சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 9 January 2026

செந்தமிழ்ப் பாவை 24

"வளர்ந்த மயிலைப்போன்றவளே! மயிலானது மயக்கம் தரும் மாலைப் பொழுதில் ஆடிச் களைத்தது போலவும், தலைவனுடன் இரவெல்லாம் கூடிப் பிரிந்து களைத்தது போலவும் நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாயே!இளமையோடிருப்பவளே! தீந்தமிழரின் ஆன்மாவாகிய உள்ளுணர்வை நாங்கள் தேடித் தேடி களைத்துவிட்டோம். அதனைப் பற்றிக் கொள்ள ஓடியும் களைத்தோம்; வலிமையானவர்களிடம் செந்தமிழைப் பாடியும் களைத்தோம். ஆனால், தமிழுக்காகப் பணிபுரிபவர்களைக் காண இயலாது தவிக்கிறோம். அதனால், மனம் வாடி, சோர்வடைந்து குலைந்துவிட்டோம். இதொன்றும் வேடிக்கையல்லவே! இந்நிலை மாறிட வெற்றி கொள்ள ஆர்ப்பரித்து எழுந்து வருவாய் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் துயிலெழுப்புகிறார். 

மயில் ஆடியும், தலைவனுடன் கூடி மகிழ்ந்தும் களைப்பது இயல்பு. ஆனால், தமிழ் இனம் தனது கடமைகளிலிருந்து களைப்படைந்து, நீண்ட காலமாகத் தூங்கிக் கொண்டு அடிமை மனப்பான்மையுடனும், சோம்பலுடனும், சுயமரியாதையை இழந்து, அடிமைத்தனத்தில் ஆழ்ந்திருப்பதை உணர்த்துகிறது. தமிழர்கள் விழித்தெழுந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்ற உணர்வை இந்தப் வரிகள் தூண்டுகின்றன. 

*****************

தேடிக் களைத்தோம் யாம் தீந்தமிழர் உள்ளுணர்வை!

ஓடிக் களைத்தோம்; உரவோர்க்குச் செந்தமிழைப்

பாடிக் களைத்தோம்; பணிபுரிவார் காண்கிலமே!

வாடிக் குலைந்தோம்! வளர்மயிலே! முன்மாலை

ஆடிக் களைத்தாய்போல் - ஆளனொடு நீளிரவாய்க்

கூடிக் களைத்தாய்போல் கொள்ளுதியே வல்லுறக்கம்!

வேடிக்கை யன்று! விறல்பெறநீ ஆர்த்தெழுவாய்!

ஏடி இளையாய்! எழுகேலோ ரெம்பாவாய்!24

🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...