சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 25 August 2025

அனைவரும் உறவினர்

 அனைவரும் உறவினர்கள்-

 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 

உலகிலுள்ள மக்கள் யாவரும் உறவினர்.

இவை உரைப்பதற்கு எவ்வளவு அருமையாக இருக்கிறது. 


நான் சில ஆண்டு காலம் புதுடில்லியிலே பணியாற்ற வேண்டி இருந்தது. 

அதேபோல சில காலம் அபுதாபிக்கு சென்றிருந்தேன். அங்கு யாராவது தெரிந்த முகம் இருக்காதா என்று ஏங்கி பார்ப்பது உண்டு. ஆசிய நாட்டு முகச்சாயலில் இருந்தால் கூட அருகில் சென்று பேசத் தோன்றும். அபுதாபியில் சில நேரம் பாகிஸ்தானியர் பங்களாதேஷ் மக்களுடன் பேசி இருக்கிறேன். நமக்குத் தெரிந்த இந்தியில் நாம் பேசினால், அவர்களுக்கு தெரிந்த இந்தியில் பதில் அளிப்பார்கள். அப்போது நமக்கு ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் வரும். அதேபோல இலங்கை வாழ் மக்களைக் கண்டால் தமிழிலே கதைக்கும் போது மகிழ்வாய் இருக்கும்.


 அதேபோல டெல்லியில் இருந்தால் போதும் சரி, வெளிநாட்டிலும் சரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நம்மூரை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் வரும். மணிப்பிரவாளமாக தமிழ், மலையாளம், தெலுங்கில் சில வார்த்தைகள், ஹிந்தியில் சில வார்த்தைகள், ஆங்கிலம் என கலவைமொழியாய் எல்லாம் கலந்து பேசுவோம். அந்த உரையாடல் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றால் மகிழ்ச்சி மிக அதிகம் ஆகிவிடும். அப்புறம் நமது மாவட்ட காரர் என்றால் சொல்லவே வேண்டாம். நமது தாலுகா, நமது ஊர் ஏன் நம் தெருக்காரர் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

ஒருமுறை வேட்டி சட்டையோடு டெல்லியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒருவர் வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக ஓடோடி வந்து தமிழை கண்டேன், தமிழரை கண்டேன், என்று மகிழ்வோடு கைகுலுக்கி சென்றார்.

 தெரியாத ஊரில் தன் இனத்தவரை கண்டால் எப்படி மகிழ்வார்கள் என்பதை உணர்ந்து பார்த்தால் தான் தெரியும். இருந்தாலும் கூட இது சரியான உணர்வு தானா?! யாருமே தெரியாதவர் இருக்கும்போது, ​​நமது தேசம், நமது மாநிலம், என்று ஆசைப்படுபவர்கள் சுருங்கி, சுருங்கி, சுருங்கி தெருக்காரர், உறவினர் என்றால் உச்சாணி கொம்புக்கு போய் விடுகிறோமே. இது நல்ல உணர்வு தானா?! 


பொதுவாக பார்த்தால் நன்றாக தோன்றினாலும், நம் தமிழ் கூறும் நல்லுலகு நமக்கு கற்றுக் கொடுத்தது அதுதானா.


யாதும் ஊரே, யாவரும் கேளிர்;தீதும், நன்றும், பிறர் தர வாரா;

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு

வானம் தண் துளி தலைஇ ஆனாது,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே!

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார்

(புறநானூறு - 192)


எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.

என உரைத்ததல்லவா தமிழ் கூறும் நல்லுலகு. 


காக்கை குருவி எங்கள் ஜாதி என உரைத்த பாரதி எல்லா உயிரினங்களையும் தனது உறவினராக பார்த்தான். 

புல்லாகி பூடாகி என உரைத்த மாணிக்கவாசகர் எல்லா ஜீவராசிகளிலும் தன் உயிராக பார்த்தார். 

எல்லா உயிரினங்களையும் தன் உறவினராக, எல்லா ஊரையும் தனது ஊராக பார்த்த நேசித்த பேரறிவினையும், பேரன்பினையும் போதித்தது தமிழ் இலக்கியங்கள். 

ஆகவே தான் பாரதிதாசன் தனது புதிய ஆத்திச்சூடியில் "அனைவரும் உறவினர்" என உரைத்தான். 


அடுத்த வரியாகவே "ஆட்சியை பொதுமை செய்"என ஆட்சியை-பல நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள ஆட்சி அனைத்தையும், பொதுமை செய்-பொதுவான ஒரே ஆட்சி ஆக ஆக்க வேண்டும்      என்றுரைக்கிறார். 


இதையேதான் ரவீந்திரநாத் தாகூர் "பயம் இல்லாத மனம் எங்கே இருக்கிறது"என்ற பாடலில் இவ்விதமாக கூறுகிறார். 

பயம் இல்லாத மனம் எங்கே இருக்கிறது

மனம் பயமின்றியும் தலை உயரமாகவும் இருக்கும் இடத்தில்

அறிவு சுதந்திரமாக இருக்கும் இடத்தில்

உலகம் துண்டுகளாகப் பிரிக்கப்படாத இடத்தில்

குறுகிய உள்நாட்டுச் சுவர்களால்

வார்த்தைகள் வெளிவரும் இடத்தில்

சளைக்காத முயற்சி அதன் கரங்களை முழுமையை நோக்கி நீட்டுகிறது..

காரணம், இந்த உலகம் துண்டு துண்டுகளாக, பகைமை நிறைந்ததாக, சுயநலம் மிக்கதாக, பேராசை கொண்டதாக, அச்சம் மிகுந்ததாக இருக்கிறது. 


அதனால் தான், சாதி, மத, வர்க்க பேதங்கள், உள்ளிட்ட அனைத்து சமூக அவலங்களும் நீங்கி உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாக, சமூக நீதி நிறைந்த தேசத்தில் அனைத்தையும் பொதுமையாக கொண்ட தேசத்தில் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றுரைக்கிறார். 

உலகத்தார் அனைவரையும், விரோத பாவம் நீங்கி, தன் உறவினர் போல் பாவிக்கும் பண்பை இவ்வுலகம் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறது. 

அனைவரும் உறவினர்கள் என எண்ணி ஒற்றுமையுடன் இவ்வுலகம் வாழும் நாளே நன்னாள் அதுவே பொன்னாள் ஆகும்.. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...