மருத்துவத் துறையில் மருந்தாளுனராக பணிபுரிந்த நான், அறிவொளி இயக்கத்தில் எழுத்தறிவு இயக்கத்தில் பங்கேற்றது சற்று வேடிக்கையான விஷயம். சிலருக்கு இது வேண்டாத விஷயம். ஒரு நண்பர் நேரடியாக இந்த மாதிரியான விமர்சனத்தை தான் வைத்தார். நான் எப்படி அறிவொளி இயக்கத்தில் சேர்ந்தேன் என்பது ஒரு வேடிக்கையான கதை
நான் பணிபுரிந்த காலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற அமைப்பிலே இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன் நான் அப்போது அண்டக்குளம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன். அந்த காலத்தில் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும்போது நலக்கல்வியையும் சேர்த்து வழங்கிக்கொண்டிருந்தேன். புகையிலை பயன்படுத்துவதற்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்வது வழக்கம்.
அந்த நேரத்தில் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி என்ற அமைப்பு, பாரத் ஞான் விஞ்ஞான் ஜாதா என்ற கலை யாத்திரையை நடத்தி வந்தது. புதுக்கோட்டை தமிழக முழுக்க பிரச்சாரம் செய்து வந்த அந்த குழு புதுக்கோட்டை நகர்மன்றத்திலும் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தியது. எழுத்தறிவின் அவசியம், கல்வி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி அறிவியல் பிரச்சார நாடகங்கள் நடத்தப்பட்டன. அதேபோன்று ஒரு கலா யாத்திரையை புதுக்கோட்டையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்த திட்டமிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க கலை யாத்திரை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க குன்னண்டார்கோவில் ஒன்றிய அமைப்பாளர் என்ற முறையில் குன்னண்டார்கோவில் ஒன்றியத்தில் மூன்று இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்தேன் .
இக்கலையாத்திரையின் தொடர்ச்சியாக தமிழக அரசு முழு எழுத்தறிவு திட்டத்தினை தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவொளி இயக்கம் என்ற பெயரில் நடத்திட ஆணையிட்டது.
அறிவொளி மைய ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய உதவி ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பெயரில் முழு நேர பணியாளர்களாக மாற்றுப்பணியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னணி நிர்வாகிகள் இணைந்து பணியாற்ற துவங்கினோம்.
இதற்கு அரசு சிறப்பு ஆணை ஒன்றை வெளியிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் மாற்றுப் பணியாக செயல்பட ஆணையிட்டது. அதன்படி நான் குன்னாண்டார் கோயில் ஒன்றியத்தில் அறிவொளி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தேன். அறிவொளி இயக்க ஒன்றிய குழுவிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் தலைவராகவும் நான் செயலாளராகவும் பொறுப்பேற்று பணிபுரிந்தேன். ஒன்றிய குழுவில் நிர்வாக ரீதியாக ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டாட்சியர், உதவி கல்வி அலுவலர், மருத்துவ அலுவலர் என பல்துறை அரசு அலுவலர்களும், முக்கிய பிரமுகர்களும் இணைந்து பணியாற்றினர். அறிவொளி இயக்கத்தின் முதற்பணியாக மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக வீதிநாடகங்கள் நடத்துவது, பாதயாத்திரைகள், சைக்கிள் பேரணி, ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு மக்கள் இயக்கம் செயல்பாடுகளை நடத்தி எல்லோரையும் கல்வி கற்பவைப்பதற்கான முயற்சி நடைபெற்றது.
இன்னொரு புறம் 15 வயது முதல் 45 வரை வயது வரை கல்லாதவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு 10 கல்லாதவர்களுக்கு ஒரு ஆர்வலர்கள் வீதமாக கொண்டு மாலை நேரம் கல்வி கற்பித்தல் என்ற முறையில் எல்லோரையும் கற்க வைப்பதற்கு முயற்சி செய்தோம்.
அந்த ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தலைமை பயிற்சியாளர்களையும், தலைமை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வல்லுநர்களையும், அவ்வல்லுநர்களுக்கு சிறப்பு வல்லுநர்களையும் கொண்டு அறிவொளி இயக்கம், முழு எழுத்தறிவு திட்டம் ஆகியவை பற்றிய பயிற்சிகளை சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்தப்பட்டன.
இவ்வாறு முழு எழுத்தறிவு திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பயிற்சிகள் இவற்றை ஒருங்கிணைக்கும் நிர்வாகப் பணிகள் ஆகிய பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.
இவ்வியக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருடைய வழிகாட்டுதலின்படியும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. இப்பணியில் இணைந்து செயல்பட்டதன் மூலம் ஏராளமான பயிற்சி முகாம்கள், மக்கள் இயக்கங்கள் நடத்தும் ஏராளமான அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. அன்றைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திருமதி ஷீலா ராணி சுங்கத் அவர்கள் எங்களுக்கு ஏராளமான ஆதரவும், வழிகாட்டுதல்களையும், சிறந்த அங்கீகாரத்தையும் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அந்த அனுபவங்களை சொல்வதென்றால் தனியாக புத்தகம் போடுகிற அளவுக்கு உண்டு . எனது துறையில் பிற்காலத்தில் நான் மருந்தாளுகளுக்கும் புத்தாக்க பயிற்சி அளிப்பதற்கு எனக்கு மிகவும் உதவி செய்தது.
ஒரு சிறந்த பயிற்சியாளர் எவ்வளவு சிறந்த தலைமை பண்புகளை பெற்றிருக்க வேண்டும் என்பது அறிவொளி இயக்கத்தின் மூலமாக கற்றுக் கொண்டேன். அறிவொளி இயக்கம் மத்திய அரசின் தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி அரசும், தொண்டு நிறுவனங்கள், மற்றும் மக்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும்.
"Being aware of their deprivation and amalgamation through proper organisation and taking part in the national development programmes." "மக்கள் தங்கள் தாழ்வுக்கான காரணங்களை அறிந்து அவற்றை அமைப்பு ரீதியில் தீர்த்தலும் தேசிய வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்றலுமே" எழுத்தறிவின் முக்கிய குறிக்கோளாகும் அப்பேற்பட்ட உன்னதமான குறிக்கோளுக்காக பணியாற்றியது என்பது அதுவும் ஒரு மருந்தாளுனராக இருந்து பங்கேற்றது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
தங்களின் பதிவுகள் மருந்தாளுநராக எங்களை பெருமை கொள்ள வைக்கிறது!
ReplyDelete👍
ReplyDeleteசமுதாயத்தை நேர்வழியில் நடத்துவதற்கு சமுதாயத்தில் நிலவும் அவலங்களை களைவதற்கு உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கு நீங்களாக தேடிய ஒரு வாய்ப்பு என்று கருதுகின்றேன் இதன் மூலம் உங்களுடைய சமுதாய விழிப்புணர்வு கொள்கை உங்களிடம் மிக ஆழமாக வேரூன்றி அது இன்று ஆல் போல் தழைத்து இத்தகைய கட்டுரைகளை வெளியிடுவதற்கு வழிவகுத்துள்ளது என்று அறியும் பொழுது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சமுதாயப்பணி
Deleteகோவை செல்வராஜ்