சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 10 June 2026

ஒரு மருந்தாளுனரின் நினைவலைகள்

 ஒரு அலுவலக வளாகத்தில் உள்ள  தென்னை மரத்திலிருந்து நான்கு இளநீர் வெட்டியதற்காக ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் தட்டி போகுமா என்ன? அப்படி ஒரு நிகழ்வு ஒரு மருந்தாளுனருக்கு நிகழ்ந்தது. கேட்க ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இதெல்லாம் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு. 

நான் பணிக்கு சேருகின்ற காலத்திற்கு முன்பு வரை ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வு என்பதே கிடையாது. அப்பொழுதெல்லாம் மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வு என்பது தலைமை மருந்தாளுநர் என்ற பதவியோடு சரி. அந்த பதவி கூட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், சில வட்ட மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மட்டுமே இருந்தது. அந்த ஒரு கட்ட பதவி உயர்வு கூட வெகு சிலருக்கு மட்டுமே கட்டியது. 

ஓன் யூனிட் சிஸ்டம் என்று அழைக்கப்படும் பொதுவான பணி மூப்பு பட்டியல் உருவாக்கப்படும் வரை, மருத்துவ இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள மருந்தாளுனர்களுக்கு மட்டுமே மாவட்ட பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டது. அதாவது பிற இயக்குனரக கட்டுப்பாட்டில் பணிபுரிந்த மருந்தாளுனர்கள் இப்பட்டியலுக்குள் வர மாட்டார்கள். உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கு இரண்டே இரண்டு தலைமை மருந்தாளுநர்கள் பதவி மட்டுமே இருந்தது. அதுவும் மாவட்ட மருத்துவ அலுவலர் கீழ் பணி புரியும் மருந்தாளுனர்களின் பணிமூப்பு பட்டியலின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டார்கள். 

அவ்வாறிருக்கையில் மாவட்ட மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு மருந்தகத்தில் இருந்த மருந்தாளுனர் ஒருவர் மாவட்ட பணிமூப்பு பட்டியலில் முதலாவதாக இருந்தார். அவர் பணிபுரிந்த மருந்தகத்தில் தென்னை மரம் இரண்டு இருந்தது. அப்போது யாரோ ஒரு அதிகாரி வந்த சமயத்தில் அங்கிருந்த மருந்தாளுநர் சக பணியாளரை கூப்பிட்டு மரத்திலிருந்து கொஞ்சம் இளநீர் வெட்டி போட சொல்லி இருக்கிறார். அதை அதிகாரிக்கு வெட்டி கொடுத்து இருக்கிறார்கள். மிச்சம் இருந்ததை அங்குள்ள மருத்துவர் மற்றும் பணியாளர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள். அந்த மருந்தாளுனர் மிகவும் நேர்மையானவர், சற்று கெடுபடியானவர். அவ்வளவுதான். எவனோ ஒருத்தன் மாவட்ட மருத்துவ அலுவலருக்கு   மருந்தகத்தில் இருந்த தென்னை மரத்தில் இருந்து இளநீரை எல்லாம் வெட்டி மருந்தாளுனர் விற்று விட்டார் என்று மொட்டை கடுதாசி போட்டுவிட்டான். இவரோ நேர்மையானவர்  யாருக்கும் தலைவணங்காதவர். கேட்க வேண்டுமா என்ன? உடனே மாவட்ட அலுவலகத்தில் இருந்து அவருக்கு மெமோ எனும் குற்றகுறிப்பாணை பறந்தது. அந்த நேரத்தில் தலைமை மருந்தாளுநர் பதவி இடம் காலியாகவே, பணி மூப்பு பட்டியலின் அடிப்படையில் அவர்தான் தலைமை மருந்தாளுநராக நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர் மீது உள்ள குற்ற குறிப்பாணையை காட்டி அவருக்கு  அடுத்த நிலையில் இருந்த மருந்தாளுனருக்கு அப்பதவி வழங்கப்பட்டது.

 அப்பொழுதெல்லாம் இது போன்ற அநீதிக்கு எதிர்த்து பெரிய அளவுக்கு போராட முடியாது. அதைவிட முக்கியமானது. அந்த காலத்தில் பதவி உயர்வின் போது பணியாளர் பற்றிய ரகசிய குறிப்பேடு முறை நடைமுறையில் இருந்தது. அதில் அதிகாரிக்கு யார் மீதாவது கடுப்போ கோபமோ இருந்தால் ரகசிய குறிப்பேட்டில் அவரைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்து விடுவார், பதவி உயர்வு கிடைக்காது. அன்றைக்கு ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுக்க இருந்த எல்லா துறைகளிலும் இருந்த நிலை அதுதான். கலைஞர் மு கருணாநிதி அவர்களுடைய ஆட்சி காலத்தில் ரகசிய குறிப்பேடு முறை ஒழிக்கப்பட்டதால் எல்லோருக்கும் பதவி உயர்வு என்பது சாத்தியமானது. அதனால் பெரும்பாலும் அதிகாரிகளை எதிர்த்து யாரும் மூச்சு விட கூட தயங்குவார்கள்.

