என் அப்பா காலத்து வேடிக்கை பேச்சு வழக்கு இது. எவரெஸ்ட் சிகரத்தின் மீது டென்சிங் ஏறிய போது அங்கே ஒரு தேநீர் விற்கும் மலையாளி அவரை வரவேற்று தேநீர் பாத்திரத்தோடு நின்று அவரிடம் தேநீர் வியாபாரம் செய்ததாக ஒரு ஜோக் பிரசித்தமாக இருந்தது.
அந்தக் காலத்தில் வேடிக்கையாக சொல்லப்பட்ட விஷயம், உலகம் முழுக்க எங்கு சுற்றினாலும் இந்த மூன்று பேரை பார்க்கலாம் என்பார்களாம்.
யூதன், சீனன், தமிழன் இவர்கள் பிழைக்க போகாத இடமே இல்லை என்று கிண்டல் அடிப்பார்கள்.
ஆனால் வரலாற்று ரீதியாக தமிழர்கள் கடலோடி வணிகம் செய்தார்கள் என்பது பிரசித்தம். மேற்குலக நாடுகளான அரபுதேசங்கள், எகிப்து, கிரேக்கம், ரோமானிய பேரரசு, பாரசீகம், கிழக்குலக நாடுகளான பர்மா, லாவோஸ், கம்போடியா, என பலநாடுகளுக்கு வர்த்தக நிமித்தமாகவும் பின்னர் சோழப் பேரரசு காலங்களில் ஆட்சிகளை கைப்பற்றி தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. பின்னாளில் ஆங்கிலேயர் காலனித்துவ காலங்களில் தமிழர்கள் பலரை ஆங்கிலேயர்கள் குடியேற்றினார்கள் என்பதும், போரில் தோற்றுப் போன மருது பாண்டியர் இனத்தின் வாரிசுகளை கிழக்குலக நாடுகளுக்கு நாடு கடத்தினார்கள் என்பதெல்லாம் இன்றைய தலைமுறை மறந்து போன வரலாறு. அதுபோல பிஜி தீவுகளில் கரும்பு தோட்டங்களில் பணியாற்றவும் தென்னாபிரிக்க நாடுகளில் இன்னும் பல தேசங்களுக்கு கூலி வேலை செய்யவும் தமிழர்களை அழைத்து சென்றிருக்கிறார்கள். இழுத்தும் சென்றிருக்கிறார்கள். காலங்கள் மாறி உலகம் சுருங்கி விட்டது. அரசியல் அமைப்புகளும் மாறிவிட்டன. ஆங்காங்கே தலைமுறை தலைமுறையாக தங்கிவிட்ட தமிழர்களும் தற்காலத்தில் தொழில் நிமித்தமாகவும், வேலை நிமித்தமாகவும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இன்று ஏராளமாய் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள்.
அரசின் கூற்றுப்படி புலம்பெயர் தமிழர் (Tamil diaspora) எனப்படுவோர் இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டிருந்து ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களைக் குறிக்கின்றது. குறிப்பிடத்தக்க புலம்பெயர் தமிழர் சனத்தொகை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய கிழக்கு, ரீயூனியன், தென்னாபிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு, பிஜி, கயானா, மியான்மர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரான்சிய மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பா, அவுத்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர். அரசின் கணக்கின்படி புலம் பெயர்ந்த தமிழர்கள் சுமார் 33 லட்சம் பேர் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் வழக்கத்திலுள்ள மொழிகளை கற்று அம்மொழி பேசும் மக்களாகவே மாறிப்போயினர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறியோர் பிற இனத்தவருடன் கலந்துவிட்டனர். ஏனையோர் சம காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்தோர் அடையாளம் புராதன மரபுரிமையில், தமிழ் மொழியில், தமிழ் இலக்கியத்தில் வேரூன்றி, தற்போதும் உயிர்த்துடிப்பான கலாச்சாரத்தில் காணப்படுகின்றது. ஆரம்ப குடியேற்றக் குழுக்கள் பற்றி பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை.
மிக தொன்மையான இனமான தமிழ் மக்கள் தங்களுக்கு என்று வரலாறு இலக்கியம் என்று ஏராளமான விழுமியங்கள் இருந்தாலும் இன்றைய தலைமுறையிடம் அது முழுமையாக நீடித்திருக்கிறதா என்கிற தமிழ் கூறும் நல் உலகுக்கு உள்ளது எனவே தான் புலம்பெயர் தமிழர்களுக்கு மொழி இலக்கியத்தை தமிழினத்தின் பெருமையை கொண்டு சேர்க்கிற வகையிலும் நினைவுபடுத்துகிற வகையிலும் இந்நாளை உலக புலம்பெயர் தமிழர்கள் நாளாக கொண்டாடி வருகிறோம் தமிழின் தொன்மையையும் பெருமையையும் போற்றி காப்பாற்றிடுவோம்.
No comments:
Post a Comment