சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 30 August 2025

மலிந்து விட்டனவா மாநாடுகள்..

 பொதுவாக உலகமெங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், தங்களுடைய செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், தங்கள் அமைப்புகளை வளர்த்துக்  கொள்ளவும் மாநாடுகள் நடத்துவது வழக்கம்.


அமைப்பு ரீதியான செயல்பாடுகள் பற்றியும், தங்கள் உறுப்பினரிடம் கடந்த காலங்கள் பற்றிய விமர்சனம் செய்யவும், எதிர்காலத்திற்கான திட்டமிடுதலுக்காகவும் நடத்துவார்கள். 


பொது மாநாடுகள் சில தலைப்புகளில், அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்காகவோ மக்களை திரட்டி அதன் மீது விளக்கமளித்து தங்களது கொள்கைகளை பரப்பும் செயலில் ஈடுபடுவார்கள். 


பெரும்பாலும் காங்கிரஸ் இயக்கம், பொதுவுடமைக் கட்சிகள், திராவிட இயக்க கட்சிகள் தங்களுடைய மாநாடுகளை நடத்துவது வழக்கம். 


பொதுவுடமை கட்சிகளுடைய மாநாடு அமைப்பு ரீதியாக மிகவும் திட்டமிட்டு கறாராக நடத்துவார்கள். பொதுச் செயலாளர் அறிக்கை, அமைப்பு ரீதியான அறிக்கை, என கடந்த மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் இடையில் நடைபெற்ற வேலைகள், சந்தித்த பிரச்சனைகள், அமைப்பு ரீதியாக ஏற்பட்ட பலம், பலவீனங்கள் ஆகியவற்றை அறிக்கையாக சமர்ப்பித்து, அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெறவும், செயலாளர் அவை குறித்து விளக்கம் அளித்து, எதிர்கால திட்டமிடுதலை அறிவித்தல் வழக்கம். 


திராவிட இயக்கங்களுடைய மாநாடுகளும் அவ்வாறு தான் நடைபெற்றது. 1957க்கு முன்னாள் சமூக இயக்கமாக வந்த திராவிட முன்னேற்ற கழகம், அரசியல் கட்சியாக தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக மதுரை திருப்பரங்குன்றம் மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து தேர்தலில் பங்கேற்கலாமா என வாக்கெடுப்பு நடத்தி, ஜனநாயக பூர்வமாக தேர்தலில் பங்கேற்பது என அறிவித்தார்கள். அவ்வளவு சிறப்பாக எந்த இயக்கமாவது ஜனநாயகப்பூர்வமாக செயல்பட்டிருப்பார்களா என்பது தெரியவில்லை.


1943 இல் இந்திய பொதுவுடமைக் கட்சி 23 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான 10 நாட்கள் பம்பாயில் நடைபெற்றதாகவும், பொதுச்செயலாளர் ஜோஷிஅறிக்கை சமர்ப்பித்து 9 மணிநேரம் பேசியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதே போல காங்கிரஸ் பேரியக்கங்களும் 1895 லிருந்து ஆண்டிற்கு ஒரு முறையாவது தேசிய மாநாடுகள் நடத்தி பல்வேறு விஷயங்களை விவாதித்து வருகின்றனர். குறைந்தது இரண்டு நாள், மூன்று நாட்களாவது நடைபெற்றதாக வரலாறு. 


அதேபோல பல்வேறு அமைப்புகள், மாநாடுகளை கூட்டி கருத்துருவை உருவாக்குதல், கருத்துக்களை கொண்டு சென்று சேர்த்தல் என செயல்பட்டுள்ளனர். 


ஆனால் இதெல்லாம் மாறி சினிமா கவர்ச்சியை நம்பி அரசியல் என்று வந்த பிறகு மாநாடுகள் எல்லாம் நலிந்து ஒரு கேலிக்கூத்தான நிகழ்வுகளாக மாறி போய் விட்டன. 


மாநாடுகள் என்றால் ஏராளமான மக்களை திரட்டி நாட்டை ஸ்தம்பிக்க வைப்பது தலைவர்கள் பேசுவதை மக்கள் கேட்டுக்கொள்வது, அல்லது வேடிக்கை பார்த்துவிட்டு போவது என்று மாறிவிட்டன. 


இது குறித்து உதாரணங்களை கூறினால் அவ்வளவு சிறப்பாக இருக்காது அல்லது கோபித்துக் கொள்வார்கள் என்பதால் அவற்றைப் பற்றி எழுத விருப்பமில்லை .

 ஆனால் எது எப்படியோ மாநாடுகள் என்றால் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், மதுபான கடைகள் ஆகியவற்றிற்கு கொண்டாட்டம். மக்களுக்கு திண்டாட்டம்....

 மற்றவகையில் அறிவுபூர்வமாக செயல்படுவது என்பது அபூர்வமாக கொண்டு போகிறது.. 



No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...