தற்செயலாக முதல் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் பற்றிய காட்சிகளை காண நேர்ந்தது.
மக்களெல்லாம் அடித்து பிடித்துக் கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் அனைத்து கட்டிடங்களிலும் பாராளுமன்ற கட்டிடம் உட்பட ஏராளமான மக்கள்கூட்டம் திரண்டிருந்ததை காண முடிந்தது. எந்த விதமான கட்டுப்பாடும் இருந்ததாக தெரியவில்லை.
ஆரம்ப காலங்களில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மக்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வந்து செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆட்சியாளர்கள் மிக எளிதில் அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவே தெரிந்தது.
ஒரு முறை ஜவஹர்லால் நேருவை சட்டையை பிடிக்காத குறையாக கூட்டம் சுற்றி வளைத்துக் கொண்டு கேள்வி கேட்டதாகப் படித்திருக்கிறேன். ஒருவர் "இந்த சுதந்திரம் எனக்கு என்ன தந்தது" என்று நேரடியாகவே கேட்டார்..
நேரு மிக பொறுமையாக" இப்படி ஒரு பிரதம மந்திரியை நிறுத்தி கேள்வி கேட்கும் அதிகாரத்தையும், உரிமையையும் நமது சுதந்திரம் கொடுக்கிறது" என்றார்.
ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் பிரச்சாரங்களுக்கு வரும்போது சாலையோரங்களில் மக்கள் திரண்டு இருப்பார்கள். அதைக் கட்டுப்படுத்துவதற்காக காலையில் இருபுறமும் சவுக்கு கட்டை போட்டு வேலி கட்டி இருப்பார்கள்.
1977 சென்னைக்கு அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் வந்திருந்தார். சாலையின் இருபுறங்களிலும் மரத்தடுப்பு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் கடுப்பாகி, மக்களை சந்திக்க வரும்போது எதற்காக தடுப்பு வைத்திருக்கிறீர்கள். உடனடியாக நீக்குங்கள் என்று கடிந்து கொண்டார்.
அன்று மாலை பிரதமர் மொரார்ஜி அவர்கள் மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொரார்ஜி அவர்களைப் பார்க்க சென்றோம். போகும்போது வேக வேகமாக காவலர்கள் மரத்தடுப்புகளை எல்லாம் அகற்றிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் கூட்டம் ரத்தாகி விட்டதா என்று பயந்து பிரதமர் வரவில்லையா? எதற்காக மரத்தடுப்புகளை பிரிக்கிறீர்கள் என்று கேட்டோம். பிரதமர் இடத்திலும் மரத்தடுப்பு இருக்க கூடாது என்று கடுமையாக சொல்லிவிட்டார். எந்த இடத்திலும் மரத்தடுப்பை பார்த்தால் எங்களை தொலைத்து விடுவார் என்று கூறினார்கள்.
சில மாதங்களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது சரியான கூட்டம் கூடியது. எந்தப் பக்கமும் தடுப்புகள் கிடையாது. கூட்டத்தில் நடுவே அவரது திறந்தவெளி கார் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அவர் நின்று கொண்டு எல்லோரிடமும் புன்னகை செய்தவாறே கையசைத்துக் கொண்டு வந்தார்.
அவர் மீது வீசப்பட்ட மலர் மாலைகளை பெற்றுக்கொண்டு மக்களிடையே திரும்ப வீசிக் கொண்டே சென்றார். அப்படி ஒரு எளிமையான காட்சியை எல்லாம் கண்டோம்.
கிட்டத்தட்ட அந்த காலத்தில் எல்லா தலைவர்களுமே அதுபோல மக்களின் நெருங்கி சந்திக்க கூடியவர்களாக தான் இருந்தார்கள்.
மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக சட்டமன்ற அலுவலகங்களில் அமைச்சர்களை எளிதில் சந்திக்க கூடியதாக இருந்தது. .
தங்களது கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் அலுவலகங்கள் முன்பு சர்வசாதாரணமாக நடந்து கொண்டுதான் இருந்தது.
1980 எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் சென்னை கோட்டைக்கு முன்பு போராட்டங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டது.
அதுவரை கோட்டை முன்பு ஆர்ப்பாட்டங்கள் என்பது தினசரி நடவடிக்கைகளாக தான் இருந்தது. இப்பொழுதெல்லாம் கோட்டை திசை பக்கமே பொதுமக்கள் எளிதில் அணுக முடியாத அளவுக்கு கெடுபிடிகள் நிறைந்த இடமாக சென்னை கோட்டை மாறிவிட்டது.
கலைஞர் மு கருணாநிதி அவர்கள் புதிய சட்டமன்றத்தினை, மிக எளிதில் மக்கள் அணுகக்கூடிய வகையில் அண்ணாசாலை அருகே அமைத்தார். சுற்றி மக்கள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மிகப் பிரம்மாண்டமான சாலைகள் கொண்ட இடத்திலே மிக அழகாக சட்டமன்றம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பார்வையில் நேரடியாக வரக்கூடிய, பார்வையிலுள்ள ஒரு சட்டமன்ற வளாகம் அமைந்திருப்பது மிக அபூர்வமான விஷயம். ஓரிரு சட்டமன்ற கூட்டங்கள் கூட நடந்தது. துரதிஷ்டவசமாக ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சட்டமன்ற கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
அரசு அலுவலகங்கள் என்பது மக்கள் எளிதில் அணுகக்கூடிய இடமாக தங்களது பிரச்சினைகளை பேசக்கூடிய இடமாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையோ சென்னை கோட்டை சட்டமன்ற கட்டிடத்திற்குள் மனு அளிக்க கூட மக்கள் செல்வதற்கு புதிதுபுதிதாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து கொண்டிருக்கிறார்கள்.
எதில் போய் முடியும் என தெரியவில்லை.



அன்றைய தினம்
ReplyDeleteசுதந்திர தினத்தை ..மக்கள்
கொண்டாடியது கண்முன்னே கொடுத்த கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள்....
இன்று பிரதமர் ஒரு நிருபர்கள் கூட்டத்தை கூட பங்கெடுக்காமல் தவிர்த்து விடுகிறார்..
உன் மக்கள் எப்படி பாராளுமன்றத்தை நெருங்குவது..
.. குதிரை கொம்பு
எம்ஜிஆர் ஆட்சியின் ஆரம்பத்தில் வேலை கொடு இல்லை நிவாரணம் கொடு என்ற ...மாபெரும் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் பேரணியோடு மனு கொடுக்க செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
அன்றைய நிதியமைச்சர் நாஞ்சில் மனோகரன் கோட்டையில் இருந்து வந்து வாலிபர் சங்கத்தின் தோழர்களிடம் மனு வாங்கினார்..
இந்த கோரிக்கை எங்கள் தலைவர் எம்ஜிஆர் படங்களில் சொன்னது தான் ..நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.
மாதம் 50 ரூபாய் நிவாரணமும் வழங்கினார்கள்..
இன்று மக்கள் தலைவர்கள் சந்திக்க முடியாத உயரத்தில்
இருக்கிறார்கள்
மனுவைப் பெற்றுக் கொண்ட நிதி அமைச்சர் உங்கள் சார்பாக நான் முதலமைச்சரிடம் நமது கோரிக்கைகளை பற்றி பேசுவேன் என்று கூறினார் நன்றாக நினைவிருக்கிறது
DeleteThank you' for Remember Indian History
ReplyDelete