அழகிய கெண்டை மீன்களைப் போன்ற கண்களை உடையவளே! தமிழ் கூறும் நல் உலகில் ஏராளமான புலவர்கள் படைத்திட்ட நல் நூல்களை கற்று செந்தமிழின் பெருமைதனை நன்குணர்ந்தாய்.
கொடுங்கோல் புரிந்து தீயாட்சி செய்வோர் ஆரியரின் மொழிதனை மேலான நிலையில் வைத்து பைந்தமிழை தாழ்த்தி, நம்தமிழரை வால்பிடிக்கச் செய்கிறார்கள் என்பதை காண்பாயாக!வேல் போன்ற விழிகளை உடையவளே!
இந்நிலை அறியாது நூல் போன்ற இடையழகும், நெற்றியின் ஒளியும் வாடி, மிகுதியாக வியர்க்கும் நிலையில்உடைந்த கட்டிலின் மீது (கண்) அயர்ந்து உறங்குகிறாயே .மொழிக்காக சமர் புரிய இக்கணமே விழித்தெழுந்திடுவாய் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்..
***********
செல்விழியே! முன்னைச் செழும்புலவோர் ஆக்கிவைத்த
நூல்வழியே செந்தமிழின் நுண்பெருமை கண்டாய்காண்!
கோல்வலியால் - ஆட்சிக் கொடுமையினால் நம்மவரை
வால்பிடிக்கச் செய்தே வடவர் கொடுமொழியை
மேல்நிலையில் வைத்து மணித்தமிழைத் தாழ்த்தினர்காண்!
நூலிடையும் வாட நுதலும் நனிவெயர்ப்பக்
கால்குடைந்த கட்டில்மேல் கண்ணயர்ந்து தூங்குகின்ற
வேல்விழியே! இக்கால் விழியேலோ ரெம்பாவாய்!20
🙏🙏🙏🙏🙏🙏
அருமை தமிழ்த் தொண்டு தொடரட்டும்.... எல்லோருக்கும் நினைவூட்டல் எப்போதும் அவசியம்...
ReplyDelete