சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 26 January 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

புலவர் மருதன் இளநாகனார் தனது வறுமை நீங்கிட அரசன் ஆய் அண்டிரன் என்பவனை புகழ்ந்து பாடி பரிசில் பெற செல்கின்றான். வீரஞ்செறிந்த மன்னனாகிய ஆய் அண்டிரனது படையிலுள்ள இளைஞர் விழுப்புண்களை சுமந்து சுமந்து மறத்தோள் காய்ப்பேறி உள்ளனர். பாணர்களுடன் சேர்ந்து, அக உணர்வுகளைப் புறத்தே காட்டி, பண்ணிசைக்கேற்ப ஆடலில் திறம்பட நடிக்கும் ஆற்றல் பெற்ற, கொடி போன்ற மெல்லிய இடையினை உடைய விறலியர் என்னும் மகளிர் நடந்து கால்கள் சோர்ந்து போயினர். பின்வாங்காத கொள்கையை உடைய வலிமையாளரின் வழித்தோன்றலாகிய, உயர்ந்த சிகரங்களை உடைய, உழப்படாத அதாவது விவசாயம் செய்யப்படாத நாஞ்சில் மலையின் அதிபதியே!வஞ்சனையில்லாத மனதுடன் பரிசில் பெற வந்து, கனிந்த உள்ளத்தோடு பரிசு கிடைப்பதை எதிர்பார்த்து நிற்கும் நேரம் இது. பொய் சொல்லவில்லை, மெய்யே கூறுகிறேன். வாரி வழங்குவதில் சளைக்காத வேந்தனே! வேந்தர்க்கு உரிய போரில் சாவதற்கு அஞ்சாத வீரனே! நீ,, மிக துன்பம் தரக்கூடிய கடும் வறுமையில் வாடும் நான் உதவிக்காக காத்திருக்கும் சிறு பொழுது கூட காத்திருக்க வைத்திடாது உதவி செய்ய வேண்டுகோள் விடுக்கிற நேரத்தில் கூட வாழ்வதற்காக பொய்கூறமாட்டேன், உண்மையே கூறுகிறேன் என்கிறார் புலவர் மருதன் இளநாகனார். 

இதை காணும் போது வயிறு வளர்ப்பதற்காக, சுக வாழ்வு வாழ யாரையோ திருப்திபடுத்த, நாளும், பொழுதும் தமிழ்நாட்டில் மக்களின் சுயமரியாதை, தன்மானம், மாதர் விடுதலைக்காக போரிட்ட பெரியோரை முன்பு பெரியார் என்பதும், பின்னர் வசைபாடி திரியும் ஈனரை என்னவென்று சொல்வது.... 

************

139. சாதல் அஞ்சாய் நீயே!

பாடியவர்: மருதன் இளநாகனார். பாடப்பட்டோன்:ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பரிசில் கட நிலை. சிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன், மெய் கூறுவல் என்னும் புலவரது உள்ளச் செவ்வி.

(ஆய் அண்டினரது சிறப்பை வியந்து கூறிப் பரிசில் வேட்டலின் பரிசில் கடநிலை ஆயிற்று)

சுவல் அழுந்தப் பல காய

சில்லோதிப் பல்இளை ஞரும்மே,

அடி வருந்த நெடிது ஏறிய

கொடி மருங்குல் விறலிய ரும்மே,

வாழ்தல் வேண்டிப் 

பொய் கூறேன், மெய் கூறுவல்;

ஓடப் பூட்கை உரவோர் மருக!

உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந:

மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்,

கனிபதம் பார்க்கும் காலை யன்றே; - 

ஈதல் ஆனான், வேந்தே, வேந்தர்க்குச்

சாதல் அஞ்சாய், நீயே, ஆயிடை,

இருநிலம் மிளிர்ந்திசின் ஆங்கு, ஒருநாள்,

அருஞ் சமம் வருவதாயின், வருந்தலு முண்டு, என் பைதலங் கடும்பே. - புறநானூறு 139ஆம் பாடல். 

*****************

பொருள் :

சுமந்து சுமந்து தோள் வடுப்பட்ட இளைஞர்களோ பலர்; அடிவருந்த நெடும்பொழுது ஏறியதால் களைத்தனர் எம் விறலியர்; இவர் உயிர் வாழ்வதை விரும்பியும் யான் ஏதும்.பொய் செல்லேன். வலியோர் மரபினனே! நாஞ்சில் மலைக்கு வேந்தனே உண்மை யாகவே சொல்லுகிறேன்; என் வறுமைநிலை நின் செவ்வியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அச் சிறிதளவு காலமும் தாங்காததாகும். நின் அரசன் வேண்டியதை நினக்கு அளித்தனன்! அவனுக்காகப் போரிற் சாவும் நீ அஞ்சாய். அப்படிப் போர் வந்துவிட்டால், நீயும் எனக்கு உதவுமுன் போருக்குப் புறப்பட்டு விட்டால், என் சுற்றமும் பசியால் அழிந்துபோம். ஆதலின் விரைந்து உதவி செய்து அருள்க, பெருமானே! -



No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...