சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 15 June 2026

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள்.

 நான் முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்ட மாதிரி தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ நிலைகளுக்கும் மருந்து கொள்முதல் என்பது பல்வேறு நிலைகளைத் தாண்டி ஒரு மையப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த ஏற்பாடாக மாறி உள்ளதை எனது பனிக்காலத்திலேயே கண்ட அனுபவமாகும். 

இந்த அளவுக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மருந்து கொள்முதலுக்கான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று பெருமிதத்தோடு சொல்வேன். ஏனெனில் நான் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருந்தகங்கள். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தொழிலாளர் ஈட்டுரறுதி மருந்தகம், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மருந்து கிட்டங்கி உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ நிலையங்களிலும், 40 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். 

நான்காண்டுகள் புது தில்லியில் திகார் சிறைச்சாலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மருந்தகத்திலும் பணியாற்றினேன். அக்காலங்களில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன். அங்குள்ள மருத்துவ நிலையங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். தமிழ்நாடு அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் மருத்துவ கட்டமைப்பு இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். இத்துறையில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருடைய சேவையும் இந்தியாவிலேயே மிகச் சிறப்பானது என்று பெருமிதத்தோடு நான் அறுதியிட்டுக் கூறுவேன். 

நானும் சில காலம் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை கழகத்தின் பணி புரிந்து உயரிய அனுபவங்களை பெற்றிருக்கிறேன். 

மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் (TNMSC), மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிறுவனம் அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, அவற்றைக் கொள்முதல் செய்தல், சேமித்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு ஒரு சீரமைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுகிறது. இது 1/7/1994 அன்று நிறுவனங்கள் சட்டம், 1956-இன் கீழ் பதிவு செய்யப்பட்டது, ஜனவரி 1995 முதல் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகிய அதன் பணிகள் தொடங்கியது. TNMSC-இன் குறிக்கோள், மிகவும் ஏழ்மையான மக்களுக்கு மருந்துகளையும் பொருட்களையும் கிடைக்கச் செய்வது, "பொதுமக்களுக்குச் சேவை" செய்வது ஆகும்.

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகமானது, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள மிக அத்தியாவசியமான மருந்துகளின் பட்டியல் ஒன்று, அரசு அமைத்த வல்லுநர் குழு மூலம் செழுமைப்படுத்தப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது. 

இது தவிர மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவப் பிரிவுகளுக்குத் தேவையான உயர் சிகிச்சைக்கான மருந்துகள் தனிப்பட்டியலாக தயாரிக்கப்பட்டு, அம்மருந்துகள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தேவைப்பட்டியலின் அடிப்படையில் கொள்முதல் செய்து வைத்திருக்கிறது. அதேபோல அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து விதமான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்தது மூன்று மாத தேவையின் அடிப்படையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

அனைத்திற்கும் மேலாக அனைத்து மருத்துவ நிலையங்களிலும், குறிப்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மருந்துகள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை, மருந்துகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு அவரவர் செயல்பாடுகளின் அடிப்படையில், தேவையின் அடிப்படையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்தந்த நிலையங்களுக்கு தேவையான மருந்துகள் அவர்களே தேவைப்பட்டியல் தயார் செய்து கொள்முதல் செய்து கொள்வதால் மருந்துகள் வீணாவது தடுக்கப்படுகிறது. மருத்துவமனைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இது இந்தியாவிலேயே முன்மாதிரியான மிகச் சிறந்த செயல்பாட்டு முறையாகும். மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு திறந்த ஒப்பந்தப்புள்ளி முறை கையாளப்படுகிறது.

ஒபபந்த புள்ளி கோரும் முறையில் முதலாவதாக எ டெண்டர் என்ற வகையிலான மருந்துகளை வழங்கும் நிறுவனங்களுக்கு உள்ளதற்கான தகுதி உள்ளதா என்பதை கண்டறிய பட்டியல்கள் வழங்கப்பட்டு, போதுமான சான்றிதழ்கள் அந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்படும். அவர்களால் தரமாக தடையின்றி மருந்துகள் தர இயலும் என்பதை உறுதி செய்த பின்னரே, பி டெண்டர் என்ற விலைக்கான ஒப்பந்த பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விலைப் புள்ளிகள் வழங்கிய நிறுவனங்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அம்மருந்துகள்  நிறுவனங்கள் மாநிலமெங்கும் உள்ள மாவட்ட மருந்து கிடங்குகளுக்கு வழங்க வேண்டும்.பெறப்பட்ட மருந்துகளிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அம்மாதிரிகள் அட்டைகள் பிரிக்கப்பட்டு, மருந்து நிறுவனங்களின் அடையாளம் தெரியாத அளவு பிரித்தெடுத்து தரப்பரிசொதனை நிலையங்களுக்கு குலுக்கல் முறையில் அனுப்பப்படும்.தரப்பரிசோதனையில் தரமற்றது என தெரியவந்தால், மருந்துகள் நிறுவனங்களுக்கே திரும்ப அனுப்பப்படும்.தொடர்ச்சியாக தரமற்றவை என அறிவிக்கப்பட்டால் பிற்காலங்களில் அந்நிறுவனம் டெண்டர் முறையில் பங்கேற்காத மாதிரி நிறுத்தப்பட்டு விடும். மிகச் சிறந்த முறையில் ஒளிவு மறைவின்றி முறைகள் கையாளப்படுவதால் தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படுவதால் தமிழ்நாடு அரசு நடத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மிக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. 

மேலும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை கழகம், சர்வதேச தரச்சான்று பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. வெளிப்புற தணிக்கைக்குழுவினர் மூலம் தணிக்கை தொடர்ச்சியாக செய்யப்படும். 

கூடவே அங்கு பணிபுரியக்கூடிய பணியாளர்களைக் கொண்டே உள் தணிக்கையைச் தனியாக செய்து வருகிறது. நானும் உள் தணிக்கைக்கான  (முன்னணி தணிக்கையாளர்) தணிக்கையாளர் பயிற்சி பெற்று அதற்கான சான்றிதழையும் பெற்று உள் தணிக்கையிலும் பங்கேற்றிருக்கிறேன். ஒரு மருந்தாளுனராக மருத்துவ சேவை கழகத்திலும் சிறப்பாக பணி புரியக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு மிகவும் பெருமைக்குரியது. குறிப்பாக நான் பணியாற்றிய காலத்தில் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்த திரு ஜேக்கப் ஐஏஎஸ் அவர்கள் என்னை மிகவும் ஆதரித்து வழிகாட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.

1 comment:

  1. ஏசிஏ.அனந்தன்Tuesday, June 16, 2026

    அன்புத் தோழர் கார்த்திகேயனின் பதிவுகள் அற்புதமாக இருக்கின்றன மருந்தாளுநர் மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் பொதுவான செய்திகளை அருமையாக கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...