 இதைவிட வேடிக்கையான நிகழ்ச்சி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு புதிதாக உருவாக்கப்பட்ட கேன்சர் மருத்துவமனையில் சில மருந்தாளுனர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒரு மருந்தாளுனர் முதல் நாள் பணியில் சேர்ந்து இருக்கிறார். மற்றவர்கள் மறுநாள், அல்லது சற்று பின்னர் சேர்ந்திருக்கிறார்கள். அங்கிருந்து தலைமை மருந்தாளுநர் பதவிக்கு நிலைய பணி மூப்பு பட்டியலின் அடிப்படையில் முதல் நாள் பணிக்கு சேர்ந்தவர் தலைமை மருந்தாளுநராக நியமிக்கப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிற்காலத்தில் சங்கங்கள் போராடி, மாநில அளவிலான ஒரே பணி மூப்பு பட்டியல் அதாவது ஒன் யூனிட் சிஸ்டம் என்று உருவாக்கப்பட்டு, மாநில அளவில் உளள பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் அனைத்து பிரிவு மருந்தாளுனர்களுக்கும் தலைமை மருந்தாளுநராக பதவி உயர்வு பெற வாய்ப்பு கிட்டியது. 

1980ஆம் ஆண்டு மருந்தாளுனர்களது வேலை நிறுத்தம் நடைபெற்ற போது புதிதாக மருந்து கிடங்கு காப்பாளர் பதவி இடம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு தான் இரண்டு கட்ட பதவி உயர்வு என்பது அதாவது தலைமை மருந்தாளுநர், மருந்து கிடங்கு அலுவலர் என்பது நடைமுறைக்கு வந்தது. அப்போதும் கூட ஒட்டுமொத்த மருந்தாளுநர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே அந்த பதவி உயர்வை காண முடிந்தது.

 இன்றும் கூட ஏராளமான மருந்தாளுநர்கள் எந்த பணியில் சேர்ந்தார்களோ அதே பணியிலேயே பணி ஓய்வு பெறக்கூடிய அவல நிலை நீடிக்கிறது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், நான் பணிக்கு சேர்ந்த போது அடுத்த கட்ட நிலையையாவது காண்பேனா என்பது கூட எனக்கு தெரியாது. அதிர்ஷ்டவசமாக 40 ஆண்டுகள் பணிபுரிந்தார், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியில் சேர்ந்த நான் பணி ஓய்வு பெறும்போது மருந்து கிடங்கு அலுவலராக  பணிஓய்வு பெற்றேன். அதுவும் பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் இரண்டு மருந்து கிடங்கு அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதால் மாநில தலைமை இடமான பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் மருந்து கிடங்கு அலுவலராக பணியில் இருந்து ஓய்வு பெறக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

 ஒருவேளை வேறு துறைகளில் ஒரு இளநிலை உதவியாளராக பணிகளில் சேர்ந்திருந்தால், உதாரணமாக வருவாய் துறையில் சேர்ந்து இருந்தால் மாவட்ட வருவாய் அலுவலர் நிலைக்கு கூட உயர்ந்திருக்க முடியும், அல்லது பல்வேறு துறைகளில் துணை இணை இயக்குனர் போன்ற பதவிகள் எல்லாம் கண்டிருக்க முடியும்.

 வேறு தொழில்நுட்பப் பணிகள் சேர்ந்திருந்தால் கூட அதாவது இன்ஜினியரிங் டிப்ளமோ சேர்ந்து இருந்தால் கூட இவ்வளவு நீண்டகால பணிக்கு அரசின் செலவிலேயே மேல்படிப்பையும் கண்டிருக்கலாம். அந்த துறையில் உச்சபட்ச அலுவலர் பதவியாக கூட இருக்கலாம். . 


அன்றைக்கு தமிழகமெங்கும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த தொழில்நுட்பக் கல்விக்கு அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று படிக்கச் சென்று, மிக நீண்ட காலம் பணிபுரிந்து கூட மிக உயரிய நிலையை அடைய முடியவில்லை என்கிற ஆதங்கம் தான்.இது விரக்தியிலான வெளிப்பாடு அல்ல . மற்றவர்களின் மீதான பொறாமை அல்ல மாறாக உண்மை. 

2 comments:

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...