சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 31 January 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 ஒரு நாடு அறிவு சார் விடயத்தில் கொள்வோரும் கொடுப்போரும் ஆக இருக்கலாம். ஆனால் பொருள் சார்ந்த விடயத்தில் கொள்வோராக அதாவது இரப்பவராக ஒருவர் இருப்பின், அந்த நாடு வறுமையில் உள்ளது. அப்படியும் ஒருவர் இரப்பவராக இருப்பின், கொடுக்க மனமின்றி ஒருவர் ஈயாமல் இருப்பர் எனின் அந்நாடு வன்மையான நாடாகும். 

அதேபோல எடுத்துக் கொள்ளுங்கள் என அன்புடன் வேண்டுதல் பெருமையானது என்றால், அதைவிட உயர்ந்தது நான் வாங்கமாட்டேன் என பெருமிதத்துடன் இருப்பது தான் என சங்க கால வாழ்க்கை இருந்ததாக இலக்கியம் கூறுகிறது... என்ன காரணத்தாலோ வல்வில் ஓரியை காணசென்ற புலவருக்கு பரிசில் அளிக்காத நிலையில் பாடிய பாடல் இது..... 

இந்தப் பாடல், பழந்தமிழர்களின் கொடை மனப்பான்மையையும், சுயமரியாதையையும் காட்டுகிறது.

"ஈ என இரத்தல் இழிந்தன்று" என்பது, பிறரிடம் கையேந்தி இரப்பது இழிவான செயல்; ஆனால், இரப்பவனுக்கு "ஈயேன்" (நான் தரமாட்டேன்) என்று மறுப்பது அதைவிட இழிவான செயல்; அதனினும், 'கொள்' என்று அன்புடன் கொடுப்பது உயர்ந்தது; அதனினும், 'கொள்ளேன்' (நான் வாங்கமாட்டேன்) என்று மறுப்பது அதனிலும் உயர்ந்தது 

 இரப்பவனின் நிலை எவ்வளவு தாழ்வானது என்பதை உணர்ந்து, அவனுக்கு ஈயாமல் இருப்பது, அதனினும் இழிவானது, எனவே வள்ளல்கள் ஈய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அதே சமயம், ஈயுபவனின் கொடை மனப்பான்மையையும், பெற மறுக்கும் ஈகை குணத்தையும் இது பாராட்டுகிறது. தெளிந்த நீரை உடைய கடலில் செல்வோர் அதன் நீரை உண்ணமாட்டார்கள். வளர்க்கும் ஆடுமாடுகளும், காட்டு விலங்கினங்களும் சென்று உண்ணும் சேறுபட்டக் கலங்கல் நீரே ஆயினும் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த நீரைத் தேடியே விரும்பி மக்கள் செல்வர்.

ஓரி,

கருமேகம் வானத்திலிருந்து சுரக்கும் மழை போல வழங்கும் வள்ளல் நீ.

உன்னிடம் பரிசில் கிடைக்காவிட்டால், தான் புறப்பட்டு வந்த புல் (நிமித்த காலம்) சரியில்லை என்று, நாடி வந்தவர் நொந்துகொள்வார்களே அல்லாமல் வள்ளல்களைப் பழிக்கும் வழக்கம் இல்லை. 

அதனால் உன்னை நான் நொந்துகொள்ள மாட்டேன். நீ நீடு வாழ்க.  

நூலாசிரியர்: புலவர் கழைதின் யானையார்.

நூல்: புறநானூறு (பாடல் 204). 

*******'******

"' ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் 'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று ! 'கொள்' எனக் கொடுத்தால் உயர்ந்தன்று; அதனெதிர் 'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று அதன் எதிர்,

'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் 

உண்ணார் ஆகுப, நீர் வெட்டோரே;

ஆவும் மாவும் சென்று உண, கலங்கி,

சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும்,

உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, 

உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்

புலவேன் வாழியர், ஓரி! விசும்பில்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.-புறநானூறு 204-ஆம் பாடல். 


திணை :பாடாண் திணை; 

துறை :பரிசில் துறை.

வல்வில் ஓரியைக் 

கழைதின்யானையார் 

பாடியது.! -..." 



No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...