றை ஆளாக துப்பாக்கி எடுத்து சுடுவார், சுடுவார், சுட்டுக்கொண்டே இருப்பார். எதிரிகள் எல்லாம் செத்து விழுந்து கொண்டே இருப்பார்கள். எங்கிருந்து துப்பாக்கி கிடைக்கும் என்றெல்லாம் தெரியாது. அதேபோல வெடிகுண்டு எங்கிருந்து கிடைக்கும் என்றெல்லாம் தெரியாது. அப்படியே மிகப்பெரிய கட்டிடத்தையோ அல்லது அமைப்பையோ சுக்கு நூறாக்கக்கூடிய வெடிகுண்டுகள் எல்லாம் வைத்து தகர்த்து எறிவார்கள். நான் குறிப்பிட்ட மாதிரி எந்த சட்ட அமைப்பும் இருக்கிற மாதிரி படங்கள் தெரியவே தெரியாது. 

காவல் துறை என்ன முனிசிபாலிட்டியா குப்பையை அள்ளிக் கொண்டு போவது போல இவர்கள் கொன்று குவித்து தள்ளக்கூடிய ஆட்களை எல்லாம் சும்மா அள்ளிக் கொண்டு போறதுக்கு என்று யாரும் யோசிப்பதில்லை.

 சட்டத்துறையில் அல்லது காவல்துறையில் பணிபுரிபவருக்கு அல்லது குறைந்தபட்ச பொது அறிவு உள்ளவருக்கு தெரியும். ஒரு சாதாரண அடிதடி வழக்கு என்றாலே அதற்கு எவ்வளவு சட்டபூர்வமான நடவடிக்கைகள் நடக்கும். அதுவும் ஒரு ஆள் இறந்துவிட்டால் அதற்கு ஏகப்பட்ட சட்டப்பிரிவுகள், ஏகப்பட்ட நடைமுறைகள் எல்லாம் இருக்கும். திரைப்படங்களில் ஒன்று, பத்தல்ல, நூற்றுக்கணக்கான பேர் கொல்லப்படுவது ரொம்ப சர்வ சாதாரணமாகிவிட்டது. உண்மையில் மாபெரும் யுத்தம் நடக்கக்கூடிய இடத்தில் கூட அந்த அளவிற்கு துப்பாக்கி, வெடிகுண்டு பயன்பாடுகள் இருக்குமோ தெரியாது. ஆனால் நம் திரைப்படங்களில் அந்த அளவுக்கு துப்பாக்கி வெடி மருந்து சாதனங்கள் சர்வ சாதாரணமாக புழங்கும். நாம் எந்த உலகில் இருக்கிறோம் என்றே தெரியவில்லை. 

இந்த பைத்தியக்காரத்தனங்கள் எல்லாம் மக்கள் மண்டையில் ஏறி போனதாலோ என்னவோ சாதாரண பள்ளியில் சிறுவன் எங்கள் தளபதியை கை வைத்து பார் பிளாஸ்ட் செய்து விடுவோம் என்று மிரட்டல் காணொளி போடுகிற லட்சணத்திற்கு சமுதாயத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளோம். 

பார்க்கிறவர்களை சுய சிந்தனை அற்ற அடி முட்டாள்களாக, எதார்த்தம் தெரியாத கூமுட்டைகளாக நினைத்துக் கொண்டு திரைப்படங்களை தயாரித்துக் கொண்டே இருக்கிறார்கள், 

இதில் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் ... இந்த பெருமித கூத்துக்கள் வேறு. 

என்ன அக்கிரமங்கள் நடந்தாலும் இறுதியில் கதாநாயகன் வந்து எல்லாரையும் கொன்று குவித்து காப்பாற்றுவது போல, அரசியலில் வந்து காப்பாற்றி விடுவார். என்று நம்பி பைத்தியக்காரத்தனமாக மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய திரைப்படத்தின் மிகப்பெரிய சாதனை..... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...