சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 20 July 2026

பற்றற்றான் யார்?!

சமீபத்தில் நட்பு தமிழ்வட்ட இணையவழி கூட்டத்தில் சில குழந்தைகள் திருக்குறளை ஒப்பிக்கும்போது துறவறம் அதிகாரத்தில் உள்ள இக்குறளைக் கூறி அதன் விளக்கத்தைப் படித்ததை கேட்டுக்கொண்டிருந்தேன். 

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப

பற்றுக பற்று விடற்கு."

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும் எனப் பொருள் படித்துக் கொண்டிருந்தார்கள்.நிறுவன தலைவர் புலவர் நா நா ஆறுமுகம் ஐயா அவர்கள் பற்றற்றான் பற்றிய புதிய, சிறந்ததோர் விளக்கம் அளித்தார். 

அதைக்கேட்டவுடன் அக்குறள் பற்றிய சிந்தனை விரிந்தது.உலக மக்களின் வாழ்க்கை நெறியை போதித்த திருவள்ளுவர் மக்களை சன்னியாசி ஆவதற்காக இக்குறளை எழுதி இருப்பாரா? பொதுவாக எல்லோருமே துறவு துறவறம் என்ற தலைப்பைப் பற்றி பேசும்போது துறவியின் இலக்கணம் பற்றி கூறுகிறார்கள். 

உண்மையில் துறவு பற்றி சமண இலக்கியமோ திருவள்ளுவர் பொருளை, உலகவாழ்க்கையை துறந்து விட்டு சன்னியாசம் வாங்கி வாழ்வது என்ற அடிப்படையில் கூறியதில்லை. நிலையாமை பற்றி குறிப்பிட்டு சமூகம் ஒழுக்கமான நெறியான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்நெறியை போதித்தார்கள்.ஆனால் சனாதன வாதிகள் அதே நிலையாமையை குறிப்பிட்டு இறைவனை சரணடைந்தால் போதும் என்று சன்னியாசத்தை போதித்து திருத்தலாக கூறினார்கள் இவ்வாறு திருத்தி கூறியதன் விளைவே துறவு என்பதன் பொருள் தவறுதலாகவே மாறிவிட்டது. துறத்தல் என்பது அதன் மீதான ஆசையை சார்ந்திருத்தலை விட்டு ஒழிதல் பற்றியது. அதாவது அந்த பொருள்களுக்கு அடிமையாகாமல் இருத்தல், இன்றைய வார்த்தைகளில் சொல்வதானால் நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகதிருத்தலையே கூறியுள்ளார்கள்.

அதுவும் நீட்டலும் அழித்தலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்து விடின் என்று கூறிய வள்ளுவர சாதாரண மக்களை சன்னியாசம் பெற்றுக் கொள்வதில் வழியை காட்டுவார் ஆகப் பற்று என்பதன் ஒரு உள் அர்த்தம் ஒன்றை வைத்து தான் அவர் பாடி இருப்பார் உதாரணமாக ஒரு கொடியை எடுத்துக் கொண்டால் அது ஏதேனும் ஒன்று மீது பற்றி வளர்ந்து செல்லும் அது பற்றி சொல்லும் கொம்பினை எடுத்து விட்டால் வாடி வதங்கி மடிந்தே கூட போய்விடும் எனவே ஒரு பொருள் மீது ஒரு பொருளையோ அல்லது ஏதேனும் ஒன்றையோ பற்றி கொண்டு நின்றால் தீமை தரும் என்ற நோக்கில் தான் இவ்வாறு எழுதி இருப்பார் அல்லவா! 

"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல்" என்ற குறளில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்

. ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை எனப் பொருளுரைக்கிறார் மு. வரதராசன். 

எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை என்றும் கூறுவர். 

எல்லாப் பொருட்களையும் விட்டொழித்தால் என்பது பொருளில்லை.அதன் மீது சார்ந்து, பற்றுக்கொள்ளாமலிருத்தலேயாகும். 

"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்" என்கிறார் பத்திரகிரியார் எனும் உலகை விட்டொழித்தல் சன்னியாசி. 

