அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்க்கும் தலைவணங்குவதைப்போல வெட்கக்கேடான விஷயம் உலகில் இல்லை. - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
வணிகத்தின் துணையோடு உள் புகுந்து, வஞ்சகங்களின் மூலமாக வளர்ந்து, இங்கிருந்த ஆண்ட பரம்பரையினரின் துரோகம், பேராசை, செயலின்மை, திறமையின்மை,ஊழல், பொறுப்பின்மையைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் ஆட்சியை கைப்பற்றி இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தனர்.
ஆட்சியை பறி கொடுத்தவர்களும், அதிகாரத்தை இழந்தவர்களும், ஆங்கிலேயர் படைப்பிரிவில் நிலவிய அசமத்துவம் மற்றும் அநீதிக்கு எதிராக திரண்ட படைவீரர்களுமாக இணைந்து நடத்திய சிப்பாய் கலகம் என்னும முதல் சுதந்திரப் போர் தோல்வியடைந்து பல பத்தாண்டுகள் கழித்து, ஆங்கிலேயர் உருவாக்கியது தான் காங்கிரஸ் என்ற இயக்கம். பின்னர் இந்திய படித்த மேல் தட்டு வர்க்கத்தினரால் கைப்பற்றப்பட்டு, சுதந்திரத்திற்கான இயக்கமாக காங்கிரஸ் மாறியது என்பது உலகறிந்த உண்மை.
அப்படி உருவான சுதந்திர இயக்கமும், கெஞ்சுதலில் இருந்த போது, போராடி தான் சுதந்திரம் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது இளைஞர் பட்டாளம். இளைஞர் பட்டாளத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..
மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்த சுபாஷ் சந்திர போஸ் இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஆங்கிலேயருக்கு அடிமை பணி விருப்பம் இல்லாமல் இந்திய விடுதலைக்காக பணியாற்றுவதே தனது லட்சியமாக கொண்டு அரசியல் வாழ்க்கையை துவக்கினார்.
காங்கிரஸ் பேரியக்கம் போராட்டக்காரர்களுக்கும் சமரசவாதிகளுக்குமிடையில் ஊசலாட்டத்தில் திகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போராட்டவாதிகளின் தலைமகனாக நின்றார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட போது போராட்டவாதிகள் அவரை ஆதரித்தனர். சமரசவாதி காந்தியும் அவரது பரிவாரமும் பட்டாபி சீதாராமையரை தலைவர் பதவிக்கு போட்டியை நிறுத்தியது. போராட்ட வாதிகளுடைய கை மேலோங்கி சுபாஷ் சந்திர போஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பட்டாபி சீதாராமையரது தோல்வியை தனது சொந்த தோல்வி என அறிவித்து விட்டு காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பது வரலாறு.
காங்கிரஸ் கட்சியை நடத்துவதே நேதாஜிக்கு மிகப்பெரிய போராட்டமாக திகழ்ந்தது. ஒரு பக்கம் பிரிட்டிஷாரோடு மோதிக்கொண்டே மறுபுறம் சமரசவாதிகளோடும் போராட வேண்டிய சூழ்நிலை நேதாஜிக்கு... பிரிட்டிஷாரின் அடக்குமுறை காரணமாக வீட்டுச்சிறையில் இருந்த நேதாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷாரோடு நேரடியாக மோதலில் ஈடுபட்டார். சுதந்திரப் போராட்டத்தின் வடிவத்தை, போக்கினை மாற்றினார்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் அவர் தேர்ந்தெடுத்த நட்பு வட்டமானது உலக அளவில் வெறுக்கப்பட்ட நாசிச, பாசிசவாதிகளாக அமைந்தது தான் வரலாற்றின் மாபெரும் கொடுமை. உலக சமாதானத்திற்கும், மனித உரிமைக்கும் அச்சுறுத்தலாக இருந்த நாசிச, பாசிசவாதிகள் தோற்கடிக்கப்பட்டதால் நேதாஜியும் தோல்வியின் பக்கம் ஒதுங்க, நேர்ந்தது. அவர் பயனம் செய்த விமானம் விபத்தில் சிக்க, மர்மமான முறையில் அகால மரணம் அடைந்தார்.
தவறான அணியை தேர்ந்தெடுத்தாலும் ஒரு சரியான போராட்ட வாதியாக திகழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் அடையாளமாகவே திகழ்ந்தார். அவர் ஒருபோதும் மதவாதிகளோடு கைகோர்த்ததும் இல்லை. மத அடிப்படைவாதிகளை ஆதரித்ததும் இல்லை. அவர் மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எல்லா காலங்களிலும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறார்.. வாழ்க நேதாஜி புகழ்!
தோற்றம் :23 ஜனவரி 1897.



No comments:
Post a Comment