கருப்பு தெய்வீகமானது
கருப்பு உயர்ந்தது
கருப்பு அழகானது
கருப்பு கலை
கருப்பு அசல்
கருப்பு புத்திசாலித்தனமானது
கருப்பு தெய்வீகமானது
கருப்பு வசீகரமானது
கருப்பு கம்பீரமானது
கருப்பு அரசகுலம்
கருப்பு மரியாதை
கருப்பு மூதாதையர் சார்ந்தது
நான் கருப்பாக இருப்பதை விரும்புகிறேன்....
இது ஒரு ஆப்பிரிக்க தலைவனின் தன்னம்பிக்கை நிறைந்த பிரகடனம்...
பொதுவாகவே நம் நாட்டில் கருப்பு என்றாலே அலர்ஜி தான். பெண் பார்க்க போகும் போது பெண் சற்று நிற மட்டாக இருந்தால் ஒதுக்கி விடுவார்கள். வேலைக்கு போகின்ற இடங்களிலே, சினிமாவில் அங்கிங்கு என்று எங்கு பார்த்தாலும் கருப்பு என்றாலே மக்கள் சற்று ஒதுக்கியே வைத்து விடுகிறார்கள்.
ஆனால் கருப்பு என்பது ஒதுக்கத்தக்கதா?!
அந்த காலத்தில் ஒரு சீன யாத்திரிகன் நம் தேசத்திற்கு வந்த போது ஒவ்வொரு பகுதியாக சுற்றி வருகிறான். அப்போது தமிழ் பேசும் பகுதியிலே பெண்கள் நல்லெண்ணையை உடம்பில் தடவிக் கொண்டு வெயிலில் உட்கார்ந்து இருக்கிறார்கள். என்ன காரணம் என்று கேட்கிறார் அப்போதுதான் உடம்பு கருப்பாக பளபளப்பாக அழகாக இருக்கும் என்று சொல்கிறார்கள். மேனியை பராமரிப்பதற்கு நல்லெண்ணையை தடவி வெயிலில் இருந்தால் தோல் சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்கும்.
கருப்பு என்பது நம் பகுதி நிறம் அந்த காலங்களில் ஒரு ஆணோ பெண்ணோ மிக சிவப்பாக இருந்து விட்டால் சந்தேகப்படுவார்கள். ஏனெனில் இங்கு உள்ள மக்களின் இயல்பான நிறம் கருப்பு. அவ்வாறு கருப்பு என்பது ஏற்கத்தக்க நிறமாக தான் இருந்தது. பெயர்கள் கூட கருப்பையா கருப்பு கருப்பாயி கருத்தம்மா என்று கருப்பு என்ற பொருள் கொண்ட பெயர் அதிகமாக இருக்கும். இவ்வளவு ஏன் கிருஷ்ணா என்ற பெயரின் பொருள் என்ன கருப்பு தானே. பௌர்ணமிக்கு பிறகு வரக்கூடிய தேய்பிறை காலத்தை கிருஷ்ண பட்சம் என்று சொல்வார்கள். அதாவது இருட்டு கருப்பை நோக்கி செல்கிறது என்று கிருஷ்ணன் கருப்புதான் காளி கருப்புதான் இவ்வளவு ஏன் நம்மூரில் உள்ள தெய்வ சிலைகள் அத்தனையுமே கருங்கலால் தான் செய்யப்பட்டு இருக்கும். அத்தனை சாமி சிலைகளும் கருப்பு தான். நீங்கள் வெள்ளை கல்லிலேயே செய்திருக்கக் கூடிய சிற்பங்களை பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாக இந்த கருப்புக்கல்லில் செய்யப்பட்ட சிலை அளவுக்கு அழகாக இருக்காது.
கருப்பு என்பது ஏன் எப்படி வெறுக்கத்தக்க விரும்பத் தகாத நிறமாக மாறியது. அதற்கு ஒரு அரசியல் இருக்கிறது. அதை நாம் காண தவறி விடுகிறோம். உலகில் பெரும்பாலான மக்களின் நிறம் கருப்புதான். உலகில் அதிக செல்வங்கள் இயற்கை வளங்கள் நிறைந்து இருக்கிற கண்டங்கள் ஆப்பிரிக்க ஆசிய கண்டங்கள். இங்குள்ள செல்வங்களை சூறையாடுவதற்கு ஐரோப்பா நாட்டை சேர்ந்த ஆதிக்க சக்திகள் படையெடுத்து வந்தார்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆயுதமேந்தியோ அல்லது வணிகம் என்ற பெயரிலோ அல்லது மதத்தை பரப்புகிறோம் என்ற பெயரிலோ ஏதோ ஒரு வகையிலே ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை அடிமைப்படுத்தியவர்கள், தங்களுடைய நிறம் வெளுப்பு கருப்பர்கள் தாழ்வானவர்கள் அடிமையாகவே இருக்க வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை மிக ஆழமாக உருவாக்கி விட்டார்கள். அதற்கு துணை போனவர்கள் அவர்களுக்கு அல்லகைகளாக அடிவருடிகளாக போன நம்ம ஆட்கள் தான். அதனுடைய உச்சபட்சம் நிற வெறியாக இன வெறியாக மாறி கருப்பினத்தவரை கொன்று குவித்தனர். இதை சொல்லும் போது நம் ஆட்களுக்கு ஆப்பிரிக்கர்கள் தானே கருப்பு நாம் இல்லையே நாம் மாநிறம் ஆயிற்று என்றெல்லாம் ஒரு அல்ப சந்தோஷம். நீங்கள் எம்ஜிஆர் போல கலராக இருந்தாலும் மேற்கத்திய நாட்டை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் கருப்பர்கள் தான். நாம் நமக்குள் சற்று வெளிப்பாக இருப்பவர்கள் உயர்வானவர்கள் என்று எண்ணிக் கொண்டு திரிகிறோம். இவ்வளவு ஏன் வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்புகிற அளவுக்கு அடி முட்டாள்களாக மாறிப் போனோம்.
இதில் வியாபார அரசியலும் இருக்கிறது பத்தாண்டுகளாக உலக அழகிகள் மேற்கத்திய நாட்டினரை தாண்டி ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்களை உலக அழகிகளாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன, இவர்கள் அதற்கு முன் அழகாக இல்லையா?!அவர்கள் எப்பொழுதும் அழகாக தான் இருக்கிறார்கள. இடையே இந்த நிறத்தைக் காட்டி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டார்கள். கருப்பு நிறத்தை வெளுப்பாக்குவதற்கு பலவிதமான கிரீம்கள் நிறமிகள் பவுடர்கள் என்று நம் தலையிலே கட்டி, காசாக்கிக் கொள்வதற்கு தான். அது தெரியாத மூடர்களாக நாம் இருக்கிறோம்.
நிறம் என்பது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அறிவியல் படித்து நமக்கு தெரியும். தோலில் இருக்கக்கூடிய நிறமிகள் கூடுதலாக இருந்தால் கருப்பாக இருப்போம் நிறமிகள் குறைவாக இருந்தால் வெளுப்பாக இருப்போம். அவ்வளவுதான்.
இனி சொல்லலாமா... கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர்..
No comments:
Post a Comment