 அதாவது நான்' என்னும் என் உணர்வை அடக்கிக் கொண்டு,காணுதல், கேட்டல்,நகர்தல், சுவைத்தல், தொடுதல், உணர்வுகளை அறுத்து வேக வைத்துச் சுட்டு வைத்துக்கொண்டு, விழித்துக்கொண்டே தூங்குவது எனக்குச் சுகம். இந்தச் சுகத்தை நான் எப்போது பெறுவேன்? என்கிறார். இது உலகை வெறுத்த சந்நியாசியின் கூற்று. 

அதையே பாரதி ஐந்து புலனை அடக்கி அரசாண்டு மதியை பழகி தெளிந்து நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தின் செல்ல விடும் வகை கண்டோம் என்கிறார். அதாவது ஐந்து புலன்களை அடக்கி நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க கூறுகிறாரே தவிர மொத்தமாக அறுத்தெரிய சொல்லவில்லை. 

இதுதான் உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு துன்பப்படாமலிருக்கும் வழி, விட்டோடிப்போகும் வழியில்ல...

இது உலக மக்களை நேசிக்கிறேன் கூற்று. 

சரி. பற்றற்றான் என்ற குறளுக்கு வருவோம். பற்றற்றான் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்றால் குடும்ப தலைவனோ, நாட்டின் தலைவனோ யாராக இருந்தாலும் தான், தனக்கு என்று பொருளை சேர்க்காமல் தான் சார்ந்து, அல்லது தன்னை சார்ந்து இருக்க கூடிய மக்களுக்கு நன்மை செய்ததற்காக தனது சுகத்துக்கங்களை, ஆசைகளை குறைத்துக் கொண்டு அல்லது கட்டுப்படுத்திக் கொண்டு பிறருக்கு உதவி செய்கிறவன் அல்லது வழிகாட்டுகிறார எவனோ அவனைத்தான் பற்றற்றான் என்று கூறுகிறார்.

ஒரு குடும்பத் தலைவன் ஆடம்பரமாக தனக்கு உடை உடுத்திக் கொள்வதோ அல்லது சுகங்களை அனுபவித்து கொண்டு குடும்பத்தாருக்கு தேவைகளை பூர்த்தி செய்யாதவன் நல்ல குடும்ப தலைவனாக இருக்க முடியாது. தன்னுடைய தேவைகளை, ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டு தனது குடும்பத்தாருடைய தேவைகளை, ஆசைகளை பூர்த்தி செய்பவனே பற்றற்றவன் ஆவான். 

அதேபோல ஒரு நாட்டின் தலைவரும் தான் ஆடம்பரமாக வாழ்வதை விட்டு விட்டு எளிய வாழ்க்கை வாழ்ந்து, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்பவனே பற்றற்றான் ஆவார். ஆடம்பரமான ஆடை அணிந்து கொண்டு, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, ஊருவகமெல்லாம் சுற்றி வந்து உலக சுகங்களை அனுபவித்துக் கொண்டு, வாய் பேச்சுக்கு மட்டும் வரிக்கு வரி எளிய குடும்பத்தில் பிறந்தவன் நான் அல்லது நான் எனது உச்சபட்ச வருமானத்தை விட்டு விட்டு உங்களுக்காக சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று வாய்ச்சவடால் கூறுகிறவன் ஒருபோதும் பற்றற்றவனாக இருக்கவே முடியாது.

ஒரு ஞானி கூறுவார் "ஆட்சியாளன் எளிமையாக, வறுமையாக வாழ்ந்தால், மக்கள் வளமையோடு வாழ்வார்கள். ஆட்சியாளன் ஆடம்பரமாக வாழ்ந்தால் மக்கள் வறுமையில் தான் வாழ்வார்கள், வாடுவார்கள்". 

யதா ராஜா, ததா பிரஜா என்பார்கள். அதாவது மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். 

எனவே ஆட்சியாளன், குழு தலைவனோ, குடும்ப தலைவனோ ஆசைகளை விட்டோழித்து பற்றற்றவனாக, தன்னைச் சார்ந்திருக்க கூடிய மக்களுக்கு உழைப்பவனாக இருந்தால் மக்களும் அவனைப் பார்த்து தேவையற்ற ஆசைகளை விட்டு ஒழித்து வாழ்வார்கள். அது சமூகம் உயர்வதற்கு வழியாகும் என்ற பொருளில் தான் திருவள்ளுவர் இக்குறளை கூறியிருப்பார். 





No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...