சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 17 June 2026

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள்

 அரசு பணிகளிலேயே மிகவும் கடினமானது மக்களுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளே. ஏனென்றால் மக்களை திருப்தி செய்ய இயலாவிடில் நேரடி வெறுப்பினை சம்பாதிக்க நேரிடும். பல்வேறு துறைகள் மக்களிடம் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்காது. சேவைகள் தொடர்பான பணிகள் எப்பொழுதுமே பிரச்சனைக்குரியதுதான் . சில துறைகள் கையூட்டுகள் அதிகமாக புழங்கப்படுவதாக மக்களிடையே கருத்து நிலவுகிறது. இந்த வார்த்தையை மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்துவதற்கு காரணம் உனக்கு தெரியுமா நீ நிரூபிக்க முடியுமா என்று கேட்டு விடுவார்கள் . அதனால் தான் பொதுவாக சொல்லுகிறேன்.

  பல துறைகளில் கையூட்டுகளையும் கொடுத்துவிட்டு கைகட்டி நிற்பதாக மக்கள் புலம்புவார்கள் .ஆனால் அவர்களும் நேரடியாக மோத மாட்டார்கள் . ஏனென்றால் அவர்களுக்கு காரியம் ஆக வேண்டும் . ஆனால் அதே நேரம் சேவைகள் பிரிவான மருத்துவத்துறையை பொருத்தமட்டிலும் கையூட்டுகளுக்கு வேலை இல்லை. யாராவது ஆயிரத்தில் ஒருவர் வாங்கினால் அது வேறு விஷயம் . ஆனால் பெரும்பாலும் யாரும் வாங்க மாட்டார்கள் . ஆனால் நேரடியாக மக்களுக்கான சேவைகளை செய்கிற துறை மருத்துவ துறை. அதிலும் நோய்வாய்ப்பட்டு ஒரு கடினமான மன நிலையில் வருபவர்கள். எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள் . அந்த கோபத்தை பணியாளர்களிடம் தான் காட்டுவார்கள் .


ஒரு நோயாளி வெளிப்புறச் சீட்டு வாங்கி , மருத்துவரை சந்தித்து , பல்வேறு துறைகளை சந்தித்து , மிக நீண்ட வரிசைகளில் நின்று அலுத்து போய் இறுதியாக வந்து சேருமிடம் மருந்து வழங்கும் இடம் மருந்தகம் தான் .

போதுமான அளவுக்கு மருந்தாளுநர் இல்லாத நிலையில், அதிக நோயாளிகளை சந்திக்க கூடிய கடைசி ஆசாமி மருந்தாளுனர்தான் . அவர் பாராட்டுகள் வாங்குகிறார்களோ இல்லையோ வசவு களுக்கு பஞ்சமிருக்காது. இதுவரை ஏற்பட்ட தாமதம் அல்லது உடல் உபாதை அல்லது ஏதேனும் மருந்து இல்லை என்றாலோ நோயாளிகள் கோபத்தை கொட்டும் இடம் மருந்தகம் தான்.எல்லா வசவுகளையும் வாங்கிக் கொண்டு தனது பணியை செய்பவர்தான் மருந்தாளுனர்.. 


 நான் பல்வேறு துறைகளில் வேலை செய்திருந்தாலும் சற்று வித்தியாசமான அல்லது கசப்பான அனுபவங்களை சந்தித்த இடம் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் தான். நான் மட்டுமல்ல அனேகமாக எல்லாம் மருந்தாளுநர்களும் இந்த பாடலை தான் பாடுவார்கள். அங்கு வரக்கூடிய நோயாளிகள் மற்றவர்களை விட சற்று வித்தியாசமானவர்கள். ஏனென்றால் மருத்துவமனைகளில் மொத்தமும் இலவச சிகிச்சை தான் . ஆனால் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவத்தை பொருத்த மட்டிலும் அவர்கள் சிறிதளவாவது அவர்களது சம்பளத்திலிருந்து பணம் செலுத்துவதால் அங்கு பணிபுரியக்கூடிய அத்தனை பேருமே அவர்களுடைய காசில்தான் சம்பளம் வாங்குவதாக நினைத்துக் கொண்டு தாறுமாறாக பேசுவார்கள். மற்ற இடங்களில் நோயாளிகள் நேரடியாக தங்களது கசப்புணர்வை அல்லது வெறுப்பை பெரிதாக காட்ட மாட்டார்கள் அல்லது குறைந்த அளவே காட்டுவார்கள் . ஆனால் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் நோயாளிகள் நேரடியாகவே பணியாளர்களோடு மோதுவார்கள் .

நான் ஒரு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் சேர்ந்த நேரத்தில், அங்குள்ள ஒரு பெண் பணியாளர் கண்ணை கசக்கி கொண்டிருந்தார். விசாரித்தபோது ஒரு நோயாளி என்னுடைய காசில் தான் விதவிதமாக சேலை ,கட்டிக்கொண்டு வருகிறாய் என்று கேவலமாக திட்டி விட்டு சென்று விட்டார். இதை கேள்விப்பட்டவுடன் எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது . யார் அவன் என்று விசாரித்தேன் அங்குள்ளவர்கள் இதெல்லாம் இங்கு சகஜம் தான் சார் கண்டு கொள்ளாதீர்கள் என்று சொன்னார்கள் . அந்த நோயாளியினுடைய நண்பர் என்று ஒருவர் அங்கு வந்திருந்தார் . அவரோடு இதைப் பற்றி பேசும்போது வாக்குவாதம் வந்துவிட்டது .

நான் சொன்னேன் உண்மைதான் உங்களுடைய காசுல தான் நாங்கள் ஆடை உடுத்திக் கொண்டிருக்கிறோம் நான் கூட மருந்தகத்தில் பணிக்கு வந்து சேர்வதற்காக நிர்வாணமாக வந்தேன் . இங்குள்ள நோயாளிகள் தங்களது மருந்தகத்திற்கு வந்து சேர்ந்து இருக்கிறார் என்று கருதி எனக்கு ஆடைகள் எல்லாம் வாங்கி கொடுத்தார்கள் அதன் பிறகு தான் நான் இங்கு ஆடையோடு வந்து நிற்கிறேன் என்று கிண்டலாக சொன்னேன்.

 ஒரு என்ன சார் இப்படி பேசுறீங்க என்றார் பிறகு என்ன அர்த்தமில்லாமல் பேசினால் வேறு எப்படி பேசுவது என்று சொல் என்று. நான் இந்த மருந்தகத்திலிருந்துவேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் இதே சம்பளத்தோடு இதே கௌரவத்தோடு தான் அங்கும் போய் சேருவேன் . இங்கு பணி புரியக்கூடிய அத்தனை பேருமே அரசு மாற்றுப் பணியில் இத்துறைக்கு நியமித்திருப்பதால் தான் வேலைக்கு வந்திருக்கிறார்கள் . இந்த இடம் விட்டால் சந்தை மடம் என்று இதே இதே சம்பளத்தோடு இதே கௌரவத்தோடு இதே பணிமூப்போடு நாங்கள் சென்று விடுவோம் .ஆனால் நீ வேலையை விட்டுப் போனால் இன்னொரு இடத்திற்கு எவனிடமாக தொங்கித்தான் வேலைக்கு போக வேண்டும். பணியில்திருப்தி இல்லையென்றாலோ அல்லது உங்கள் தேவை பூர்த்தி ஆகவில்லை என்றாலும் அதைக் கேட்கின்ற முறையில் தான் கேட்க வேண்டும் அடுத்தவர்கள் மனமும் நோகுமாறு ஆபாசமாக பேச கூடாது என்றேன் 

அவர் மன்னிப்பு கேட்டுவிட்டுபோய்விட்டார்.

 ஆனால் அங்கு பணி புரிந்த பிறகு எனக்கு கிடைத்த அனுபவம் சிறப்பாக பணிபுரிபவர்களை தங்கமாக கொண்டாடுவார்கள்.

 அந்த அனுபவமும் எனக்கு கிடைத்தது ஒரு மிகவும் வயதான ஒரு நோயாளி ஒருவர் அங்கு அடிக்கடி வருவார் அவரைக் கண்டால் நம்மாட்களுக்கு அலர்ஜி .நான் அவரை நன்றாகவே வரவேற்று மருந்துகள் கொடுத்து அனுப்புவேன் . நீண்ட நாள் கழித்து நான் மாறுதலில் செல்வதாக சொன்னபோது அவர் என் தலைமீது கை வைத்து என்னை வாழ்த்தி சொன்னார்"You are always kind enough to the patients, especially elders. I wholet hearted bless you ". "


இதுபோல நோயாளிகளிடம் வாழ்த்து பெறுவது மிக உயர்ந்ததாக கருதுகிறேன். ஏனெனில் இதுவரை நான் அரசிடம் இருந்து பணியை பாராட்டி ஒரு நற்சான்றிதழ் கூட பெற்றதில்லை. 

1 comment:

  1. காமராஜ்Wednesday, June 17, 2026

    மிக அரிதானா உரை

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...