"படுகொலை இல்லம்"
"தி ஸ்லாட்டர்ஹவுஸ்" திரைப்பட விமர்சனம்.
"தி ஸ்லாட்டர்ஹவுஸ்" என்று குறிப்பிடப்படும் முக்கிய பாரசீக திரைப்படம், அப்பாஸ் அமினி இயக்கிய 2020 ஆம் ஆண்டு வெளியான ஈரானிய குற்ற நாடகத் திரைப்படமாகும். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஈரானுக்குத் திரும்பும் அமீரைப் பின்தொடர்ந்து கதை அமைந்துள்ளது. தனது தந்தை பணிபுரியும் இறைச்சி கூடத்தில் ஒரு குற்றத்தை மறைப்பதில் ஈடுபடுகிறார்.
அமீர் தாயை இழந்து , பிழைப்பு தேடி பிரான்ஸுக்கு சென்ற இடத்தில் அங்குள்ள போலீஸ்காரனின் எலும்பை முறித்து காயப்படுத்தியதற்காக நாடு நடத்தப்பட்டு, மீண்டும் இரானுக்கு வந்து தந்தையிடம் சரண் அடைந்தவன்.அமீரின் தந்தை அபேத், மோட்வல்லி என்பவரது இறைச்சிக்கூடத்தில் காவலராக பணியாற்றியவர். அவரது கவனக்குறைவால் மூவர் இறைச்சி கூடத்தில் குளிரூட்டறையில் இறந்து விடுகிறார்கள்.
தகப்பனாரின் கெஞ்சலாலும் பாசத்தை மீற முடியாமலும் அந்த மூன்று பிணங்களை அப்புறப்படுத்தி புதைப்பதற்கு உதவி செய்கிறார் அமீர். இறந்து போன ரஷீத்துடைய மகளும் மகனும், தந்தையும் அவருடைய மைத்துனர்களும் இருவருடைய நிலை தெரியாமல் தேடி வருகிறார்கள்.
அபேத்தினுடைய முதலாளி மோட்வல்லி பெரிய அளவிலான இறைச்சி வெட்டும் தொழிலை நடத்தி நஷ்டம் அடைந்ததால், வெளி உலகத்திற்கு இறைச்சி வெட்டு தொழிலை செய்கிற மாதிரி பாவனை செய்து கொண்டு, அமெரிக்க டாலர் கள்ளப் பரிவர்த்தனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஈராக்கில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படும் டாலர்களை கைமாற்று தொழிலை செய்து வந்த ரசீது மற்றும் மைத்துனர்கள் இருவரையும் திட்டமிட்டு குளிரூட்டும் அறையில் தள்ளிவிட்டு கொலை செய்து விடுகிறார். ஆனால் அபேத்தினுடைய கவனக்குறைவு என்று அவன் மீது பழி போட்டு அவரையும் அவரது மகன் அமீரையும் பயன்படுத்தி பிணங்களை அப்புறப்படுத்தி விடுகிறார். முதலாளி.
அமீர், அவன் அறியாமலேயே அந்த கள்ள பரிவர்த்தனை கூட்டத்திலே சேர்ந்து பணியாற்ற ஆரம்பிக்கிறான். ஒருபுறம் தந்தையாரோடு பொருளாதார நெருக்கடி சம்பந்தமான மோதல், மறுபுறம் ரசீதுனுடைய மகனும் மகளும் தொடர்ச்சியாக தந்தையை தேடி அவனிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அலைவது, ரஸீதுனுடைய சாவுக்கு யார் காரணம் என்று அறிந்து கொண்டு இறுதியாக அவனது மகளிடம் தெரிவித்து பிரச்சனைக்கு தீர்வு காண்கிறான்.
மனசாட்சி உள்ளவனாக, தந்தை மீது பாசம் கொண்டவனாக, தன்னை அறியாமலே தவறான பக்கம் சென்றாலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க முயற்சிப்பது என அமீராக நடித்திருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார்..
பிணத்தை அப்புறப்படுத்தி விட்டு அபேத் படும் அவஸ்தை, மகன் மற்றும் குடும்பத்தார் மீது கொண்டுள்ள பாசம், பொருளாதார பிரச்சனை, மகனுடன் மோதல் என அபேதாக நடித்திருப்பவர் பிரமாதமாக நடித்திருப்பார்.
கொல்லப்பட்ட தந்தை மற்றும் உறவினர்களை தம்பியுடன் விடாமுயற்சியுடன் தேடும் பெண் அஸ்ராவாக நடித்த பரன்கோசாரி மிக இயல்பாக நடித்துள்ளார்.
இறைச்சி கூட முதலாளியான மோட்வல்லியாக நடித்தவர், தனது சுய லாபத்திற்காக எல்லா தகிடுதித்தங்களையும் செய்து கொண்டு வெளி உலகில் மிக அமைதியானவர் போல காட்சியளிப்பவராக புதுவிதமான வில்லனாக நடித்துள்ளார்.
இரான் நாட்டின் பொருளாதார நெருக்கடி, பணம் சம்பாதிக்க நடைபெறும் கள்ளபரிவர்த்தனை, பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லும் மனிதர்கள் இவற்றை வைத்து பின்னப்பட்ட யதார்த்தமான பாரசீக திரைப்படம் இது.
தலைப்பு: தி ஸ்லாட்டர்ஹவுஸ் (பாரசீக: கோஷர்கா)
ஆண்டு: 2020
இயக்குனர் மற்றும் எழுத்தாளர்: அப்பாஸ் அமினி
நடிகர்கள்: அமீர் ஆக அமீர்ஹோசைன் ஃபாத்தி, மோட்வல்லியாக மணி ஹாகிகி, அஸ்ராவாக பரன் கோசாரி, அபேத் ஆக ஹசன் பௌர்ஷிராசி ஆகியோர் நடிக்கின்றனர்.
பாரசீகம் மற்றும் அராபிய மொழியில் வந்த வித்தியாசமான திரைப்படம் இது.
No comments:
Post a Comment