நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?! நடிகர்கள் நாடாள ஆசைப்படலாமா!என்ற கேள்வி அடிக்கடி அதிகம் கேட்கப்படுகிறது
ஏன் வரக்கூடாது யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வருவதற்கு உரிய வயது வேண்டும்.
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.. ஆண்பால், பெண்பால், திருநங்கைகள் எந்தப் பிரிவை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், விவசாயி, தொழிலாளி, முதலாளி, வேலை இல்லாதவர், நடிகர், எந்த தொழில் புரிபவராகவும், ஏன் பிச்சைக்காரராக கூட இருக்கலாம்.
எந்தப் படிப்பு படித்தவராகவும், ஏன் படிக்காதவராகவும் கூட இருக்கலாம். படித்தவர்கள் மட்டும் என்ன கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. எழுதப் படிக்கத் தெரியாமலேயே தனது நினைவாற்றினாலே இந்தியாவை ஆண்ட அக்பர் பேரரசர் உண்டு என்பது வரலாறு. நமக்கு எதுக்கு வரலாறு, அதைப் பேசினால் சண்டைக்கு வந்து விடுவார்கள். பெரிதாக பள்ளி படிப்பு படிக்காத காமராஜரும், கலைஞரும், முதல்வராக இருந்து ஜொலிக்க வில்லையா என்ன. நிறைய படித்துவிட்டு முட்டாள்தனமாக ஆட்சி நடத்துபவர்களும் இல்லையா என்ன.
நல்ல ஆரோக்கியமான உடல்நலம், மனநலம் உள்ளவராக இருக்க வேண்டும். மனநலத்திற்கு என்ன சான்றிதழ் வாங்கி வர முடியும். அது அவரவர் செயல்பாட்டில் தெரிந்துவிடும். சரி, அதைப் பற்றி நான் பேசி இன்னொரு விவாதத்தை துவக்க விரும்பவில்லை.
அரசுக்கு ஒழுங்காக வரி செலுத்துபவராக இருக்க வேண்டும். வரிஏய்ப்பு செய்யாமல், தில்லுமுல்லு செய்யாமல், நேர்மையாக இருக்க வேண்டும், மக்கள் நலன் மீது அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும், நல்ல சிந்தனையாளராக, செயல்பாட்டு திறன் உள்ளவராக, அன்பானவராக, உளறாதவராக, எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் சொந்த புத்தி உள்ளவராக இருக்க வேண்டும்.
ஒழுக்கமானவராக, பிறருக்கு முன்மாதிரியாக இருப்பவராக, சுய கட்டுப்பாடு உள்ளவராக இருக்க வேண்டும்.
இதெல்லாம் சட்டத்தில் கிடையாது. ஒரு பேச்சுக்கு தான் சொல்கிறேன்.
இப்படி எல்லாம் சொன்னால், அவர் எப்படி, இவர் எப்படி என்று ஒப்பிட்டு கேவலமாக பேசுவார்கள். ஒருபோதும் நேர்மையானவர்களை ஒப்பிட்டு, இவர் அவரை விட சிறந்தவர் என்று சொல்ல மாட்டார்கள். கேவலமான நடவடிக்கை உள்ளவரை ஒப்பிட்டு, அவரை ஏற்றுக் கொண்டீர்களே, இவர் ஏற்றுக் கொண்டீர்களே என்று பேசுவார்கள். இருந்தாலும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன்.
நடிகர்களை பற்றி பேச்சு வந்ததால் இந்த குறிப்போடு முடித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட காலத்தில் விஸ்வநாத தாஸ் என்று ஒரு ராஜபார்ட் நாடக நடிகர் இருந்தார். அவர் வள்ளி திருமண நாடகத்தில் எப்போதும் முருகன் வேடம் தான் போடுவார். அவர் எப்போது நாடகத்திற்கு வந்தாலும், கதர் ஆடை அணிந்து தேச பக்தி பாடல்களை பாடுவார். உடனே மேடையிலேயே, அல்லது மேடையை விட்டு இறங்கிய உடனேயே பிரிட்டிஷ் போலீஸ் அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பி விடும். சிறையில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் வந்தவுடன் அடுத்த நாடகத்தில் தேச பக்தி பாடல்களை பாட ஆரம்பித்து விடுவார். இப்படி பலமுறை தேச பக்தி போராட்டத்திற்காக சிறை சென்றவர் விஸ்வநாததாஸ்.
இப்படி நடித்துக் கொண்டிருக்க இலையே மேடையிலேயே முருகன் வேடத்தில் அமர்ந்தவாறு உயிர் துறந்து சரித்திரம் படைத்தார் அதேபோல கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தனக்குக் கிடைத்த அத்தனை சந்தர்ப்பத்திலும் சமூக முன்னேற்ற கருத்துக்களை கூறி நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இவ்வாறு நல்ல உதாரணங்களை நிறைய சொல்லலாம். நமக்கு வேண்டியது, நல்ல சிந்தனை உள்ள, மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தீர்க்கக் கூடிய, அன்பு, அறநெறி கொண்டு ஆளக்கூடிய, அரசியல்வாதிகள் தான் வேண்டும்.
அவர் என்ன தொழில் செய்பவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த தகுதிகள் இல்லை என்றால் சினிமா துறையில் கிடைத்த புகழை மட்டும் வைத்துக்கொண்டு நடிக்க வருவது என்பது, மக்களை ஏமாற்றி சுரண்டும் செயலே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சினிமா துறையில் மட்டும் தான், மற்றவர்களுடைய சிந்தனை, பாடல்கள், கருத்துக்கள், எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, திரையில் முகம் காட்டுபவருக்கே, கருத்துக்கள் சொந்தமானதாக நம்பக்கூடிய மக்கள் நிறைந்திருப்பதால் இதைக் கூற வேண்டியது அவசியம் ஆகிறது.
வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும் பொய்யகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்ஙனும் மேலோர்
-பாரதி
அருமை கார்த்தி
ReplyDelete