சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 26 January 2026

தேசபக்தி போற்றிடுவோம்!

 


இன்று இந்தியாவின் 77வது குடியரசு தினம். நமக்கு, நாமே, நமக்காக அமைத்துக் கொண்ட அரசு எ
ன பெருமைப்பட தக்க உயர்ந்த தினம்.

  மனித குலம் தோன்றியதில் இருந்து சமுதாய அமைப்பு என மாறிய பிறகு, சிறு சிறு அரசுகளாகவும், பின்னர் அங்கம் வங்கம், கலிங்கம்.... என 56 தேசங்களாகவும், ஏராளமான படையெடுப்புகளை சந்தித்து பல அன்னியரின் ஆளுகைக்கு உட்பட்டது நம் தேசம் . 500 1000 என ஏராளமான குட்டி ராஜ்யங்களையும் பல பேரரசுகளாகவும், இறுதியாக அந்நிய ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டு விடுதலை பெற்றது நம் இந்திய துணை கண்டம். பல நூற்றாண்டுகளாக ஆயுத வலிமை படைத்தவர்கள் உருவாக்கியது தான் அரசு என்ற நிலை மாறி, மக்களே தங்களை ஆட்சி செய்பவர்களை தேர்ந்தெடுக்கின்றனர் என்ற உன்னத நிலைக்கு மாறியதற்கான அறிவிப்பை உலகிற்கு பறை சாற்றிய நாள் இந்திய குடியரசு தினம். இதில் நிறை குறைகள் இருக்கலாம், இருந்த போதிலும் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை மாறி ஆட்சியாளர்களை மக்களே தேர்ந்தெடுத்த ஆட்சியை ஒப்படைக்கும் நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு அடிப்படையான கேள்வியை இந்நேரத்தில் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தேசம் தேசபக்தி என்றால் என்ன?! 

வெறும் மண்ணும், ஆறும், நிலங்களும், கட்டிடங்களும், நவீன கட்டமைப்புகள் மட்டும் நேசிப்பதா?

 தேசத்தில் வாழும் மக்கள் நலமாக வாழ்கிறார்களா, முன்னேறி விட்டார்களா, நல்லிணக்கத்தோடு அனைவரும் சமாதான சகவாழ்வு வாழ்கிறார்களா என்பது தான் அந்த அடிப்படையான கேள்வி? 

வறுமை என்பது ஒரு வன்முறை. ஒரு குழந்தையைப் பட்டினி போடுவது வன்முறை. ஒரு கலாச்சாரத்தை ஒடுக்குவது வன்முறை. பள்ளி மாணவர்களைப் புறக்கணிப்பது வன்முறை. உழைக்கும் ஒரு நபருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவது வன்முறை. சேரி வீடுகள் வன்முறை. மருத்துவத் தேவைகளைப் புறக்கணிப்பது வன்முறை. சமத்துவத்தின் மீதான அவமதிப்பு வன்முறை. மேலும், மனிதகுலத்திற்கு உதவ மன உறுதி இல்லாதது கூட, ஒரு நோயுற்ற மற்றும் கொடூரமான வன்முறையின் வடிவமாகும் என்கிறார் சமூக சிந்தனையாளர். 

எவ்வளவோ எழுத நினைத்தாலும், ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என நினைக்கும்போதெல்லாம் மேலே குறிப்பிட்ட விசயங்கள் தான் மனதுக்குள் வந்து போகிறது. எனது தேசமும் அத்தகைய வன்முறையற்ற, மனிதநேயமிக்க, வளர்ச்சி அடைந்த தேசமாக மாறிட இந்த 77வது குடியரசு நாளில் சபதம் ஏற்போம்!! 

இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,

எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,

சிறைவாச மின்றி

அறிவு வளர்ச்சிக்கு

எங்க பூரண

விடுதலை உள்ளதோ,

குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்

வெளி உலகின் ஒருமைப்பாடு

எங்கே உடைபட்டு

துண்டுகளாய்ப்

போய்விட படவில்லையோ,

வாய்ச் சொற்கள் எங்கே

மெய்நெறிகளின்

அடிப்படையிலிருந்து

வெளிப்படையாய் வருகின்றனவோ,

விடாமுயற்சி எங்கே

தளர்ச்சி யின்றி

பூரணத்துவம் நோக்கி

தனது கரங்களை நீட்டுகிறதோ,

அடிப்படை தேடிச் செல்லும்

தெளிந்த

அறிவோட்டம் எங்கே

பழமையான பழக்கம் என்னும்

பாலை மணலில்

வழி தவறிப்

போய்விட வில்லையோ,

நோக்கம் விரியவும்,

ஆக்கப் பணி புரியவும்

இதயத்தை எங்கே

வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த

விடுதலைச் சுவர்க்க பூமியில்

எந்தன் பிதாவே!

விழித்தெழுக

என் தேசம்! - ரவீந்திரநாத் தாகூர். 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...