அமைதியான மனிதன் வன்முறையையும் அறிந்திருக்க வேண்டும், இல்லையேல் அவனது அமைதி, அதை அச்சுறுத்தும் எவருக்கே சொந்தமாகிவிடும்.
- மியாமோட்டோ முசாஷி
எங்கள் ஊரில் ஒரு மூத்த குடிமகன் இருந்தார். மூத்தகுடி மகன் என்றால் வயதில் அல்ல, எப்பொழுது பார்த்தாலும் தண்ணி அடித்துக் கொண்டிருப்பார். அதாவது மிக நீண்ட காலமாக தண்ணி அடிப்பவர், அவ்வளவுதான்.
அதோடு கொஞ்சம் மரை கழண்டவர்..
மரை கழண்டதால் முழு பைத்தியம் என்று சொல்ல முடியாது
எப்போது என்ன பேசுவார் என்று தெரியாது. அவர் மிக நன்றாக மரியாதையாக பேசுவார். பேசிய பத்ததாவது நிமிடத்தில் அதற்கு ஏறக்குறைய ஒரு மாற்றான கருத்தை சொல்லுவார். சிறு குழந்தைக்கு கூட மரியாதை கொடுப்பார். அதே நேரம் பெரிய ஆளை கேவலமாக பேசுவார். பிறகு மிக மரியாதையாக மாறி பேசுவார். குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்பதை போல் இருக்கும் அவரது பேச்சும் நடத்தையும்.. ஒன்றும் சரி வராத நிலையில் ஊராட்கள் எல்லாம் சேர்ந்து அவரது குடும்பத்தாரிடம் சொல்லி மனநிலை வைத்தியம் பார்க்க அனுப்பி வைத்தனர். அவருக்கு வைத்தியம் பார்த்த வைத்தியரையே குழப்பி விட்டார். அப்படி பல ஆசாமிகள் ஊரில் உண்டு.
இம்மாதிரி ஒரு ஆசாமி நம் வீட்டிலோ ஊரிலோ இருந்தால் தொலைந்து போகிறது என்று சகித்துக் கொள்ளலாம்.
துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு ஆசாமி ஒரு நாட்டின் அதிபராக, அதுவும் அமெரிக்கா போன்ற ஒரு தேசத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் உலகம் என்ன தான் செய்து தொலைப்பது.
மற்ற நாட்டிலாவது பாராளுமன்றம் போன்ற இடத்தில் வைத்து கட்டுப்படுத்தலாம்.
அமெரிக்காவில் அதுவும் சாத்தியம் இல்லை. ஒருமுறை தேர்ந்தெடுத்துவிட்டால், நான்காண்டுகள் தண்ணீர் தெளித்து விட்டமாதிரி தான்
. அவர்கள் நாட்டாலே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபை மாதிரி ஒரு கையாலாகாத பொம்மை அமைப்பால் என்ன செய்ய முடியும்.
உதாரனத்துக்கு பாருங்கள்.
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தன் நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு இறக்குமதி வரியை உலக வர்த்தக மைய வழிகாட்டுதல்களை எல்லாம் மீறிவிட்டு தன்னிச்சையாக ஒரு நாளைக்கு ஒரு வரி விகிதமாக அறிவிக்கிறார். பிறகு அவரே ரத்து செய்கிறார்.
வெனிசுலா நாட்டின் ஆட்சித்தலைவரை போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று சொல்லி அடாவடித்தனமாக கைது செய்து சிறையில் அடைத்து விட்டு, அது தொடர்பான நடவடிக்கை ஏதும் இல்லாமல், அந்நாட்டின் எண்ணெய் முழுக்க தனக்கே சொந்தம் என களவாடியுள்ளார். இந்த உலகமே மறந்து விட்டது.
கியூபா என்ற நாட்டை கைப்பற்றப்போவதாக எச்சரிக்கிறார்.
கிரீன்லாந்து நாட்டை என்னிடமே ஒப்படைத்துவிடுங்கள் என்று தனது நேட்டோ அமைப்பையே மிரட்டி வருகிறார்.
அனுஆயுதம் தயாரிக்கப்போகிறார்கள் என்று கூறிக்கொண்டு, அதுவும் அனுகுண்டினை கையில் வைத்துக்கொண்டு, அனுஆயுதக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு கட்டுப்படாத இஸ்ரேலை சேர்த்துக்கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்.
ஈரான் நாட்டு உச்ச பட்ச தலைவரை படுகொலை செய்து விட்டு, இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது குண்டு வீச்சு நடத்தலாம் என்று நினைக்கிறேன் என பிதற்றுகிற நபரின் மனநிலை பிறந்தவர் என்று தானே சொல்ல முடியும்.
அந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்பை அழித்து விடுவேன், மூவாயிரம் ஆண்டு கலாசாரத்தை அடையாளம் இல்லாமல் அழித்து விடுவேன் என்று மிரட்டினார்.
என்னை ஈரான் நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அதிபராக பொறுப்பேற்க சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று புருடா விடுகிறார். பிறகு எல்லாம் முடிந்து போய்விட்டது, எல்லாம் சமாதானம் ஆகிவிட்டோம், சமாதான ஒப்பந்தம் போட்டு விட்டோம் இனிமேல் எதுவும் நடக்காது என்கிறார்.
மறுநாளே அதெல்லாம் சரியா வராது சமாதான ஒப்பந்தம் விலக்கப்பட்டு விட்டது என்கிறார்.
இம்மாதிரி மாறி மாறி பேசக்கூடிய ஒரு நபரை யார் தான் என்ன செய்ய முடியும். ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. அவரது குடும்பத்தார் அவரது மனநிலை சரியில்லை என்று நல்ல மனநல மருத்துவரிடம் அவருக்கு சிகிச்சை அளித்தால் வேண்டுமானால் வாய்ப்பு இருக்கிறது.

No comments:
Post a Comment