மானை ஒத்த மருண்ட விழிகளைக் கொண்டவளே! மாபெரும் மலைகளிலே இயற்கையாய் சேர்ந்திருக்கும் மலை தேனை ஒத்த சுவையான தமிழ் மொழி இருக்கையில், அதனைசேராமல், விலங்குகள் போல உடல் வளர்க்கும் சிற்றின்ப ஆசையால், கூனற்புத்தி கொண்ட அரசின் தமிழ் மொழியை அழித்திடும், வடமொழியை திணித்திடும் குறுக்கு புத்தி அறியாமல் ஏனின்னும் உறக்கத்திலேயே இருக்கிறாய்? அழகான அணிகலன்களை அணிந்த அழகுமிக்க மங்கையே!
காட்டில் வாழும் விலங்குகள் கூட அடிமைத்தளையை வெறுக்கும். வான்புகழ் கொண்ட பெருமைமிகு தமிழன் கொடுமையான அடிமைத்தளையை ஏற்பதோ?! சோம்பல் கொண்ட யானையைப் போன்றே பயனற்ற நிலையில் இருக்கும் மக்களே!வீரம் கொண்ட யானையைப்போல பிளிறி எழுந்து வாருங்கள், உறங்காதீர்கள்!என பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்.
********************
மானை நிகர்த்த மருள் விழியே! மாமலைசேர்
தேனை நிகர்த்த தமிழ்மொழியைத் தேறாமல்
ஊனை வளர்க்கும் உரிமையால் நின்றழிக்கும்
கூனல் அரசினரின் கொள்கை அறிந்திருந்தும்
ஏனோ உறக்கத் திருக்கின்றாய்? ஏந்திழையே!
காணின் விலங்கும் அடிமை கடிந்தொதுக்கும்;
வானப் பெருந்தமிழர் வல்லடிமை தாங்குவதோ?
யானைப் பிணவே!
பிளிறேலோ ரெம்பாவாய்!23
🙏 🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment