மாற்றத்தை விரும்புவது எளிது. ஆனால் அதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம். யார் மாற்றத்தை பெரிதும் பேசுகிறார்களோ, அதை நடைமுறைப்படுத்தும் போது அவர்களே அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் மாற்றம் தேவை.... மாற்றம் தேவை என்று.
எங்கிருந்து மாற்றம் தேவை? எதில் மாற்றம் தேவை என்ற தெளிவே இல்லாதவர்கள் சொல்லுகின்ற வார்த்தைதான் மாற்றம் தேவை.
அன்றாட வாழ்க்கையில் நம்மை பாதித்துக் கொண்டிருக்கக் கூடிய சுற்றுச்சூழலால் இந்த உலகிற்கு ஏற்படும் விளைவுகளை மாற்றக்கூடிய மாற்றம். பசுமை மாற்றம்...
காலம் காலமாக சமூகத்தில் இருந்து வரும் ஜாதிய, மத, இன ரீதியான பாகுபாடு, பெண்ணடிமைத்தனம், மூடப்பழக்கவழக்கங்கள் போன்றவறறின் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து விடுபடும் தேவையான மாற்றங்கள்... .
இது கட்சி பேதமின்றி, நாடு பேதமின்றி, கண்டம் பேதமின்றி ஒட்டுமொத்த உலகமே காண வேண்டிய மாற்றம்.... ..
ஆனால் முடியுமா என்ன?!
ஒவ்வொருவரும் ஒரு பசுமையான எதிர்காலத்தை விரும்புபவர்கள்... தனிப்பட்ட மாற்றம் என்ற வடிவில் அதற்கான விலை வரும் வரை... அதைப் பேசுவார்கள்..
நாம் தூய்மையான காற்றை விரும்புகிறோம்—ஆனால் குறைவான வாகனப் பயணங்களை அல்ல.
அதிக பட்ச பயனங்கள், தேவையற்ற பயனங்கள்... ஆடம்பர பயனகள். தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் இருந்து அலுவலக தேவைகளிலிருந்து கட்சி, சமூகப் பணிகள் என எல்லாவற்றிலும் எல்லோரும் செய்யும் பயணங்கள் அத்தியாவசிய பயணங்களா? தவிர்க்க இயலாத பயணங்களா? எண்ணிப்பாருங்கள்! அத்தனைக்கும் விலை கொடுத்துக் கொண்டிருப்பது இந்த பூவுலகம் தான்.
நாம் குறைவான நெகிழியை விரும்புகிறோம்—ஆனால் குறைவான வசதியை அல்ல. நெகிழியை பயன்படுத்தாத துறை உண்டா எல்லாவற்றிற்கும் நெகிழி அவசியம் தானா? நெகிழி இல்லாத பயன்பாட்டின் மூலம் நமது வசதிகளை குறைத்துக் கொள்ள முடியுமா? குறைத்து தான் கொள்வோமா ? எதில் இல்லை நெகிழி... தேவையற்ற இடங்களில், தேவையற்ற நெகிழி பொருட்களை துறப்போமா?!!
நாம் அறநெறி சார்ந்த ஆடையை விரும்புகிறோம்—ஆனால் குறைவான “தள்ளுபடி” பைகளை அல்ல. ஜவுளி கடைகளில் ஆடைகள் வாங்கினால் தள்ளுபடி பைகள் வாங்கியே தீர வேண்டுமா? ஒருவேளை அவன் கொடுக்கவில்லை என்றாலும் சண்டை போட்டாவது வாங்குவதை எப்போது நிறுத்தப் போகிறோம்?! நாம் வாங்கும் ஆடையை விட தள்ளுபடி பைகள் அவ்வளவு முக்கியமானதா என்ன?!
நாம் காலநிலை நடவடிக்கையை விரும்புகிறோம்—ஆனால் நமது நுகர்வை மாற்றாமல்,நம்மை பீடித்திருக்கும் நுகர்வு கலாச்சாரத்தினை ஒழிக்காத வரை, நுகர்வு கலாச்சாரத்தை விலக்கி வைக்காத வரை காலநிலை மாற்றம் என்பது சாத்தியமே இல்லை என்பதை அறிவோமா ?!
நிச்சயமாக, கூடுதல் உற்பத்தி மற்றும் மாசுபாட்டின் மீது கட்டப்பட்ட ஒரு அமைப்பை தனிநபர்களால் மட்டும் சரிசெய்ய முடியாது. அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் உண்மையான கட்டமைப்பு மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.
சமூகத்தில் புரையோடியிருக்கும் பிற்போக்குத்தனங்கள், சாதிய ஒடுக்கு முறைகள், மதப் பிரிவினைகள், பெண் அடிமைத்தனம் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற ஏராளமான மகான்களும் மகாவீரர்களும் புத்தனிலிருந்து பெரியார் வரை போராடி வந்திருக்கிறார்கள். ஓரளவுதான் மாற்றம் வந்திருக்கிறது. முழுமையான மாற்றம் அடைந்தால் தான் சமூகம் முன்னுக்கு வர முடியும்.
ஆனால், நாம் மற்றவர்களிடமிருந்து எல்லாவற்றையும் கோரி, நம்மிடமிருந்து எதையும் கோராதபோது, மாற்றமும் கடினமாகிறது.
மாற்றத்தை விரும்புவது எளிது.
அதன் ஒரு பகுதியாக மாறுவதே உண்மையான சோதனை.
இந்த மாற்றத்தையே செய்ய முடியாதபோது, எங்கிருந்து சமூக மாற்றம்? அரசியல் மாற்றம்?? முன்னேற்றம்?!!
மாற்றத்தை விரும்புவது எளிது.. அடைவது கடினம்.... ஒவ்வொருவரிடமிருந்தும் ஏன் நம்மிடம் இருந்தே துவங்குவோம் மாற்றத்தை...
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்'"

மாற்றத்தை விரும்புவது எளிது! அதன் ஒரு பகுதியாக மாறுவதே உண்மையான சோதனை! ....அருமை அருமை
ReplyDelete